பித்தனாய் ஆனேன் பூந்தமிழே – நெறி
பிறழாத கவிதைதா பொற்சிமிழே -– உன்னில்
மொத்தமாய் ஆவி உடல்
மோகனமாய்த் தந்த பின்னே
படித்தேன் – கவி – வடித்தேன்
நற்றிணையில் தமிழ் மணக்கும் பாராய் – காதல்
நர்த்தனங்கள் நிலை கொள்ளும் வேராய் – கை
பெற்றணையா தீபமென
பேரொளியைச் சிந்துகின்ற
நூலைப் – படி – காலை
திருக்குறளின் ஞானப்பால் குடித்தேன் – ஒரு
தினந் தவறா அதிகாரம் முடித்தேன் – முகில்
கருக்காக ஆன மனம்
கதிரவனாய் ஆகித்தினங்
கோர்க்கும் – ஒளி – பூக்கும்
நாலடியார் சொல்லி ஞானம் – அதை
நாள் முழுதும் கற்று விடத் தோணும் – மனப்
பாலையிலே பசுந்தளிராய்ப்
பட்ட தரு துளிர்த்து விடும்
வண்ணம் – அது – திண்ணம்
திரி கடுகம் நோய்க்கு நன் மருந்து – மனத்
திரும்பலுக்கு ஏற்றதோர் விருந்து – கொல்
எரிதழலாய் ஆனவரை
ஏற்றமுற ஆக்கி விடும்
உண்மை – படி – நன்மை