விதைத்த விதைகளை உள்வாங்க
என் உடலில் உயிர்சத்து இல்லை.

விதைகளை முளைக்கச்சொல்ல
என்மனதில் ஈரமில்லை.

வெற்றிடங்களை நிரப்ப
வருணபகவானுக்கோ மனமில்லை.

கண்விழித்துப்பார்த்தால்
வெள்ளைமாளிகைகள் நாற்காலி
போட்டு அமர்ந்து அதிகாரம் செய்கிறது.

ஆழ்துளைக்கிணறுகளின் அட்டகாசம்
என் உடலை அங்கஅங்கமாக கிழித்துக்
கொண்டிருக்கிறது.

அன்னார்ந்து பார்த்து அழுகின்றேனே?
அடைமழையே எம்மை அணுகி
ஆறுதல்கூற அஞ்சுகிறாயே?

கூட்டம்கூட்டமாய் என்உடலை கூறுபோட
கொடியசைத்து அழைக்கிறார்கள்.

எம்மை ஆண்ட சொர்க்கமே இனி உன்உடலின்
வியர்வைத்துளிகளை நான் ருசிக்கமாட்டேன்.

உங்கள்கண்களில் வழியும் ரத்தத்துளிகளை
கண்டு கரைந்துபோவேன்.

என் உடலைதனியாக விட்டுசெல்லாதே
என் ஆருயிர் அரசனே.

என் உடலை சிதைக்கின்ற காட்சியை
கண்டு கடைசியாக ஒருமுறை
கண்ணீர்துளிகளை
காணிக்கையாக்கிவிட்டு செல்.!

இப்படிக்கு

விழிநீருடன் விளைநிலம்!