நீலவானில் நீந்துகின்ற நிலவே நிலவே – என்
நித்திரையைக் களைத்ததென்ன நிலவே நிலவே!
நீலமலர் ஆடைகட்டி வந்தாய் நிலவே – என்
நெஞ்சத்தில் மகிழ்ந்தாட வருவாய் நிலவே!
தனிமையிலே தவழ்கின்ற தங்க நிலவே – உன்
தாகத்தைத் தீர்த்துவைப்பேன் வருவாய் நிலவே!
நனிசொட்டும் பார்வையிலே நனைந்தேன் நிலவே – உன்
நறுங்கூந்தல் அழகினிலே கரைந்தேன் நிலவே!
ஏக்கத்தில் திரிகின்ற என்றன் நிலவே – உனை
எப்போதும் நான்காண வேண்டும் நிலவே!
தேக்கித்தான் வைத்திட்ட ஆசைக் கனவை – நாம்
தினந்தோறும் பேசிடலாம் வருவாய் நிலவே!
அலைபாயும் மேகத்தில் தவிக்கும் நிலவே – நீ
ஆகாயம் தனில்ஏறி வருவாய் நிலவே!
கலையானப் பெண்ணாக உலவும் நிலவே – என்
கவலைக்கு மருந்தாக வந்தாய் நிலவே!
வானமென்னும் கடல்தன்னில் விளைந்தாய் நிலவே – நீ
வலைவீசிக் கண்ணாலே அழைத்தாய் நிலவே!
வானம்பா டியாகவந்த வண்ண நிலவே – உன்
வரம்வேண்டிக் காத்திருப்பேன் அருள்வாய் நிலவே!