சின்னாவுக்கு மூளை நரம்புகளுக்குள் ரத்தம் கசிந்து தலை வெடித்துவிடும் போல் இருந்தது,

துடிக்கிறதா இல்லை நடிக்கிறதா என்று சந்தேகம் எழும் படி அவன் இதயம் கொஞ்சம் நின்று நின்று துடித்தது. பாவம் அந்த சின்ன இதயம் அதுவும் எத்தனை துன்பங்களைத்தான் தாங்கும்.

விரக்தி வெருப்பு வலி சோகம் என்று எல்லாம் அவனை வாட்ட அவன் கொஞ்சம் திரும்பிப்பார்த்தான் இன்னும் சீதா அழுது கொண்டே தான் இருந்தாள்.அபலை , அவள் என்ன செய்வாள் பாவம் தந்தையான சின்னாவே அழும் பொழுது தாய் அழாமல் இருப்பாளா ?.இது முதல் முறை இல்லை என்பது உன்மை தான் சொல்லப்போனால் இது பத்தாவது முறை ஆனால் ஒவ்வொரு முறையும் தாய்மனம் தகர்ந்து போய்விடுகிறது.அவள் அழுகயை சின்னாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அந்த நொடியில் வலி எல்லாம் வெறியாக மாறியது

திடீர் என அவனுக்குள் ஒரு ஆக்ரோஷம் வேகமாய் நகர்ந்தான். சீதாவின் முன்னால் கிடந்த தன் குழந்தயைப் பார்த்தான். வெளி உலகைப் பார்க்கும் காலம் வந்தும் தானாக அந்த குழந்தை வெளி வரவில்லை வலுக்கட்டாயமாகத் தான் எடுத்து பார்திருந்தார்கள், முன்பு இறந்த ஒன்பது குழந்தைகளைப் போலத்தான் இந்த குழந்தையும் கருவாக இருந்த பொழுதே இறந்திருந்தது. அவனுக்குள் வெறி தலைக்கேறிவிட்டது, பாய்ந்து போய் அந்த சிசுவின் சடலத்தை எடுத்து அந்த உயரத்தில் இருந்து வீசி எறிந்தான். வெறி தீர்ந்து போனதும் அவன் விதியை நினைத்து விசும்பி விசும்பி அழுதான். சின்னா எப்போதுமே இப்படி அழுதது இல்லை.சில வருடங்களாகவே எல்லோருடைய வாழ்க்கையும் மாறிப்போய் தான் இருந்தது , இப்போதெல்லாம் குழந்தைகள் உண்டாவதே கிடையாது கிட்டதட்ட எல்லா ஆண்களுக்கும் ஏன் சில பெண்களுக்கு கூட மலட்டுத்தன்மை வந்து அவர்களின் சந்ததியையே சரித்து விட்டுப் போனது.உலகமே சின்னா சீதா போன்ற வெகு சிலரைத் தான் நம்பி இருந்தது. எங்கு பார்த்தாலும் மரண ஓலம்,அழுகை ஆனால் அப்போதெல்லாம் கலங்காத சின்னா இப்பொழுது கதறிக் கதறி அழுகிறான்.

சீதா மெதுவாக எழுந்து அவன் அருகே சென்று லேசாக அவனை உரசி நின்று கொண்டாள். தன் ஸ்பரிசத்தால் அவனை தேற்ற எண்ணினாள். சின்னா மெதுவாக நிமிர்ந்து பார்த்து உடைந்த குரலில் கேட்டான் “நாம என்ன தப்பு செஞ்சோம்னு நமக்கு இந்த தண்டனை ? , நாம உண்டு நாம வேலை உண்டுன்னு போயிட்டிருந்தோம் இந்த கடவுளுக்கு கருணயே இல்லயா?”

சீதாவிற்கும் அவன் சொன்னது சரி என்றுதான் பட்டது,அவன் தொடர்ந்து பேசினான்.”எல்லாம் இந்த பூதங்கள் செய்யற வேலை, கேட்க ஆளில்லாட்டி என்ன ஆட்டம் வேணும்னாலும் போடலாமா ? இந்த சுயநல பூதங்கள சும்மா விடக்கூடாது”

சீதவிற்க்கும் அவன் வெறி புரிந்தது ஆனால் நிதர்சனம் என்ன என்பதும் அவளுக்குத் தெரியும் அதனால் சாந்தமாய் பேசினாள் “என்ன செய்ய முடியும் ? எல்லாம் தப்புனு தெரியுது ஆனா யாரு போய் தட்டி கேட்க முடியும் ?, நம்ம விட முப்பது மடங்கு பெரிய ஆஜானுபாகுக்கள் கிட்ட போய் மோத முடியுமா? . இந்த வான் உயர தூண்கள் வந்ததுக்கு அப்புறமா தான் எல்லா பிரச்சனையும்”

இதைக் கேட்டதும் சின்னா சினம் கொண்டு சீறினான் “யார் தான் கொலை செய்யல ? , சிங்கம் கொலை செய்யுதே அவ்வளவு ஏன் பாம்பு கொலை செய்யுதுல ஆனா அது எல்லாமே உணவுக்காக, ஆகாரத்துக்காக செஞ்சா அது இயற்க்கை. ஆனா இந்த பூதங்களுக்கு நம்ம எல்லாரயும் கொன்னு வாழ வேண்டிய தேவையே இல்லயே?.

வெரும் ஆடம்பரதுக்கும் அழகுக்கும் இந்த பூதங்கள் நட்டு வைக்குற மந்திர தூண்களுக்கு நாம பலியாகனுமா ?”

இப்படி ஒரு கோபத்தை இதுவரை சின்னாவிடம் அவள் கண்டதே இல்லைஆனால் அந்த கோபத்தில், ஆதங்கத்தில் ஒரு தகப்பனின் வலி இருந்ததை அவளால் உணர முடிந்தது

“அது ஆடம்பரத்துக்கு இல்லையாம் அந்த தூண் இல்லைனா அந்த பூதங்களால வாழவே முடியாதாம்”

கண்ணில் கனலோடு பார்த்த கணவனை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள் சீதா.

பின் மெதுவாக சொன்னாள் “ நானில்லை அம்மா தான் சொன்னாள் ”.

சின்னாவின் சினம் இன்னும் அதிகமானது “அதுக்குனு கொலை செய்யலாமா ?

சுய நலப் பேய்கள் , நீ பார்த்துகிட்டே இரு நாளைக்கு நாமளும் இந்த மந்திர தூண்களுக்கு பலியாக வேண்டிய நிலை வரும் ”

ஆம் சில நாட்களுக்கு முன்பு சீதாவும் மனதிலும் இதே எண்ணம்தான் தோன்றியது. அவள் உடல் தொடர்ந்து பலவீனமாவதை அவளால் உணரமுடிந்தது.

எப்பொழுது தூங்கினார்கள் என்று இருவருக்குமே தெரியாது ஆனால் இருவரும் மாறி மாறி அழுதது மட்டும் நினைவில் இருந்தது. சின்னா மெதுவாக சோம்பல் முறித்தான், சூரிய ஒளி அவன் மனதிற்கு ஒரு தெம்பை கொடுத்தது. ”சீதாவா இது ?” இப்படி அவள் தூங்கி அவன் பார்த்ததே இல்லை விடியும் முன்னரே எழுந்துவிடுவாள்.

அழுதுகொண்டிருப்பதை விட அவள் தூங்குவதே மேல் என்று நினைத்துக் கொண்டான் .அவள் நெற்றியில் மெதுவாக தன் தலயை வைத்து உரசினான் .

ஆனால் அவனுக்கு ஏதோ ஒன்று தவறாக தெரிந்தது .அவள் உடலை தொட்டுப் பார்த்தான் ஒரு அசைவும் இல்லை லேசாக உலுக்கினான் அவள் எழவே இல்லை. ஆம் சீதா இறந்துவிட்டாள் , சின்னாவிற்கு உலகம் அதிரும் வரை “சீதா சீதா” என்று கத்த வேண்டும் போல் இருந்தது ஆனால் துக்கம் தொண்டைக்குழியில் சிக்கி அவனை தவிக்கவிட்டது.

அழக்கூட அவனிடம் தெம்பில்லை, மெதுவாக புலம்பினான் “வீடு போச்சு , பிள்ளைங்க எல்லாம் போச்சு , அப்போலாம் தாங்கிகிட்டேன் ஏன் தெரியுமா ? தெரியுமா சீதா ? ” மெதுவாக அவள் உடலை கட்டிக்கொண்டான் “அப்போ எல்லாம் நீ இருந்த,. நீ மட்டும் போதும் எனக்கு. நீ இருந்தா எல்லாமே வந்திடும்னு நினைச்சேன் இப்பிடி ஏமாத்திட்டியே”

அவள் சடலத்தை மெதுவாக தள்ளினான். எங்கே போவது யாரிடம் போய் அழுவது. சின்னாவை பொறுத்தவரை எல்லாமே முடிந்துவிட்டது. எல்லா இழப்பையும் இயலாமையையும் கோபத்தையும் கடவுளிடம் கொட்டித்தீர்க்க வேண்டும் என்று தோன்றியது.

”சீதா“ இந்த வார்த்தையை மட்டும் ஓசையின்றி உச்சரித்து , கடைசியாய் ஒரு முறை தன் காதல் மனைவி சீதாவின் உடலை பார்த்துவிட்டு , கண்ணீர் திரை கண்ணை மறைக்க கடவுளிடம் நீதி கேட்டு

கோவில் கோபுரத்தை நோக்கி பறந்தது அந்த சின்னா என்ற ”சிட்டுக்குருவி” !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..