இன்று விடுதலை. சிறையை விட்டு வெளியேறப் போகிறார் சேகர்.
அடைப்பட்ட வாழ்வை 18 ஆண்டுகள் அனுபவித்து விட்டார். பெருமூச்சு உதிர்ந்தது.
அவரும் படித்தவர். பட்ட தாரி. சக நண்பர்கள் பெரிய பதவியில் இருப்பதை அறியும் பொழுது… அவரையறியாமல் மனசு கலங்கும்.
இவ்வளவு காலத்திற்குப் பிறகு, சிறையை விட்டு வெளியேறி… வீடு, குடும்பம், வாழ்க்கை… என்பதை நினைக்கும் பொழுது… அவருக்கு பயமாக இருந்தது.
கூப்பிட்டு அனுப்பிய ஜெயிலரின் முன் நின்றார் சேகர்.
“சேகர்! நீங்க இன்னிக்கு வெளியே போக வேண்டிய நாலுன்னு தெரிஞ்சதும், என் மனசு எப்படி இருந்தது தெரியுமா? ” என்றார் ஜெயிலர்.
அவர் அதிகாரியாக இங்கு வந்த பிறகு சேகரின் மேல் அன்பும் மரியாதையும் காட்டி வந்தார்.
ஒரு நாளும் அறை விதி யை மீறியதில்லை. நேர்மைவாதி!
” இவரெல்லாம் சிறைக்கு வர வேண்டியவரா?” என்று ஜெயிலரே பல முறை நினைத்திருக்கிறார்.
” அய்யா… நீங்க சொல்றது வாஸ்தவம்தான்… ஆனா, எது நடக்கணும்னு இருக்கோ… அது தானே நடக்கும்?.. ” எனக் கேட்டு தழுதழுத்தார்.
“சேகர்! என்ன இது? ஏன் கலங்குறீங்க? எம்.ஏ. எம்ஃபில் முடிச்ச நீங்க… அதுக்கேத்த வேலை கிடைக்காம… ஜெயில் வார்டனா வந்தீங்க. காலம் ஓடிப் போச்சு. வயசுங்கறது யாரை கேட்டு ஆகுது?
… ரிடையர் ஆகி சிறையை விட்டுப் போற நீங்க… மன நிறைவோட போய்ட்டு வாங்க… ”
அவருக்குரிய மாலை மரி யாதைகளுடன் ஜெயிலர் அனுப்பி வைக்க சேகர் சிறையை விட்டு வெளி யே வந்தார்.
அவரைப் பொறுத்தவரை அது விடுதலைதான்!