நல்ல கட்டுமஸ்தான உடல், அதற்கேற்ற உடை. கையில் ஒற்றை மலருடன் உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் கடற்கரையின் மணற்பரப்பில் உட்கார்ந்திருந்தான் அருண்..
பார்வை கடல் அலையில் விளையாடிடும் சிறுவர்கள் மீதும், அவர்கள் விரட்டிடும் நண்டின் மீதும்.. சிறிது நேரம் நினைவில் மூழ்கினான்..
இதே கடற்கரையில் நான்கு வருடங்களுக்கு முன்பு..
மாலதி மற்றும் அவளுடைய சித்தப்பா மகனும் அருணின் நண்பனுமான திலக் , அருண் மற்றும் திலக்கின் அப்பா அம்மா சில நண்டு சிண்டுகளுடன் ஆட்டம் கடல் ஆலையில்..
மாலதியும், அருணும் விரட்டி விரட்டி திலக்கின் மீது கையில் அள்ளிய கடல்நீருடன் மணலை அடித்து விளையாட்டு…
இடை இடையே இருவரும் இடித்து இடித்து விழுவது…
ஆனந்தமாக இருந்தது அருணுக்கு…
மாலதி, தனது கல்லூரி விடுமுறையை கழிக்க, எப்பொழுதும் திலக் வீட்டிற்கு வந்துவிடுவாள்… அருண் திலக் வீட்டின் பக்கத்து வீடு…
அதனால் இவனுக்கும் பழக்கம்..
அவள் அடிக்கும், லூட்டிகள், கள்ளமில்லாத பேச்சு, குறுகுறுப்பான சிரிப்பு இதனால் அருண் மனதில் வளர்க்க ஆரம்பித்தான் காதலை…
யாரிடமும் சொல்லியதில்லை..
மாலதி விடுமுறையில் வரும் நாட்கள் அனைத்தும் அருணுக்கு தென்றல் வீசும் வசந்த நாட்கள்..
கல்லூரி சென்றுவிட்டால் இவனுக்கு நரகமாக நகரும் நாட்கள்… இடையிடையே அவள் திலக்கிற்கு செய்யும் தொலைப்பேசி அழைப்பால் இவனும் சற்று இளைப்பாருதல் அடைவான்..
அவள் சும்மாவே தேவதை போல இருப்பாள்.. அதுவும் வண்ண ஆடைகள் அடைந்தால் இன்னும் அதிகமாக கவர்வாள்..
அதை தனது வண்ண ஓவியமாக வரைந்து தன் பீரோவில் வைத்து பார்த்து பார்த்து ரசித்து வருவான்..
அவள் விடுமுறையில் அங்கு வரும் போதெல்லாம் அவனது காதல் அதிகரித்துக் கொண்டே சென்றது.. அதை அவன் நண்பனிடம் கூட சொல்லவில்லை…
சிலநேரம் அவளிடம் நேரடியாகச் சொல்ல செத்து செத்து பிழைப்பான்..
தொலைப்பேசியில் சொல்லலாம் என்றால் வார்த்தைகள் தந்தியடிக்கும்.. ஓரிரு முறை உளறலாக சொல்லியுள்ளான்.. அவளின் குறும்பு பார்வையால் பார்த்து முறைத்து விட்டு சென்றுவிட்டாள்.
இப்படியே மூன்று வருடங்கள் கழிந்தது..
சென்ற வருட விடுமுறைக்கு அவள் வரவில்லை.. அதை அவனால் தாங்க முடியவில்லை.. திலக் வீட்டிற்கும் அவ்வளவாக தொலைப்பேசியின அழைப்பும் இல்லை..
கடைசியாக அவள் தொலைப்பேசியில் சொன்ன பொழுது சிரித்து விட்டே இணைப்பை துண்டித்துவிட்டாள்..
திடீரென்று, இரண்டு நாட்களுக்கு முன்பு மாலதியே போன் செய்தாள். முடித்ததும் அருணுக்கு கைகால் ஓடவில்லை ஒரே கும்மாளம். ஆட்டம்பாட்டம். அதனோட விளைவாக ஒற்றை மலருடன் கடற்கரையில் காத்திருப்பு..
எங்கிருந்தோ வந்த பிள்ளைகள் விளையாடும் பந்து அவன் மேல் பட்டதும் நிகழ்காலத்திற்கு வந்தான்…
அந்த பந்தினை எடுத்து பிள்ளைகளிடம் தள்ளிவிட்டு திரும்பி பார்க்க.. வெள்ளை நிற சுடிதாரில் மாலதி வந்துக்கொண்டு இருந்தாள். மனது லேசானது… மனம் இறக்கை கட்டி பறந்து அவனை உயரத்தில் தூக்கிச் சென்றது…
அவளிடம், முகத்தில் முன்பிருந்த பொலிவு இல்லை. அந்த குறுகுறுப்பு பார்வையில்லை, எப்பொழுதும் வசீகரிக்கும் புன்னகை இல்லை. இறக்கை கட்டி பறந்த மனது அவனை «பொத்யுதெற்கு மணலில் போட்டதாய் ஒரு உணர்வு..
‘‘ஹாய்.. அருண்.. எப்படி இருக்கீங்க?’’ என்ற பேச்சில் ஒரு கலகலப்பு இல்லை..
ஏதோ வார்த்தைகளை வலிய இழுத்து பேசுவதைப்போல் பேசினாள்… ஏதேதோ பேசினால் சுவாரசியமின்றி.. அதில் தான் «விதவையு ஆனதை சொன்னதும் அதிர்ச்சியில் இதயம் நொறுங்கிப் போனதைப் போல உணர்ந்தான். அதை வெளிக்காட்டாமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான்
போன வருடம் அவளது அப்பாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அதனால் அவளுக்கு உடனே திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று அவர் விருப்பப்பட்டதாகவும் சொல்லி சொந்தக்கார பையனை பார்த்து அவசர அவசரமாக கட்டி வைத்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக திருமணமான சில தினங்களிலேயே அவள் கணவன் இறந்ததாகவும் சொல்லி குலுங்கி குலுங்கி அழ..
மனம் மறுபடியும் இறக்கைகட்டி பறக்க.. அருணும் அழ அவன் கண்களில் புன்னகையுடன் ஆனந்தக் கண்ணீர் அதை மறைத்துக்கொண்டு, மோலதி.. அழாதிங்க.. இதோட வாழ்க்கை முடியப் போறதில்ல.. இன்னும் இருக்கு.. முடிஞ்சத நினைச்சி வருத்தப்படுறதுல ஒன்னும் ஆகப்போறதில்லயு
அருண் சொன்னதும்… «ம்ம்ம்.. சரிங்க அருண்.. அப்பறம் சொல்லுங்க .. உங்களுக்கு எப்ப கல்யாணம்« என்று தன் கண்களை துடைத்தபடி மாலதி..
‘‘பொண்ணெல்லாம் பார்த்தாச்சு. அவங்க சம்மதம் கிடைச்சவுடனே கல்யாணம் தான்’’
‘‘ஆகா.. அப்படியா.. ம்ம்ம்.. யாரந்த அதிர்ஷ்டசாலி’’
‘‘மாலதி.. உங்க கிட்ட ஒ..ஒன்..னு சொல்லனும்‘‘ என்று வார்த்தைகள் மீண்டும் தடுமாற.. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்து..
‘‘நான் உங்கள காதலிக்கிறேன்.. உங்கள கல்யாணம் செஞ்சிக்க விருப்பப்படுறேன்… நீங்க தான் அந்த அதிர்ஷ்டசாலி.. பிளீஸ் மறுத்துடாதிங்க.. நான் உங்கள 12 ம் வகுப்பு லீவுல வந்ததுல இருந்து காதலிக்கிறேன்..’’ தன் காதல் கதையை சொல்லி தன் கையிலிருந்த ஒற்றை மலரை அவள் கைகளில் வைத்து தன் கைகளால் அழுத்த.. அழுகையும் சிரிப்புமாக அருணின் நெஞ்சில் முகம் பதித்து குலுங்கினாள்…
சற்று தூரத்தில் இரண்டு புறாக்கள் வானில் சோடியாக வட்டமடிக்க..
கடற்கரை மணலில் அருணும் மாலதியும் தங்கள் கரங்களை பிடித்து நடந்து செல்கின்றனர். புதிய காதல் வாழ்வினை நோக்கி…