நாம் அனைவருமே இறைவனால் படைக்கப்பட்டு இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சுற்றுலா பயணிகள். சுற்றுலா செல்லும் யாரும் சென்ற இடத்திலையே தங்கி விடுவது இல்லையே. எங்கிருந்து கிளம்பினோமோ அவ்விடத்திற்கே திரும்பிச் செல்வோம். அதுப்போலவே இவ்வுலக சுற்றுலா வாழ்க்கை முடிந்ததும் நம்மைப் படைத்து அனுப்பியவரிடமே திரும்பி செல்வோம். நாம் சுற்றுலா சென்ற இடத்தையும் அங்குள்ள பொருட்களையும் எப்படி உரிமைக் கொண்டாட முடியாதோ, அதுப்போல இவ்வுலக சுற்றுலா வாழ்க்கை முடித்து படைத்தவனிடம் திரும்பிச் செல்லும் போதும் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. கடவுள் நம்மை எவ்வாறு புதுப்பிறப்பாக, தூய்மையான உள்ளம் படைத்தவர்களாக இவ்வுலகிற்கு அனுப்பினாரோ அதேப் போன்ற புதுப்பொலிவுடன் தூய உள்ளத்தோராய் அவரைச் சென்றடைய வேண்டும். இனால், நாம் சுமந்து செல்வது என்னவோ பாவச்சுமைகளைத்தான்.
நமக்கு முன் இவ்வுலகிற்கு கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் பலர் துன்பத்தினாலும், பலவிதமான சோதனைகளினாலும், நோய்களினாலும் பாதிக்கப்பட்டு தவறான பாதையில் செல்பவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு துன்பமான வேளையில் ஆறுதலாகவும், நோயால் வாடுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் தவறான பாதையில் செல்வோரை நல் அறிவாலும், நற் சிந்தனைகளாலும், நல்வழிப்படுத்தவும், நம்மைத் தொடர்ந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு முன்மாதிரியான வாழ்க்கை வாழவுமே கடவுள் நம்மை இவ்வுலகிற்கு அனுப்புகிறார்.
ஆனால், நாம் பணம், பதவி, பட்டம், பெயர், புகழுக்காக இவ்வுலக முன்னாள் பயணிகளின் மனதையும், நம்மைத் தொடர்ந்து வரும் சுற்றுலா பயணிகளின் நற்சிந்தனைகளையும் உடைத்து அவர்களது மனதில் ஆறாத வடுவையும், தீய எண்ணங்களையும் விதைக்கின்றோம்.
இந்த உலகில் உள்ள எதுவும் நமக்கு சொந்தமில்லை என்பது நாம் மண்ணுடன் போகும் போது மட்டுமே நமக்கு தெரிகிறது. அதற்கு முன் நம் அறிவுக்கு தெரிந்தாலும் நம் மனம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் நாம் வாழும் போது, இது எனக்கு சொந்தம், அவை எனக்குரியவை, இவை எனக்குரியவை என அனைத்தின் மீதும் உரிமைக் கொண்டாடுகின்றோம். ஆனால், இது எதுவும் இறுதியில் நம்முடன் வருவதும் இல்லை, நம்மால் அவற்றை ஏடுத்துச் செல்லவும் இயலாது. நாம் வாழும் இவ்வுலக வாழ்க்கையில் அன்புடன் ஒருவர் மற்றவருக்கு உதவிகள் செய்து வாழலாம். ஆனால், நாம் யாருக்கும் எந்த உதவியும் செய்யாதவர்களாய் ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்று இருக்கின்றோம். இதை மாற்றி நாம் பிறந்ததற்கான நோக்கத்தை அறிந்துச் செயல்பட வேண்டும்.
உன்னைப் படைத்தவர் உன்னைப் படைத்தப் பொழுதே உன் வாழ்வுக்கான நோக்கத்தை உருவாக்கியிருப்பார். ஆம், ஓவ்வொரு மனிதனின் பிறப்பிற்கும் ஓவ்வொரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தை அவனவன் அறிந்து அவனவனே நிறைவேற்ற வேண்டும். அதற்காகவே நாம் படைக்கப்பட்டோம். நம் இடத்தை நம்மால் மட்டுமே நிறைவு செய்ய முடியும்.
பிறப்பு என்பது பலருக்கும் வரலாற்றில் ஓரு நிகழ்வு. ஓரு சிலருக்கோ பிறப்பே வரலாறுத்தான். நிரந்தரமாக நாம் யாருக்கும் எதையும் கொடுக்க முடியாது. நமக்கும் நிரந்தரமாக யாரும் எதையும் தர முடியாது. எல்லாமே தற்காலிகமானதுதான். இந்தத் தற்காலிகமான உலகில் நாம் மற்றவர்களுக்கு உதவுவதால் எதையும் இழந்து விடப்போவது இல்லை. ஏனெனில் எல்லாம் எல்லாருக்கும் உரியது. ஒவ்வொருவருக்குமே பிறந்த நாள் வெறும் நாளாக மட்டுமல்லாமல் நல்லச் செயல் செய்ய பிறந்த ஆரம்பமாகஇருக்க வேண்டும். பிறக்கும் போது எதையும் கொண்டு வருவது இல்லை. மற்றவருக்கு உதவுவதால் எதையும் இழந்துவிடப் போவதும் இல்லை.