சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே – நல்ல
குலமால வேற்கண்ணாய்! கூறுவமை நாடில்
பலா மாவைப் பாதிரியைப் பார்!
என்ற ஒளவைப்பாட்டியாரின் இப்பாடலின் கருத்தை அறிவது அவசியமல்லவா?
மூவகை குணம் படைத்த மக்கள் இவ்வுலகில் வாழ்கி றார்கள். அவர்களின் தன்மைகள் எப்படிப்பட்டவை என அழகாக விளக்குகின்றார்.
இவர்களில் முதலாவது வகையினர் சான்றோர்கள்: இவர்கள் எதையும் சொல்லாமலே குறிப்புணர்ந்து மற்றவர்களுக்குச் செய்வார்கள். இவர்கள் பெரியவர்கள்.
இரண்டாவது வகையினர் சிறியவர்கள்: இவர்கள் மற்றவர்கள் சொல்லியபடி கேட்டுச் செய்வார்கள். இவர்கள் சிறியவர்கள் எனப்படுவர்.
மூன்றாவது வகையினர் அறிவு இல்லாத மூடர்கள்: இவர்களுக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.
இவர்கள் மூன்று வகையினருக்கும் மூன்று விதமான மரங்களை ஒளவையார் ஒப்பாகக் கூறியுள்ளார். பூக்காமல் காய்க்கும் பலாமரத்தைச் சான்றோராகிய பெரியவர்களுக்கும், பூத்துக்காய்க்கும் மாமரத்தைச் சொல்லிச் செய்யும் சிறியவர்களுக்கும், பூத்துமே காய்க்காத, பயன்தராத பாதிரிமரத்தை கயவர்களான மூடர்களுக்கும் ஒப்பாகக் கூறியுள்ளமை ஒளவையாரின் அதி உயர் திறமையைக் காட்டுகின்றது.
மேலும் இந்த மூவகை மக்களுள்ளே நாம் முதல்வகை மக்களாக வாழ்ந்து வீட்டுக்கும், நாட்டுக்கும் புகழ் சேர்ப்போமாக!