வெடிதனை வெடிக்க வேண்டாம் – வான்
வெளிதனைக் கெடுக்க வேண்டாம்!
செடிகொடி மரங்கள் தன்னில் – வாழும்
சிட்டினை அழிக்க வேண்டாம்!
விலங்குகள் பறவை எல்லாம் – பெரும்
வெடியினால் வெறுண்டே ஓடும்!
அளவிலாத் துன்பம் கொள்ளும் – வாழ
அஞ்சிடும்! அழிந்து போகும்!
வெடிதனைச் செய்வ தாலே – பெரும்
விபத்துமே நடக்கு தின்று!
வெடித்தொழில் தம்மை விட்டு – இயற்கை
விவசாயம் செய்ய வாரீர்!
கந்தக வெடிம ருந்தை – நாம்
கண்டதும் தவிர்க்க வேண்டும்!
வெந்திடும் உயிர்கள் தம்மை – நாம்
விரைந்துமே காக்க வேண்டும்!
சூழலைக் காப்ப தற்கு – மண்
சுரத்தினைத் தீர்க்க வேண்டும்!
ஞாலமும் நிலைத்து நிற்க – என்றும்
நல்லன செய்ய வேண்டும்!
மண்ணினை மாசாய் ஆக்கும் – தீய
மத்தாப்பு வெடியை நீக்கு!
வண்ணமாய் வாழ்க்கை வாழ – இவ்
வையத்தை வளமாய் ஆக்கு!