தித்திக்கும் தேன்மழைதான் தேடியின்பம் பெற்றிடுவீர்!
எத்திக்கும் காத்தருளும் ஏழ்பிறப்பும்! – முத்தாம்
திருப்புகழுக் கொப்பான தேதுமில்லை! வாழ்வில்
உருப்பெற்று  வாழும் உயிர்!

சிங்காரத் தண்டமிழின்  சீர்கண்டு மெய்சிலிர்க்கும்!
மங்காத வாழ்வளிக்கும் மண்மணக்கும்! – தங்கத்
திருப்புகழால் சிந்தைக்குள்  தேன்பாயும்! நாளும்
பெருக்கெடுக்கும் நல்லின்பப் பேறு !

செந்தமிழ்க் காவலனைச்  சிந்தையுள் வைத்துப்பா
முந்துதுவே இன்பத்துள்  மூழ்கடித்து! – கந்தன்
அருள்பெற்று வாழ அனுதினம் பாடு!
திருப்புகழால் தீரும் துயர் !

கந்தனையும் கண்ணாரக்  கண்டிடலாம்  வாழ்நாளில்!
சிந்தையையும் உய்விக்கும் சீராக்கி! – வந்து
திருப்புகழைப் பாடுங்கள்  தீவினைகள் ஓடும் !
அருள்பெற்று வாழும் அகம் !

பன்னிருகை வேலவனே  பாடிடும்நன் நாவினிலே
இன்னமுத வார்த்தைதனை  இட்டதனால்! – அன்பே
அருணகிரி நாதரையும் ஆட்கொள்ளத்  தேனாய்ப்
பெருகியதே யாம்பெற்ற பேறு!

பாலுண்டு தேனுண்டு பாரினிலே யாவுமுண்டு!
காலுண்டு கையுண்டு கண்ணுமுண்டு! – நாலும்
அறிந்திங்கு வாழ்ந்தாலும் அன்பில்லாக் காட்டில்
வறியோர்க்கும் கிட்டும்  வழி!