தையும் மார்கழியும்
மாறி மாறி,
வயதுகள் நெய்யும்.
தாயும் ‘ஆ’ வும்
பருகத் தர,
காயும் கனியும்.
கனியக் கனிய
இளமைப் பழங்களை,
காலம் கொய்யும்.
முன் பாதியில்
நிலா காயும்,
பின்னரது தேயும்.
கவலைக் காயம்
காயும்,
மீண்டும் கனிந்து காயும்.
முதுமைத் தீயும்
பரவும்,
அது மெய்யை மேயும்.
சுறுட்டப் படா பாயும்
சொல் கேளா நோயும் கண்டு,
உயிர் மாயும்.
தோலோடு
சொத்தும் சுருங்கும்,
ஆயிரம் ஏக்கர் ஆறடியாகும்.
சாயும் காலம்
வாயும் வயிறும் வேறென்று,
உறவுச் சாயம் கரையும்.
1 Comment
? · ஜூலை 7, 2017 at 2 h 12 min
வாழ்வின் படிமங்களையே படிப்படியாக செதுக்கியிருக்கிறார் கவிஞர்.
கொய்த சொற்களும் கோர்த்த விதமும் அழகு.
தந்த கவிக்கும் தமிழ் நெஞ்சிற்கும் வாழ்த்துக்கள்.