உனக்காகக்
காத்திருக்கும் கணங்கள்
வீணாகிவிடக் கூடாது
என்பதற்காக
உனக்கான கவிதைகளை
எழுதிக் கொண்டே இருக்கிறேன்.
எதைக் கண்டாலும்
கிடைக்கிறது
உனக்கான கவிதை.
உன்னை
நினக்கும்போதெல்லாம்
உடனே
பரிசாகத் தருகிறாய்
கவிதைகளை.
உன்னைப் பற்றிய
என் கவிதை
அழகானது
உன்னைப்போல.
கடல் நான்
கவிதை அலைகளை
உன்னை நோக்கி
அனுப்பிக் கொண்டே இருப்பேன்.
என் எல்லாப் பாடல்களும்
உனக்கான
கரையிலேயே நிற்கின்றன
கிளிஞ்சல்களைப்
பொறுக்கிக் கொண்டு.
உனக்கான
கவிதை தேடி
மொழிக் கடலில்
முத்துக் குளிக்கையில்
மூழ்கிப் போனேன்.
முனை மழுங்கிய
என் எழுதுகோல்
தடுமாறுகிறது
ஆனாலும்
என் எல்லாக் கவிதைகளிலும்
உயிரோட்டமாய்
உலவுகிறாய் நீ.
உன் மீதான
என் காதலை
ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்
என் கவிதைகள்
குப்பைகள்.
எங்கே
எழுதி முடிக்கின்றேனோ
அங்கிருந்து துவங்குகிறது
உனக்கான
இன்னொரு பாடல்.