கண்டாங்கி சேலைகட்டி வாருங்கடி – வாருங்கடி
கவிராஜன் பேத்திபுகழ் பாடுங்கடி.
செண்டாடும் குழலழகி கணவரவர் – கணவரவர்
ஸ்ரீராமன் புகழைச்சொல்லி வாழ்த்துங்கடி.
மூவேந்தர் பரம்பரைகள் ஆண்டநிலம் – ஆண்டநிலம்
முக்கனியும் சர்க்கரையும் விளையும்நிலம்.
பாவேந்தர் கவிமழைகள் பொழிந்தநிலம் – பொழிந்தநிலம்
பார்முழுதும் பலரும்வந்து புகழ்ந்தநிலம்.
வரப்பெல்லாம் முத்திருக்கும் வயல்களிலே
வைரமணிக் கொத்திருக்கும் வழிகளிலே
சிறப்பெல்லாம் பெற்றிருக்கும் ஊர்களடி
ஸ்ரீராமன் வந்துதித்த தேசமடி.
செந்தூரப் பொட்டழகி பாட்டியடி – பாட்டியடி
ஸ்ரீராமன் தன்னை பெற்ற தேவியடி.
கவிநாட்டி புகழ்படைத்தார் பாட்டனவர் – பாட்டனவர்
கனிமொழியால் பெருமைபெற்றார் பாட்டியவர்
முன்னூறு நாள்சுமந்த தாயவள்தான் – தாயவள்தான்
முத்தமிழாய் வீசுகின்ற தென்றலடி.
கண்ணாறு பட்டுவிடும் செல்லத்துக்கு – செல்லத்துக்கு
கறுப்புப்பொட்டு கன்னத்திலே வையுங்கடி.
தொடுவானம் தோற்றுவிடும் இதழ்சிவப்பு – இதழ்சிவப்பு
தொலைநோக்கில் ஒளிகாட்டும் கண்கருப்பு
அடிவானம் கறுக்குமுன்னே வாருங்கடி – வாருங்கடி
அவளழகை பெருமைகளை கூறுங்கடி.