“மீண்டும் பூக்கும்” என்கிற நாவல் எனக்கு வாசிக்க கிடைக்கையில் அதை எழுதிய நாவலாசிரியை என் சொந்த ஊரில் மணமுடித்தவர் என்பதால் அதை ஆவலுடன் நேசித்து வாசிக்க ஆரம்பித்தேன்.
இதற்கு முன் அபிவிருத்தீஸ்வரம் ஜுனைதா எழுதிய “சாந்தி வயல்” , சல்மாவின் “மூன்றாம் ஜாமங்களின் கதை” நான் வாசித்து முடித்த இஸ்லாமிய பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் என்பது நினைவு!?
பொதுவாக புத்தகம் வாசிப்பது என்பது இப்போது மின்மீடியாக்கள் ஆக்ரமிப்பில் எனக்கும் குறைந்தே போயிருக்கிறதென்பேன்…
சரி, எப்படி துவங்குகிறது இந்நாவல் என்று நான் வாசிக்கத்துவங்கிய நிமிடங்களில்தான் உணர்ந்தேன் இதை வாசித்துமுடிக்காமல் மூடி வைக்க முடியாதென்று !
‘ஸக்கியா’ என்கிற ஒரு ஏழை அபலைப் பெண்ணின் வாழ்க்கை வட்டத்தை வைத்தே சுழுல்கிறது முழு நாவலின் சாரமும்.
ஸக்கியாவின் மணவாழ்க்கையில் வாய்த்த ‘அலி’ என்கிற குடிகார கேங்கர் கணவன் எப்படி தன் துர் நடத்தையால் ஸக்கியாவின் வாழ்க்கையை சீரழிக்கிறான் என்பதை வாசிக்கும்போது மனம் கவலைபடுகிறது . அதன் பின் அவளின் நிலை என்ன? ஸக்கியா வேறு இடம் தேடிப்போனாளா? இந்த வேதனையில் இருந்து மீண்டாளா என்பதுதான் முழு கதையோட்டத்தின் கரு ஆகும் !
முழு நாவலும் தமிழ் இஸ்லாமிய கலாச்சார சூழல் நடையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதும் ஒரு சிறப்பு.
பெண்ணாக பிறந்தவள், அதுவும் ஏழை அனாதையாக பிறந்தால் அவள் எவ்வளவு துன்பத்தை தன் வாழ்க்கையில் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் துல்லியமாக நாவலாசிரியை இந்த கதையோட்டத்தில் விவரித்திருப்பதை வாசிக்கையில் என் மனதை மீறி இரக்கத்தால் இமைகள் இரண்டிலும் விழி நீர் துளிகள் முட்டிக்கொண்டது என்பது நான் மறைக்க முடியாத உண்மை!
எழுத்துச்சிற்பி ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்கள்” நாயகி ‘கங்கா’ போல் இதில் எழுத்தாளினி பானு ஹாரூன் அவர்களுக்கு ‘ஸக்கியா’ !
அஞ்சம்மா, ஜம்ஷத், ரஃபியம்மா, அர்ஷியா எனும் இதில் வரும் கதாபாத்திரங்கள் நம்மோடு சேர்ந்தே உயிரோட்டமாக வாழ்ந்து உலவுகிறார்கள் மனதில் இந் நாவல் வாசிக்கையில் !
இந்த நாவலாசிரியையின் முன் மரபணு வம்சத்தில் மூத்த தலைமுறையில் எவரோ தமிழறிஞர்களாக இருந்திருப்பார்களோ ? மனுஷி யதார்த்த மொழி நடை இலக்கியத்தில் பின்னி எடுத்திருக்கிறார் !
வடகரை அரங்கக்குடியில் … மறைந்த அறிஞர் அரசியல் ஞானி வடகரை எம்.எம்.பக்கர் அவர்களின் மருமகளும், பிரபல யுனானி டாக்டர்.எம்.ஏ.ஹாரூன் அவர்களின் மனைவியுமாவார் இந் நாவலாசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நாவல் முஸ்லிம் பெண்கள் மாத இதழான ‘நர்கிஸ்’ பத்திரிக்கையில் தொடராக முன்னர் வெளிவந்தாகும்! அப்போது இதை வாசிக்கத் தவறியவர்களுக்கு இப்போது இது நாவலாக முழுநூலாக மறு அச்சில் கிடைத்திருப்பது வாய்ப்பு!
இதில் இந் நாவலாசிரியையே மீண்டும் பூக்கும் உந்துதலில் சில ஓவியங்களை வரைந்திருப்பதை தவிர்த்திருக்கலாம்! ஏனெனில் இப்போதைய கணனி யுகத்தில் இது சற்று பழமையாக தெரிகிறது.
இந் நாவலை வாசித்து முடித்த பின் இவரின் தமிழார்வத்திற்காக இதை எழுதியவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க நினைத்தேன். ஆனால் நான் வாழ்த்தாமலேயே வாழும் வல்லமை இவர் எழுத்துக்களுக்கு இருக்கிறது!
நூல் வெளியீடு / கிடைக்குமிடம்
அபு பப்ளிகேஷன்ஸ்
Dr.M.A.ஹாருன்
4/321 – 1, தவ்லத் தெரு
வடகரை – 609 314
தமிழ்நாடு – இந்தியா
11 Comments
பஷீர் முகமது · நவம்பர் 10, 2016 at 22 h 20 min
மீண்டும் பூக்கும் என்கிற நாவல் வாசிக்க கிடைக்கவில்லை என்ற ஏக்கம் எங்களுக்கு வந்துவிட்டது. அப்படி ஒரு கதைசுருக்கம் தந்துள்ளீர்கள்.
இனி அது மணம் வீசும் பூக்களாக மக்கள் மனதில் பூத்து குலுங்கட்டும்!
எம்.எம்.தீன் · நவம்பர் 10, 2016 at 22 h 29 min
இசுலாமியப் பெண்மணி எழுதிய ஒரு நாவல் குறித்து அழகான விமர்சனத்தை முன் வைத்துள்ளமை அழகும் நேர்த்தியும் கொண்டது.
அக்காவாக எனக்கு முகநூலில் அறிமுகமான பானு ஹாரூனின் மீண்டும் பூக்கும் நாவல் எனக்கு கிடைக்கவில்லையே என்ற கவலையை நீக்கிடும் வகையில் இவ்விமர்சனம் அமைந்துள்ளது.
ஸக்கியா (வானத்தில் வரும் அசரீரி அல்லது ஞானஅறிவு) எனும் பாத்திரப்பெயரை தேர்ந்து பயன்படுத்தியுள்ளார் என்பது விளங்குகிறது.. இதிலிருந்து அந்த கதாபாத்திரம் எவ்வளவு பேசும் என தெளிவாகிறது.
நூலைப்பெற்று படிக்கும ஆவலில் உள்ளேன்.
சம்சுல் ஹமீது சலீம் முகமது · நவம்பர் 10, 2016 at 22 h 33 min
இந்த நாவலை படிக்காதவர்களுக்கும் வரிகளை விழிகள் வழியே ஏற்றிக் கொள்பவர்களுக்கு நாவலுக்கான கருவும் அதன் சாராம்சமும் எளிதில் புரிந்துவிடும்.
‘விழி நீர் துளிகள் முட்டிக்கொண்டது’ எனும் வார்த்தை பிரயோகமே நம்முள் குடியேறியதை எளிதாக அழகாய் உணர முடிகிறது.
கற்றாறை போற்றுதல் ஒருவகை, விமர்சிப்பது மற்றொரு வகை அதையும் தாண்டி ‘காமுறுதல்’ என்ற பதம் தமிழில் உண்டு சொல்லாடல் இந்த வகையை சார்ந்ததாக இருக்கிறது.
எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஒருவகை எனில், சமூகம் சார்ந்த கருத்துக்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் அதனினும் சிறந்த இன்னொரு வகை, அந்த இரண்டையுமே நாவல் எழுத்தாளருக்கு வழங்கியுள்ளது தனிச்சிறப்பு.
நாவலாசிரியையின் எழுத்தாளுமையை அண்ணனுடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.
அப்துல் ஹமீது, அம்பை · நவம்பர் 10, 2016 at 22 h 35 min
நாவல் படிப்பது ஒரு கலையே… இன்றைய நொடிப்பொழுது வாழ்வியல் முறையில் நாவல் படிப்பது சாத்தியமற்றது. அப்படி ஆர்வமுள்ள படைப்பாளிகள் படிப்பது என்பது மட்டும் சாத்தியம்.
பாடலாசிரியர் அஸ்மின் · நவம்பர் 10, 2016 at 22 h 36 min
நாவலாசிரியருக்கு வாழ்த்துக்கள்!
நூர் முஹமது · நவம்பர் 10, 2016 at 22 h 37 min
மாஷாஅல்லாஹ்.புத்தகங்கள் வாசிப்பதையே மறந்துவிட்ட இந்தக்கணிணியுகத்தில் மீண்டும் புத்தகங்களை குறிப்பாக இந்தநாவலை படிக்கும் எண்ணத்தை தங்களின் விளக்கம் ஏற்படுத்திவிட்டது.
தமிழ்நெஞ்சம் அமின் · நவம்பர் 10, 2016 at 22 h 39 min
எனது அன்புக்குரிய சகோதரி இன்னும் பல நூல்களை எழுதி தமிழுக்கு வளம் சேர்ப்பார் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்!
முஹமது ஃபுமி · நவம்பர் 10, 2016 at 22 h 41 min
கதை கருவை வாசித்ததில் இருந்து இந்த நாவலை வாசித்தே ஆகவேண்டும் என்ற ஆவல் வந்திருச்சு… நாவலாசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!
ஜெ.பானு ஹாருன் · நவம்பர் 10, 2016 at 22 h 43 min
“வரைவதில் நீண்ட காலம் டச் விட்டுப்போயிற்று…”. “லைன் டிராயிங் நீயே நாலஞ்சு போட்ரு… பரவாயில்லை …” என்று அவர் சொன்னதினாலேயே கோடுகளை மெனக்கெட்டு இழுக்க வேண்டியதாயிற்று… பழமையையும் புகுத்தச்சொல்லி வற்புறுத்தினார்…
என் எழுத்துக்களை ஊக்குவிக்கும் சகோக்கள் அனைவருக்கும் மிக்க அன்பும், நன்றியும்!
கே.தேன்மொழி தேவி · நவம்பர் 13, 2016 at 5 h 25 min
அற்புதமான இணைய தளம் இன்றுதான் அரியத் தெரிகிறேன். மிக்க மகிழ்ச்சியும் அன்பும் நன்றியும்.
நாவலுக்கு அழகான அறிமுக உரை தந்துள்ளீர்கள். சென்னையில் எங்கு கிடைக்கும் என்பதை தெரிவித்தால் நலம். நீங்கள் சொன்னதுபோல் மின் மீடியாக்களின் ஆக்ரமிப்பில் நாம் புத்தக வாசிப்பை தொலைத்து விட்டோம் . அதே மின் மீடியா நமக்கு சிறந்த புத்தகங்களை வாசிக்க அறிமுகப் படுத்துகிறது என்பதிலும் மகிழ்ச்சியே.. வாசகர்களுக்காக சிறந்ததை தேர்வு செய்து தரும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ஜெ.பானு ஹாருன் · நவம்பர் 15, 2016 at 14 h 05 min
நூல் கிடைக்குமிடங்கள்:
பஷாரத் பப்ளிஷர்ஸ், சென்னை -1. தொலைபேசி : 044 2522 5027 / 28
ஸலாமத் பதிப்பகம் , சென்னை -1. தொலைபேசி : 044 42167320, அலைபேசி : 9600012039