இளங்கதிர் எழவும் இறைகொளக் கருதி
இணைந்தெழும் புள்ளினம் போல
வளமுடன் வாழ மிகுபொருள் நாடி
வையகம் சுற்றிடும் நண்பீர்!
உளங்கொள வேண்டி உமக்கிது புகன்றேன்!
உணருமின் அன்புடன்! நீர்தாம்
விளங்குறும் ஊர்கள் எங்கணுய்ந் தாலும்
வியன்றமிழ் மறக்கலிர் என்றும்!
மலர்தொறும் நாடி மலிவுற வுண்டு
மகிழ்வுறும் வண்டினம் போலக்
கலைமொழிப் பண்பின் பலதிறங் கண்டு
களிபெற வலம்வரு பெரியீர்!
நலங்கொள வேண்டி நவின்றனன்! நீர்தாம்
நாடிய நாடெது வெனினும்
தலைமுறை யாகப் புகழுற வாழ்ந்த
தமிழ்க்கலை மறக்கலிர் என்றும்!
புற்றரை மேவிப் பொழுதுடன் இல்லம்
புகுந்திடும் ஆவினம் போலக்
கற்றிட வெண்ணிக் கடல்கடந் தேகிக்
கலைபல பயின்றபின் உவகை
உற்றிட மீளும் உறுதவ மாண்பீர்!
உமக்கிது சொற்றனன்! உள்ளம்
பற்றுமின்! உலகிற் பழையநம் தமிழ்ப்பண்
பாடதை மறக்கலிர் என்றும்!
ஈன்றவள் சிறக்க இடர்ப்பட எங்கோ
ஏகிடும் மக்களைப் போல
ஆன்றநன் பனூல்கள் ஆயுந ராக
அரசியல் தூதுவ ராகத்
தோன்றிய ஊர்கள் யாவையு நாடுந்
தூயவ ரேமனங் கொள்வீர்!
தோன்றிய நாட்குச் சான்றில தாய
தமிழகம் மறக்கலிர் என்றும்!