வாசிப்பே அறிவுக்கு வலுவூட்டும் – எங்கள்
வாழ் நாளைச் சிறப்பாக்கிப் பலமூட்டும்
தேசத்தின் பேரோங்க வழி காட்டும் – நிதம்
தெவிட்டாத தெள்ளமுதாய்ச் சுவை மீட்டும்
நேசிப்பே உள்ளத்தை நேராக்கும் – நூல்
நெடுங்காலப் பேதமையைச் சீராக்கும்
போசிக்கும் வாண்மையிலே ஆளாக்கும் – எம்
பொடுபோக்குக் கயமைகளைத் தூளாக்கும்

கருவறைக்குட் தங்குகின்ற காலந்தொட்டே – தாய்க்
கட்டாயம் நன்னூற்கள் கற்றல் வேண்டும்
பெருமளவி லறிவுடைமைப் பெருக்கெடுக்க – எம்
பெற்றோர்கள் வாசிப்பில் நிற்றல் வேண்டும்
குரு குலத்துக் கல்வி முறைத் தோற்றந் தன்னில் – முதற்
குரு நாதர் கரு தாங்குந் தாயே யன்றோ !
துருப் பிடிக்கா வண்ணம் நம் உள்ளம் நிற்க – நூற்
தூரிகையால் புது வண்ணந் தீட்டல் வேண்டும்

சிந்திக்கும் ஆற்றலுக்கு ஊட்டச் சத்தாய் – மதிச்
செயன் முறையைச் சுழல வைக்கும் விராட்டினமாய்ச்
சந்திக்கும் முதற் தோழன் வாசிப்புத் தான் – பெருஞ்
சாதனைக்குக் கை கொடுப்பான் நிச்சயந்தான்
பந்திக்குப் பந்தி பெருங் கவனம் வைத்து – வரும்
பத்திரிகைச் சேதிகளை வாசித்தல் வேண்டும்
முந்தித் தான் செயற்படுதல் வேண்டும் நாளும் – இதை
முயற்சித்தால் அறிவாற்றல் பெருகி வாழும்

அறிவுக்குத் திறவு கோல் வாசிப்பென்பர் – பகுத்
அறிவுக் கண் திறக்கின்ற ஆயுதம் என்பர்
குறிக்கோளை வென்று தரும் சக்தியாகும் – நிறைக்
குடமாக்க வழி காட்டும் யுக்தி யாகும்
நெறி தவறா வாழ்க்கைக்கு ஏற்றதாகும் – நெஞ்சில்
நிலைத்திருக்கும் கூர் மதிக்கு ஊற்றேயாகும்
பொறி புலனாம் ஐந்தடக்கல் என்றுங் காக்கும் – யாரும்
போற்றும் படி வாழ்வதற்காய்ப் புகழைச் சேர்க்கும்

வீட்டிற்குள் ஓரறையை ஒதுக்கி வைத்து – மதி
வீச்சொளிரும் நூலகத்தை அமைத்தல் வேண்டும்
கூட்டுணர்வின் அடிப்படையில் பெற்றோர் கூடி – தம்
குழந்தைகளோ குதூகலிக்க வாசித்தல் வேண்டும்
நாட்டுணர்வை இளமையிலே வளர்க்கச் செய்ய – தொடர்
நல்லறிவு நூற்கள் பல சேர்த்தல் வேண்டும் – முது
பாட்டியுடன் பேசி நின்ற பழங்கதைகள் போதும் – தினப்
பத்திரிகை வாசித்தால் பொது அறிவு தோன்றும்

நீரின் மேல் எழுத்தாகும் இருத்தல் நீக்கி – உடன்
நிலைத்திருக்கும் வரை பொழிந்த எழுத்தாய் மாற்றும்
நாரின்மை உள்ளத்தை நற்கேண்மையாக்கி – பொது
நலத்தின் கண் வாழ்வதற்கு நல்லவழி காட்டும்
பாரின் மேல் பேதமையை வேரோடு போக்கி – நற்
பண்புடைமை வளர்வதற்கு பகுத்தறி வூட்டும்
கூரின் கண் அகப்பட்ட கனியைப் போலே – நிறைக்
கூர் மதியைத் தந்து கறை உடனே ஓட்டும்

உயிர் வாழப் பிராணத்தைச் சுவாசித்தல் போலே – மதி
உயிர்ப்பிக்க நன்னூற்கள் வாசித்தல் வேண்டும்
வயிறார உணவுண்டு பசி நீங்கல் போலே – சொல்
வளமாகிப் பெருக்கேற வாசித்தல் வேண்டும்
பயிரொன்று விளைகின்ற பக்குவத்தை போலே – முளைப்
பருவத்தில் வாசித்துப் பயன் சேர்க்க வேண்டும்
வெயிலுக்குள் அகப்பட்ட புழுக்கூட்டம் போலே – நாம்
வேகாமல் இருப்பதற்காய் வாசித்தல் வேண்டும்

காசிக்கு ஏதேதோ நாம் வாங்கிக் கொண்டோம் – அது
கல்விக்கு உதவாமல் பயன் என்ன கண்டோம் ?
யோசிக்க மறந்தோமே வாழ் நாளை எண்ணி – ஒரு
யோகத்தில் வளராது அறிவாற்றல் மின்னி
யாசிக்கப் போகாமல் தடை போடும் ஒன்று – இதை
யார் யார்தான் அறிவாரோ வாசிப்பில் நின்று
வாசிப்பில் உயர்ந்தோரின் வழி காட்டல் உண்டு – எம்
வாழ் நாளைக் கழிப்போமா அவர் பாதை சென்று ?

காந்திக்கும் நேருக்கும் தோழர்கள் யாரு – நிதம்
கற்கின்ற நூல் அன்றி யார் என்று கூறு ?
சாந்திக்கு அலைகின்ற மனிதர்கள் பாரு – நூலைச்
சந்தித்தால் கவலைத் தீ அழிக்கின்ற நீரு
மாந்தித் தான் ருசிப்போமே வாசிப்புச் சாறு – கார்
மருள் கொண்ட மனமங்கு உடனாகும் நீறு
நீந்தித்தான் பார்ப்போமே எதிர் நீச்சலோடு – உடன்
நினைக்கின்ற இடஞ் செல்ல வாசிப்பைத் தேடு


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »