பத்து நாள் கூட ஆகவில்லை!
பிள்ளைப் பெற்ற தாயெனக்கு
பத்து நிமிடப் பிரிவு – அது
பத்தாயிரம் யுகமாக தெரிகிறதே!
பத்து நிமிடத்தில் திரும்ப நினைத்து
மருந்து வாங்க ஓடினேன்
வீடு திரும்பையில் மழை, திடீர் மழை!
எனது கவலைக்கு வானமும் அழுததோ?
நனைந்தால் பிள்ளைக்கும் நோய்வருமே
பத்துநிமிடம் சில மணிநேரமாய் மாற
பிள்ளையின் பசியை
நினைத்ததும்
கலங்கியது மனம் !
அந்த இரண்டின்
பாரம் தாங்கமல் மூச்சு முட்ட
உள் நரம்புகளின் வலி அதிகரிக்க
மழையின் ஈரத்தில்
மழலையின் உணவு என்னில் கசிந்தது
நல்லவேளை – சில
வக்கிரப் பார்வையாளர்களின்
பார்வைக்கு அது எட்டவில்லை!
வக்கிரப் பார்வையின் உடல்களே-நீ
பிறந்ததும் உனக்கு உணவு தந்த
முதல் அதிசயம் அது தான்!
தாயின் இரத்தம் உனது ருசிக்காக
வெள்ளை அமுதமாக மாறும்
அதிசயமும் அங்கு தான்!
அங்கே காமமில்லை
தாய்மை மட்டும் தான் என்று – இனிமேலாவது
யாராவது எழுதித் தொலையட்டும்!
ஒருகாலத்தில் சேரநாட்டினற்கும்
இப்பொழுதும் மலைவாழ்பவருக்கும்
தெரிந்த தாய்மை அறிவு இது
அறிவாளிகளுக்கு என்று தான் செல்லும்?
மழை என் மீது கருணை காட்டிய
அடுத்த நொடியில் மூச்சு வாங்க
கதவைத் திறந்தேன்
அதிசயம் ! அதிசம் !
பக்கத்து வீட்டின் நேற்றைய
சண்டையின் தோழி
என் பிள்ளைக்கு உணவூட்டுகிறாள்
அவளின் உடலிலிருந்து !
யாருக்கு நன்றி சொல்ல?!!
இறைவனுக்கா ?
இறைவன் அனுப்பின என் தோழிக்கா?
எனது தோழி ஊட்டியது தாய்பால் மட்டுமா?
தாய் பாசமும் தானே?
ஒரு நம்பிக்கை!
என் பிள்ளை
கண்டிப்பாய் எனக்கு மட்டுமே தாய்பாசம் தரமாட்டான்
எல்லா ஏழைத் தாய்மார்களுக்கும் அவன்
மரமாய் – மகனாய் – மன்னனாய்
மனமகிழ்சியில் உதவுவான் – அளவில்லா
தாய்பாசத்துடன்!
வாழ்க என் மகன்
வாழ்க என் தோழி
வாழ்க தாய்மை!