இமிழ்கடல் உலகமதே கிடைத்த போழ்தும்
இன்னாத தீயவழி என்றால் ஏற்கான்
அமிழ்தமிதே கிடைத்திட்ட போழ்தும் அதை
அனைவருக்கும் கொடுத்துண்ணும் அரிய பண்போன்
தமிழ்மொழியில் பாடிவந்த புலவருக்கோ
தன்தலையைத் தந்துதமிழ் காத்த சான்றோன்
இமயவுயர் இவ்வரிய பண்பி னோடே
ஈடில்லாச் சிறப்புடனே வாழ்ந்தா னன்று
இனமான உணர்வெல்லாம் கெட்டே இன்று
ஈனவழி வாழுகின்ற நிலையைக் கண்டோம்
மனம் போன போக்கினிலே மொழிம றந்து
மாற்றானின் மொழிமயக்கில் திளைத்து விட்டோம்
வனப்பொங்கு தமிழ்ப்பெயரை ஒதுக்கி விட்டே
வடமொழியில் புரியாத பெயரைச் சூட்டி
தினந்தினமும் மழலையரைக் கொஞ்சு கின்றோம்
தீந்தமிழில் பேசிடவும் அஞ்சு கின்றோம்!
தமிழர்களாய்ப் பிறந்தவர்கள் கையெழுத்தைத்
தமிழ் மொழியில் போடுவதே இல்லை. ஏனோ?
இமைப்போழ்தும் ஆங்கிலவீண் மோகத் தாலே
இன்தமிழைச் சிதைத்தழித்து வருகின் றோமே!
தமிழனத்தின் தனிக் குணத்தைப் பலவா றிங்கெ
தரைமட்ட மாக்கியுமே குலைக்கின்றோமே
தமிழினமே! தமிழ் சிதைந்தால் இனமே போச்சு
தமிழ் மொழியே நம்வாழ்வில் உயிராம் மூச்சு!
தமிழ் மறவா! படிப்பதிலோ பயனே இல்லை.
தமிழுணர்வு குன்றிவிடின் வாழ்வே இல்லை
அமைவுறவே உலகமெலாம் குறளைப் போற்றி
அக மகிழ்வு கொண்டெதான் போற்றுகின்றார்.
தமிழனாகப் பிறந்தநீயோ தமிழ்ம றந்து
தாவியமே எங்கெங்கோ அலைகின்றாயே?
தமிழா! நீ விழித்தெழு தமிழப் போற்று
தமிழுணர்வு நெஞ்சத்தில் வைத்தே போற்று!