விக்கிரமாதித்யனின் அதிசய சிம்மாசனம் ஒரு நிலத்தில் புதைந்திருந்தது; காவலன் ஒருவன், அதன் மேல் நின்றான். அவனிடம் பரிவும் விருந்தோம்பலும் இன்னபிற நற்குணங்களும் நிறைந்திருந்தன. அந்தப் பீடத்திலிருந்து இறங்கினான்; மறுநொடி அந்த நற்குணங்கள் யாவும் அவனை விட்டு நீங்கின. இப்படி ஒரு கதை உண்டு. அது, உண்மையோ? பொய்யோ? இங்கே அதை ஒரு தொன்மக் குறியீடாய்க் கொள்வோம்.
ஒரு வகையில் காதலும் அந்தச் சிம்மாசனம் போலத்தான். காதலின் மேல் நிற்கும்போது நிற்பவர், இந்த உலகையே மறந்துவிடுவார். நல்லவராகவும் வல்லவராகவும் மாறிவிடுவார். குறிப்பிட்ட இருவர் மட்டுமே நிறைந்த, முற்றிலும் ஏகாந்தமான உலகம் ஒன்றிற்குள் நுழைந்துவிடுவார்கள். பிரபஞ்சப் பொருட்கள் யாவும் அவர்களின் ஏவலுக்குக் காத்திருக்கும். ஈருயிர் ஓருயிராகும் பரிணாமத்தில் கூடலும் ஊடலும் கனவும் கற்பனையும் மெளனமும் பிதற்றலுமாய் ஒரு பித்து நிலையில் சஞ்சரிப்பார்கள். அது, ஒரு வகை அதீத உலகம். அங்கே எதுவும் இயல்பாய் இருக்காது. பனித்துளிக்குள் பிரபஞ்சத்தையே காண்பது போல் களிகூத்து நிகழ்த்துவார்கள்.
காதல் கவிதைகளுக்குள் சில பொதுவான இயல்புகள் உண்டு. ‘கடைக்கண்ணால் பார்; மரணத்தை வெல்கிறேன்’, ‘கிளுகிளுவெனச் சிரி; கிழக்குடன் போட்டியிடுகிறேன்’, ‘பார்வையால் என்னைக் கொல்கிறாய்’, ‘பசி இல்லை’, ‘துயில் இல்லை’, ‘உன்னைக் காணாமல் (வளையல்/ கைக்கடிகாரம் கழலும் அளவுக்கு) இளைக்கிறேன்’, ‘உடனே உன்னைப் பார்க்காவிட்டால் உயிர் உடலை விட்டுப் போய்விடும்’,
‘என் மனம் என்னிடம் இல்லை, உன்னிடம் வந்துவிட்டது’, ‘விலகாதே! எப்போதும் என் பக்கத்திலேயே இரு’, ‘விலகியிருக்கிறாய், தனிமையின் வெப்பம் தகிக்கிறது’, ‘என் துணையே, உனக்குத் துயரா? தொல்லைசெய்யும் ஆளைக் காட்டு, கீசிடுறேன்’, ‘உனக்காக எதுவும் செய்வேன், உயிரும் கொடுப்பேன்’……. எனக் காதலர்களின் ஒவ்வோர் அசைவையும் கவனியுங்கள். அவை, ஒரு தனித்த தளத்தில் இருந்தே எழுகின்றன. காதலர்கள் பெரும்பாலும் தரையில் நிற்பதில்லை; மிதக்கிறார்கள். அந்த மனோ நிலையைத் தக்க வைப்பதே, காதல் கவிதைகளின் பணியாய் இருக்கிறது.
இவை அல்லாமல், வருணனைகளும் காதல் கவிதைகளின் பெரும்பகுதியைப் பிடித்து வைத்துள்ளன. உறுப்பு வருணனைகள், குரல்- நிழல்- பண்பு, நிமிர்ந்தது, குனிந்தது, நடந்தது … என எதையும் விடாமல் வருணிக்கிறார்கள். புற வாழ்வில் அழுக்கு என்றும் குப்பை என்றும் கருதப்பெறும் பலவும் காதலர் உலகில் விலைமதிக்க முடியாதவை ஆகின்றன. காதலியின் ஒற்றை முடி, நகத் துண்டு ஆகியவற்றைக் காதலன் போற்றிப் பாதுகாக்கிறான். காதலன் சூட்டிய பூ காய்ந்து சருகானாலும் காதலி அதைத் தூக்கி எறிவதில்லை. இந்தப் பொருள்களையே இப்படிப் பாதுகாத்தால் பரிசுப் பொருள்களை எப்படிப் பாதுகாப்பார்கள்!
இவையெல்லாம் உயிரோடு இருக்கும் காதலுக்குப் பொருந்தும். இணையில் ஒருவர் மறைந்தாலோ, பிரிந்தாலோ, தொலைந்தாலோ, அந்த இன்னொருவர், கொடுந்துன்பத்திற்கு உள்ளாவார். மகிழ்வின் உச்சத்தில் இருந்த நிலை மாறி, இப்போது அதற்கு நேர் எதிராய்த் துன்ப சாகரத்தின் ஆழத்தைத் தொட்டுவிடுவார். துணையின் ஒருவர் பிரிந்தால், இன்னொருவருக்கு உலகமே தலைகீழாக மாறிவிடுகிறது. ஒருதலைக் காதலும் இந்த வரிசையில் வைக்கத் தக்கதே. துன்பியல் காதல் கவிதைகளில் மரணம் என்ற சொல் உறுதியாக இருக்கும். சொல் மட்டுமா?
இப்படிக் காதலின் இயல்புகளையும் அறிகுறிகளையும் சொல்லக் காரணம் என்ன? தமிழில் வெளிவந்திருக்கும் இலட்சக்கணக்கான காதல் கவிதைகளின் சாரமே, இவை. இத்தகைய கூறுகள் இல்லாமல் எந்தக் கவிதையும் இல்லை. இந்த உணர்வுகளைத்தான் காதல் கவிஞர்கள், வெவ்வேறு சொற்களில், வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு ஆட்களின் முன் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
சங்க காலத்திலிருந்து வெவ்வேறு அலைவரிசைகளில் தொடரும் இந்த மரபு, இன்று வரை இடைவெளி இல்லாமல் நீடித்து வருகிறது. அந்த மரபில் வருகிறார், மதுமிதா (41).
சற்றே தலை சாய்ப்பாய்
முடிக்கற்றை நெற்றியில் வந்து
அழகாய் அழகு சேர்க்கும்
லேசாக ஒதுக்குவாய்
கையை எடுக்கும் முன்பே
அதே இடத்தில் அரைநொடியில்
அசைந்தாடி வந்து நிற்கும் அழகு முடி
என்னை நலம் விசாரிக்க
– என அழகியலோடு கவிதை பாடத் தெரிந்திருக்கிறது, இவருக்கு.
மனமெனும் சாதனத்தை
என் செய்வேன்
முடியைக் கட்டி
மலையை இழுப்பதாய்
உன்னில் பிணைத்துள்ளேன்
– என அற்புதமாக வடித்துள்ளார்.
விழியால்
முழுதாய்
விழுங்கி விட்டேன்.
செரிக்க இயலவில்லை
உன் நினைவை
– என்கிற போதும்
சற்றே தலைசாய்த்து
சிறு பார்வை பார்த்தாய்
மனம்
பெரு வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டு விட்டது
– என்கிற போதும்
“பேச வேண்டாம்”
என சொல்லிவிட்டு
ஒருநாள் முடிவதற்குள்
பரிதவித்து
“ஒரு வருடம் ஆனது போலிருக்கிறது”
என நான் சொல்ல
அருகில் ஒன்று சேர்த்து
“இல்லை 11 வருடம் போலிருக்கிறது”
என நீ சொல்ல
அனலில் விழுந்த புழுபோல் துடித்ததாக
இருவரும் உணர்ந்தோமே
ஞாபகம் இருக்கிறதா???
– என்கிற போதும் காதலின் அதீத மனோநிலையை அடையாளம் காணலாம்.
காதல், உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா? இது, நெடுங்காலமாக நிலவும் ஒரு கேள்வி. உடல் சார்ந்ததைக் காமம் என இக்காலத்தில் அழைக்கிறோம். உடல் சார்ந்ததாய் இருப்பது தரக் குறைவு என்றும் பலர் கருதுகின்றனர். இது, அவர்களின் சொந்தக் கருத்து அன்று. இந்தச் சமுதாயமும் ஊடகங்களும் அந்தக் கருத்தை ஆழமாக விதைத்துள்ளன. காதல், மனம் சார்ந்தது என்பது பெரும்பாலோர் கருத்து. அப்படியானால் மனம் மட்டுமே சார்ந்ததா? அவ்விதம் இல்லை. மனத்திற்கும் உடலுக்கும் காதலில் சரிசமமான இடம் உண்டு.
பார்வையாலோ, உடலாலோ தீண்டுதல், காதலுக்குத் தூண்டுதல் ஆகிவிடுகிறது. தொலைதூரத்தில் இருக்கிற, பார்க்காத இருவரிடையே காதல் சாத்தியமே. அவர்கள் தொலைபேசியில் குரல்வழியே, காதலைப் பகிரலாம். அந்த வசதியும் இல்லாதோர், கடிதம் மூலம் பகிர்கிறார்கள். இங்கும் கடிதத்தின் சொற்கள், குரலாக மாறி மனத்தில் ஒலிக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். எப்போது குரல் ஒலிக்கிறதோ, அப்போதே அது உடலோடு தொடர்பு உடையதாகி விடுகிறது. புகைப்படமோ, ஓவியமோ கூட உருவத்தை எடுத்துச் செல்லும் ஊடகங்களே.
பார்வையற்றவர்களிடையே கூட குரலும் தீண்டுதலும் முக்கிய இடம் பெறுகின்றன. செவிப்புலனும் பார்வையும் ஒரே நேரத்தில் இழந்தவர்களும் தீண்டுதலால் காதலைப் பரிமாறுகின்றனர். தொலைதூரத்தில் இருந்து கடிதம் கூட எழுதிக்கொள்ளாமல், எந்தத் தூதுவரும் இல்லாமல் இருவர் காதலிக்க முடியுமா? ஒரே நேரத்தில் ஒரே மாதிரி இருவர் சிந்தித்து உள்ளனர்; உரையாடியும் உள்ளனர். இதை டெலிபதி என்கின்றனர். அப்படிப்பட்ட காதலர் யாரேனும் உண்டா என்கிற தகவல் இல்லை. அப்படி இருந்தால் அது, மனம் மட்டுமே தொடர்புடைய காதல் என ஏற்கலாம்.
இதிலிருந்து நமக்குத் தெரிவது, உடலின் பங்கு சிறிதளவேனும் இல்லாமல் காதல் சாத்தியமில்லை என்பதே. ஆயினும் நம் மக்களின் புற மனத்தில் முத்தமிடுதல், தீண்டுதல், அணைத்தல் உள்ளிட்ட காதற் செயல்பாடுகள், தவறு என்று பதிந்துள்ளன. அவை இல்லாமல் காதல் சுவைக்காது.
என்
இடது கன்னம் உணர்வது
குளிர் தென்றலா
பனித்துளியா
உன் இதழா என்பதை
அறியும் முன்னே
விடைபெறும் கணம்
முடிந்து விட்டது
– என்ற வரிகளிலும்
செவ்விதழ்கள் பரிசளித்த ஒற்றைவரி
இப்போது விழிகளில் பார்
எத்தனை செவ்வரிகள்
– என்ற வரிகளிலும் தீண்டுதலின் பங்கு வெளிப்பட்டுள்ளது.
எத்தனை ஓசைகள்
இருந்தாலும்
உனது
சுவாசத்தின் சப்த
அலைவரிசை மாற்றம்
அறிந்து
உன் உணர்வின்
லயத்தைத்
தெரிந்து கொள்வேன்
– என்ற கவிதையும் தனியே குறிப்பிடத்தக்கது. மதுமிதாவின் பல கவிதைகளிலும் தனிமை, முக்கிய இடம் வகிக்கிறது.
தவிக்கத் தவிக்க
தனியே விட்டுச் சென்றாய்
கொடிது கொடிது
தனிமை கொடிது
அதனினும் கொடிது
இளமையில் தனிமை
– என்ற வரிகளும்
சிறிதும் இரக்கமின்றி
எதிர்வரும் தனிமை,
கழுத்தை நெரிக்கும்
ஆவேசத்துடன்
– என்ற வரிகளும் எதை உணர்த்துகின்றன என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். நினைவுகளின் ஊசலாட்டம், சுமை, தீவிரம் ஆகியவற்றைப் பல கவிதைகள் படம் பிடித்துள்ளன.
முரண்டு செய்து
அடம் பிடித்து
விடாமல் உன்னினைவைப்
பிடிவாதமாய் பற்றிக் கொண்டு
நேரம் காலம் புரியாது
தலை கீழாய்த்
தொங்குகிறது
வௌவால் மனசு
– என்றும்
மனம் ஒரு உடும்புதான்
விடாமல் உன்னையே
இறுகப் பற்றிக் கொண்டுள்ளதே…!
– என்றும் அது வெளிப்பட்டுள்ளது.
காதல் கவிதைகளை நூற்றுக் கணக்கில் எழுதித் தள்ளியிருக்கிறார், மதுமிதா. இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்கள் இதற்கென இரவும் பகலுமாய் உழைத்துக்கொண்டிருக்க, இங்கு இவர் தனியே ஆலாபனை செய்து வருகிறார்.
பொதுவாக ஒரு மென்மையான தொனியில், வலிக்காத வார்த்தைகளில், பொங்கிவரும் உணர்வலைகள் பதிவாகியுள்ளன. நல்ல கவிதைகள் பல இருந்தாலும் கூட, வெறும் சம்பவங்களும் விவரிப்புகளும் மிகுந்துள்ளன. நடையில் உரைநடை இழையோடுகிறது. அதீத உணர்வுகளைப் பேசும் போது கவிதை, தனித்த நடையைக் கையாளுவது நல்லது.
நட்பினும் பெரிது
காமம் கடந்தது
காதலும் அன்று
அன்பே
என்ன பெயர் வைக்கலாம்
நமதன்பிற்கு
– என்கிற கவிதையில், ‘நமதன்பிற்கு’ என்ற சொற்களைவிட ‘இதற்கு’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம்.
அறுபத்தி ஐந்து ஆண்கள்
இருபத்தி இரண்டு பெண்கள்
பதிமூன்று சிறுவர்கள்
ஐந்து நாய்
ஏழு காகம்
இரண்டு நண்டு
மூன்று குதிரை
கடந்து சென்ற
இவற்றைக் கேள்
காத்திருந்த
நேரம் முழுவதும்
உன்னை வாழ்த்தியதை
அவையேனும்
உனக்குச் சொல்லட்டும்
– என்று ஒன்றை எழுதியுள்ளார். இதில் அடிப்படைப் பிழை ஒன்று உள்ளது. காதலன் (என்று வைத்துக்கொள்வோம்); சொன்னபடி வரவில்லை, காத்திருக்க வைத்துவிட்டான்; அதற்காக அவனைக் காதலி திட்டவில்லை, வாழ்த்துகிறாள்; சரி அவள் திட்டவே முடியாத அளவுக்கு நேசம் வைத்திருக்கிறாள் என்றே இருக்கட்டும். படைப்பில் உள்ள ‘நேரம் முழுவதும்’ என்ற சொற்கள் உண்மையானவை இல்லை. ஏனெனில், தெருவில் கடந்துசென்றவற்றைத் துல்லியமாய்க் கணக்கெடுக்கிற காதலி, கணக்கெடுக்கும் நேரத்தில் காதலனை வாழ்த்தவில்லை. வாழ்த்திக்கொண்டே கணக்கு எடுத்திருந்தால் கணக்கு துல்லியமானது இல்லை. இரண்டு வேலைகளை அவள் ஒரே நேரத்தில் செய்ய வல்லவள் எனக் கொண்டாலும், முழு மனத்தையும் காதலனிடம் அவள் செலுத்தவில்லை எனப் புலனாகிறது. எனவே, ‘நேரம் முழுவதும்’ என்ற சொற்கள், அவளுக்கு எதிராக இயங்குகின்றன. அதிலும் காதலனுக்குக் காதலி மேல் நம்பிக்கை இல்லையா, என்ன? கடந்து சென்றவற்றிடம் எதற்காகக் கேட்கவேண்டும்?
கவிதை, உணர்வுத் தளத்திலிருந்து அறிவுத் தளத்திற்குச் செல்லும்போது இத்தகைய சிக்கல்கள் வருவது இயல்பு. இவற்றை மதுமிதா, கவனிக்கவேண்டும்.
காதல் கவிதைகளைத் தவிர, மதுமிதா, பொதுக் கவிதைகளும் பல இயற்றியுள்ளார்.
கேட்ட கடைகளில் எல்லாமே
சில்லரை இல்லை என
ஒரே பதில்தான் கிடைக்கிறது
குறைந்த பட்சம்
ஒரு ரூபாய்க்கான சாக்லேட்டாவது
வாங்காதவரை
– என்றும்
எந்த வெளிச்சத்தில்
எந்தக் கோணத்தில்
எடுத்தாலும்
கண்ணாடியில்
தோன்றும் அழகை
எப்போதும்
பிரதிபலிப்பதில்லை
கேமெரா பிடித்துத் தள்ளும்
எந்தப் புகைப்படமும்
– என்றும்
கோடி புண்ணியம்
கோபுர தரிசனம்
காலம் காலமாய்
சந்ததிகளுக்கான இடங்களைப்
பாதுகாத்தவண்ணம்
வரிசைகளில்
ஒரு தலைமுறையினர்
தட்டுக்களை ஏந்தியபடி
கோபுர வாசலில்
கோபுர தரிசனம்
கோடி புண்ணியம்
– என்றும்
வேப்பம் பூவின் வாசம் சேர்த்து
தடதடத்தவண்ணம்
ஓடும் லாரியின் ஓசையைச் சுமந்து
செல்லும் காற்றின்
அதிர்வுடன் ஒத்திசைந்து ஆடும்
திரைச் சீலை
எதனைக் காட்டலாம்
எதனை மறைக்கலாம்
என்னும் பரிதவிப்புடன்…
– என்றும்
காற்று வருடிவிடுகிறது
பெயர் பொறிக்கப்பட்ட
மரத்தின் வடுவை
– என்றும் அழகிய, பொருள் உள்ள கவிதைகளை இயற்றியுள்ளார்.
மதுமிதா, சுதந்தரப் போராட்டத் தியாகி அரங்கசாமி ராஜாவின் பெயர்த்தி. தென்காசியில் பிறந்து, இராஜபாளையத்தில் வாழ்ந்து, சென்னையில் வசிக்கிறார். மெளனமாய் உன்முன்னே… என்ற கவிதை நூலைப் படைத்துள்ளார். பர்த்ருஹரியாரின் தத்துவங்களைச் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அது, நீதி சதகம் என்ற நூலாக வெளிவந்துள்ளது. இவர், சமூகப் பணிகளிலும் ஈடுபாடுள்ளவர்.
பொறுமை பழகிட
கோவிலில்
அடிப் பிரதட்சணம்
செய்திட வேண்டாம்
நகரச் சாலையில்
சிக்னலில்
காத்திருந்தால் போதும்
– என்கிறார் மதுமிதா.
பச்சை விளக்கு எரிகிறது. பயணத்தைத் தொடருங்கள்.
மௌனமாய் உன் முன்னே வெளியீடு: தமிழ்நெஞ்சம் பதிப்பகம் 59, rue des Entrechats, 95800 Cergy., France