அம்மா, ஏம்மா நான் இவ்வளவு கருப்பா இருக்கேன்? கடந்த இரண்டு ஆண்டுகளில் புவனா இதே கேள்வியைப் பல முறை கேட்டு விட்டாள். தான் சிவப்பாக இல்லையென்று அவளுக்குக் கழுத்து வரை குறை.

ஒரே மகளின் மனம் அவளுக்குக் கண்ணாடியின் பிரதி பிம்பமாகவே தெரிந்திருந்தது. புவனாவின் வயதில் இத்தகைய எண்ணங்கள் தோன்றுவது மிகவும் இயற்கை. பதினைந்து வயதில் தன்னைப் பற்றிய எண்ணங்கள் அதிகம் இளையர்களுக்கு மேலிடுவதும் வந்தனா அறிந்ததே. தன்னை மற்றவர்கள் கவனிக்கிறார்களா, தான் அவர்கள் கண்ணுக்கு எப்படியிருக்கிறோம் மற்றும் சக மாணவிகளை ஒப்பு நோக்கும் போது, தான் பார்க்க எப்படியிருக்கிறோம் என்றெல்லாம் மனதில் ஒடும் தான். வந்தனா இவற்றை யெல்லாம் உணராமலில்லை. ஆனால், சில வேளைகளில் அவளும் பொறுமை யிழப்பதுண்டு. அத்தகைய தருணங்களில் அவள் சட்டென்று தன் கோபத்திற்குக் கடிவாளமிட்டு விடுவாள். புவனாவின் பிடிவாதம் படிப் படியாகக் கூடிக் கட்டுக் கடங்காமல் போகுமே என்று பயந்து விஷயத்தை வளர்த்தாமல் சட்டென்று பேச்சை மாற்றுவாள். இதையுணர்ந்து பிடிவாதமாய் அதையே பேசுவது புவனாவின் புதுப் பழக்கமாகி இருந்தது. முன்னுக்கும் போக விடாமல் பின்னுக்கும் போகவிடாமல் மகள் தொல்லைப் படுத்தும் போது வந்தனா செய்வதறியாது விழிப்பாள்.

புவனாவும் விடாமல், “மாமா, சித்தி எல்லாருமே செவப்பா இருக்கும் போது நீங்க மட்டும் ஏம்மா கருப்பா இருக்கீங்க. ஏன்? அப்பாவும் கருப்பா இருக்காரு. அதான் நானும் கருப்பா பிறந்திருக்கேன், இல்ல” என்று புவனா சொன்னதும் வந்தனாவின் கோபமும் வேதனையும் கட்டுக் கடங்காமல் போனது. புவனாவின் முகத்தில் முன்பெல்லாம் இருந்த பரிதாபம் போய் சலிப்பே இப்போது எஞ்சி இருந்தது.

“ம், சரி, இப்போ என்ன சொல்ற, ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு போன வாரம் மாதிரி அடம் பிடிச்சிக் கிட்டு வீட்டுலேயே இருக்கப் போறீயா? சொல்லு புவனா”, வார்த்தைகளில் பொறுமையை வலுவில் வரவழைத்துக் கொண்டு சாதாரணமாகக் கேட்க முயன்றாள். வந்தனா கண்டிக்க முயல்வதற்குள், “சரி சரி, விடும்மா. வா புவனா, இன்னிக்கி நானே உன்னை ட்ராப் பண்றேன். நீ ரெடியா? ம் ,வா, போகலாம்”, என்று நிலமையை ஒருவாறாக எடை போட்டு, வழக்கம் போல புவனாவின் அப்பா தன் செல்ல மகளை அழைத்துக் கொண்டு நகர்ந்ததும், அப்படியே இருக்கையில் தொப்பென்று உட்கார்ந்தாள்.

உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து படிப் படியாக புவனாவினுள் இந்த ‘நிறம்’ என்ற அரக்கன் புகுந்து விட்டான். யார் ஒருவரும் தனது தாய் தந்தையைத் தேர்ந்தெடுக்க முடியாததைப் போலவே தனது நிறத்தையும் தேர்ந்தெடுக்கவியலாது. தன்னை விட அதிக உயிரியல் அறிவுள்ள புவனாவிற்கு ஏன் இந்த உண்மை புரியவில்லை என்று தான் வந்தனாவிற்குப் பெரும் புதிராய் இருந்தது. இந்தச் சர்ச்சை பெரும்பாலும் காலை வேளைகளில் தான் எழும். சீருடையை உடுத்திக் கொண்டு கண்ணாடி முன்னால் தலை சீவும் போது புவனா ஆரம்பிப்பாள். கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்ததுமே புவனா தன் அமைதியை இழந்து விடுவாள். அவளுள் ஏதோ துர்தேவதை புகுந்து கொண்டதுவோ என்று தான் வந்தனா எப்போதும் மலைப்பாள். சமீபகாலங்களில் இது போன்று நடக்காமல் இருப்பதே அரிதாகி விட்ட நிலை.

பதினைந்து வயதுப் பெண் பள்ளிக்குப் போக மாட்டேனென்று அடம் பிடிப்பதை வெளியில் யாரிடமும் சொன்னால் நம்பக் கூட மாட்டார்கள். நம்பினாலும் ஏளனமாகச் சிரிப்பார்கள். ‘நீயே உன்னை வெறுத்தால் மற்றவர்கள் மட்டும் உன்னை மதிப்பார்களா?’, என்று எத்தனை முறை கூறினாலும் புவனாவிற்குப் புரியாது. இறைவனின் படைப்பில் ஒவ்வொரு உயிரும் ஒருவிதம், அத்தகைய வேறுபடுகளே உலகில் ஒரு நடு நிலையையும் அழகையும் கொடுத்துள்ளன என்பதையும் புவனாவே நன்கறிவாள். அவளது பள்ளிக் கட்டுரைகளில் வந்தனா அக்கருத்துக்களைக் கண்டிருக்கிறாள். ஆனால், ஏனோ தனக்கென்று வரும் போது புவனாவின் மனம் உண்மைகளை ஏற்க மறுத்தது.

நண்பர்களுக்கும் அவர்களுடைய அபிப்பிராயங்களுக்குமே புவனா அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருந்தாள். அதிக நெருக்கம் கூட இல்லாத வகுப்புத் தோழனோ தோழியோ கூறும் கருத்துக்கள் புவனாவிற்கு வேதவாக்காயின. இரவு பகலாக அதையே நினைத்து நினைத்துப் பெரும்பாலும் மருகினாள். தன் மகள் மகிழவும் அவர்கள் அவ்வப்போது ஏதேனும் கூற மாட்டார்களா வென்று அப்போதெல்லாம் வந்தனா பாவம், ஏங்கினாள். “அவள் வயது அப்படிம்மா, நாம ரெண்டு பேரும் ரெண்டாம் பட்சமாகிப் போனோம். ஆனா, நீயும் சரிக்குச் சரியா சண்டை போட்டா ஒரு பலனும் இருக்காது. வெறுப்புத் தான் வளரும். அன்பாலயும் பாசத்தாலயும் தான் அவளை உணர வைக்கணும். முள்ளு மேல விழுந்த சேலையைக் கிழியாம எடுக்கணும்னா நாம பொறுமையாத் தான் செயல் படணும்”, என்று அந்நாட்களில் மதியம் தொலை பேசியில் வந்தனாவிற்குத் துணைவரின் அறிவுரை வரத் தவறாது.

பொறியியலில் முதுகலைப்பட்டம் பெற்றும் கூட வந்தனா வீட்டிலேயே இருப்பது தன் ஒரே குழந்தையான புவனாவிற்காகத் தான். ஆனால் பல சமயங்களில் அவளது அக்கறையை புவனா தவறாகவே புரிந்து கொண்டாள். தன்னை அம்மா தேவைக் கதிகமாகக் கண்காணிப்பதாகவே அவள் எண்ணினாள். இதுவும் அவளது தோழிகளின் கருத்து. எப்போதும் போல தோழிகளின் இக்கருத்தைத் தன் கருத்தாகக் கொண்டாள் புவனா.
புவனாவின் கண்ணோட்டத்தில் அவளது பெற்றோர் அதிலும் குறிப்பாக அவளது அம்மா அவளுக்குச் சுதந்திரமே கொடுப்பதில்லை. மிகவும் பழைய பஞ்சாங்கமாக இருக்கிறார்கள். தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அவளுக்கு வீட்டில் உடன் பிறந்தவர்களும் யாரும் இல்லை. தன் எண்ண ஓட்டங்களைத் தன் தோழிகள் புரிந்து கொள்கிறார்கள். பெற்றோர் அவளுடைய எல்லா விஷயத்திலும் தலையிடுகிறார்கள். அம்மா ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் கேள்விகள் கேட்பது அவளுக்கு எரிச்சலைத் தந்தது.

“அம்மா எனக்கு ரொம்ப போர் அடிக்கிது வீட்டுல. உங்களுக்கு ஏம்மா என் நிலமை புரிய மாட்டேங்குது. நான் என் பிரெண்ட்ஸோட வெளியில போன என்னம்மா?” புவனா அடிக்கடி எரிச்சலுடன் கேட்கும் கேள்வி. வெளியில் அவர்களுடன் போகவே வெண்டாமென்று ஒரு நாளும் வந்தனா சொன்னதில்லை. நேரம் காலமில்லாமல் அவர்கள் ஊர் சுற்றுவதை போலத் தானும் சுற்றவேண்டுமென்று அவள் ஆசைப்பட்டால் மட்டுமே கட்டுப்படுத்தவோ கண்டிக்கவோ செய்தாள்.

மகளின் மேல் உயிரையே வைத்திருக்கும் அப்பாவிற்கு புவனாவின் மேல் சில சமயம் கோபமும் வருவதுண்டு. போன ஆண்டு இறுதியில் ஒரு முறை புவனா தன் கூந்தலைக் கட்டையாக வெட்டிக் கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள். அதற்கு மட்டும் வந்தனா சம்மதிக்கவில்லை. விஷயம் காதில் விழுந்ததுமே கையை ஓங்கிவிட்டார் தந்தை. சட்டென்று வந்தனா தடுத்திருக்காவிட்டால் புவனா அன்று அடி வாங்கியிருக்க வேண்டியது. உன்னோட முடி நீளமா இருக்கறதால தான் நீ இன்னும் அதிகம் குள்ளமாகத் தெரியற. “யு மஸ்ட் கட் யுவர் ஹேர் லா’’, என்று சக மாணவனான ஒரு சீனக் குறும்பன் சொல்லி விட்டானாம். அதை அவள் தோழிகளும் ஆமோதித்தனராம். முன்பு தொடக்கப் பள்ளியில் பெருமையாக நினைத்த தன் நீண்ட கருங் கூந்தலை உடனே புவனா வெட்டத் துடித்தாள். உடை மற்றும் அலங்காரப் பொருள்கள் எதையும் பெற்றோர் தேர்ந்தெடுத்தால் அதை நிராகரிக்கவே துடிக்கும் புவனா சக மாணவர்களின் சொல்லுக்கு அத்தனை மதிப்பு அளித்தாள்!

மூன்று வருடங்களுக்கு முன் புவனா தன் முழுத் திறமையையும் படிப்பில் காட்டிப் பள்ளியின் சிறந்த மாணவிகளுள் ஒருத்தியாகத் தான் திகழ்ந்தாள். படிப்பு மட்டுமே அவள் மனதை நிறைத்திருந்தது. சிந்தனை, பேச்சு, ஈடுபாடு, செயல் மற்றும் கனவுகள் எல்லாவற்றிலுமே அவளுக்குப் ‘படிப்பு’ தான் என்றிருந்தது. தொடக்கப் பள்ளியிறுதி யாண்டில் சிறப்பாகச் செய்து நல்ல உயர்நிலைப் பள்ளியிலும் சேர்த்தாள். உயர் நிலைப் பள்ளியில் படிப்பில் அவளது கவனம் குறைய ஆரம்பித்தபோது புதுப் பள்ளியின் சூழல் மற்றும் புது விதமான பாடங்கள் தான் காரணம் என்று பெற்றோர் இருவரும் முதலில் நம்பினர். ஆனால், அவளது கவனம் மெள்ள மெள்ள விலகிக் கல்வி தவிர, மற்ற எல்லாவற்றியிலும் வியாப்பித்த போது தான் சற்று கவலைப் பட ஆரம்பித்தனர். சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள். பாப் இசைப்பாடகி ‘பிரிட்னி ஸ்பியர்ஸ’ம் இங்கிலாந்து காற்பந்தாட்ட இளம் நாயகன் ‘மைக்கேல் ஓவன்’ம் இணைய வேண்டும், மணமுடிக்கவேண்டும் என்பதே அவளது மாபெரும் கவலையாக இருந்தது. அவ்விருவரும் வெளியில் ஜோடி சேர்ந்துக் கொண்டு சுற்றுவதாய் தினசரிகளில் படித்தபோது போது அவள் உண்ணா விரதமிருந்தாள். மிகவும் நன்றாகப் படிக்கக் கூடிய பெண் இப்படிப் படிக்கும் பருவத்தை வீணடிக்கிறாளே என்று வருந்தினர். ஆனால் அவர்களின் அறிவுரைகள் எல்லாமே விழலுக்கிறைத்த நீராயின. ஆரம்பத்தில் மதிப்பெண்கள் குறைந்த போது அவளிடம் இருந்த கவலை மெள்ளக் குறைந்து இப்போது முற்றிலுமாக விடைபெற்றிருந்தது. கல்வியில் தான் பின் தங்குவதை புவனா இப்போதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பெற்றோரின் கவலை மட்டும் அதிகரித்தது.

அரையாண்டுத் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்த போது “இங்க பாரு, புவனா, உனக்கு உன்னோட நீண்ட முடி, உன்னோட கருப்பு நிறம் எல்லாமே பெரிய குறையாத் தெரியுதில்ல ,ம் ,.. சொல்லு. நம்ம தோல் நிறத்தை நம்மால மாத்த முடியுமா? முடியாதில்ல, அப்ப நீ ஒரு சவாலா எடுத்துகிட்டு உழைச்சுப் படிச்சு, எல்லார் கவனத்தையும் ஏன் உன் பக்கம் திருப்பக் கூடாது? நீ அப்படிப் பிரபலம் ஆகலாமே? குறைகளா நீ நினைக்கிறதையெல்லாம் நிறைகளால நீ ஏன் நிரப்பக்கூடாது, யோசி புவனா?” என்று வந்தனா கண்டிப்போடு கூறினாலும் புவனா ஏற்கவில்லை.

“அம்மாடி, இங்க பாரேன்,..பொறந்ததுலேயிருந்து நமக்குக் கிடைக்கிற ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைக்கிற ஒரு வெகுமதி தெரியுமாம்மா. காலத்தின் அருமையறிந்து படிக்கணும்மா. கஷ்டப்பட்டுப் படிச்சா வகுப்புலயே நீ தான் முதலாவதா வருவ? உனக்கு அந்தத் திறமை இருக்கு தெரியுமா? உனக்கு டியூஷன் கூட நான் ஏற்பாடு செய்யிறேன்னு சொன்னேன். நீ தான் வேண்டவே வேண்டாங்கற. இன்னோண்ணு நீ மறக்காம இருக்கணும். ஆயிரம் நண்பர்கள் ஒரு பெற்றோருக்கு ஈடாக மாட்டார்கள். ‘பிரெண்ட்ஸ்’ எல்லாருமே தேவை தான். ஆனா, உனக்கொண்ணுன்னா துடிக்கறவங்க நாங்க தான். அத்தகைய அக்கறையுள்ள சிந்நேகிதம் அமையாதாப்பான்னு நீ என்னை கேட்கலாம். அமையும், ஆனால் அதுக்கு இன்னும் காலம் இருக்கு. பிற்காலத்துல அப்படி அமையும் போது தான் நீ நட்புக்கு உன் மனசுல முக்கியத்துவமே கொடுக்கணும். அப்போது நீ நண்பர்களோட கருத்தையும் நல்லாவே எடுத்துக்கலாம். ஏன்னா அப்போ தான் நல்ல நட்பை அடையாளம் காணவே உன்னால முடியும். அதுவரை நட்பு இரயில் சிநேகமாத்தான் இருக்கணும்மா” என்று அப்பா செல்லமாகக் கூறினாலும் புவனா அலட்சியம் செய்தாள்.

வந்தனாவின் கண்டிப்பும் சரி, அப்பாவின் செல்லமும் சரி, அவளை அசைக்கவேயில்லை. அவளுள் நட்பிற்கு இருந்த மதிப்பு பாசத்திற்கு இல்லாமல் போனது தான் வேதனை. “அம்மா, நீங்க இஞ்சினிரிங் படிச்சி முடிச்சிட்டீங்கல்ல, ம், இப்ப நீங்க என்ன செய்றீங்க? சொல்லுங்கம்மா. அதே போல நானும் தான் படிச்சி பெரிசா என்னத்தம்மா செய்யப் போறேன்?” என்று ஒரு கேள்வி கேட்டதுமே புவனா அதிர்ச்சியில் வாயடைத்துப்போனாள். இப்போதெல்லாம் புவனா அழுவது கூடக் குறைந்து விட்டது. அவளது போக்கில் மென்மை மறைந்து ஒரு விதமான பிடிவாதமான இறுக்கமும் முரட்டுத் தனமுமே மிஞ்சியிருந்தது. போன வருடம் ஒருமுறை பள்ளியிலிருந்து வந்து அறையினுள் சென்று குலுங்கிக் குலுங்கி அழுதாள். என்னவோ ஏதோ என்று பதறிக் கொண்டே கதவைத் திறந்து பல முறை கேட்ட வந்தனாவிடம் காரணத்தைச் சொல்ல மறுத்தே விட்டாள். மாலையில் அப்பா வந்ததும் தான் அழுகைக்கான காரணத்தையே சொன்னாள். அதுவும் விடாமல் கெஞ்சிக் கேட்ட பிறகே அரையும் குறையுமாகக் கூறினாள். புவனாவுடைய காதுக்கம்மல் மற்றும் பற்களை வைத்துத் தான் அவள் இருட்டில் நின்றிருந்தால் அவளைக் கண்டு பிடிக்க முடியும் என்று ஒரு மாணவி அவளைக் கேலி செய்தாளாம். இதைக் கேட்டு வழக்கம் போலத் தாழ்வு மனப்பான்மையால் சுருங்கி விட்ட புவனா ஆசிரியரிடம் சென்று புகார் செய்தாளாம். ஆனால், அந்தப் பெண்ணோ ஆசிரியரிடம் சாமர்த்தியமாகக் கதையையே மாற்றியிருக்கிறாள். வெள்ளியோ அல்லது பிளாட்டினம் உலோகத்திலோ செய்த கம்மல் தான் புவனாவிற்குப் பொருத்தம் என்று தான் கூறியதாய் கதையைத் திரித்து விட்டாள். உடனே ஆசிரியரும், “புவனா, உனக்கு ரொம்ப தாழ்வு மனப்பான்மை இருக்கு. நீ ஏன் இப்பிடியிருக்க? நீ உன்னையே மாத்திக்கணும். இல்லைன்னா ரொம்பக் கஷ்டப்படுவே” என்று அறிவுரை வேறு கொடுத்திருக்கிறார்.

இதையெல்லாம் புவனா அழுகையினூடே சொல்லி முடிப்பதற்குள் தவித்த தவிப்பு அவள் அப்பாவை மனதளவில் மிகவும் பாதித்தது. வெகு நேரம் யோசித்தபடியமர்ந்து விட்டார். மறு நாளே பள்ளிக்குப் போய் ஆசிரியர்களைப் பார்த்துப் பேசிவிட்டு வருவதாகச் சொன்னதும், புவனா கண்ணைத் துடைத்துக் கொண்டே, “ஐய்யயோ வேண்டாம்ப்பா. ஏற்கனவே அம்மா அடிக்கடி ஸ்கூலுக்கு வரதைப் பார்த்து எல்லாரும் கேலி செய்றாங்க. இப்போ இதுக்கும் சேர்த்து பயங்கரமாகக் கேலி செய்வாங்க. ஐ ஜஸ்ட் காண்ட் ஸ்டாண்ட் ல் தாட். நானே என்னோட விஷயத்தைச் சமாளிச்சிக்கறேன். நீங்க ரெண்டு பேரும் தலையிடாதீங்க. உங்களால என்னைப் புரிஞ்சிக்கவே முடியாது. ஜஸ்ட் லீவிட் லா ப்ளீஸ்”, என்று கூறி திட்டவட்டமாக மறுத்து விட்டாள். பெருவிரைவு ரயிலில் பயணிக்கும் போது அவளருகில் இடமிருந்தாலும் யாரும் உட்காரத் தயங்குவதாயும், நின்றிருக்கும் போது தனக்கு உட்கார இடம் கிடைத்து உட்கார்ந்தால் அருகில் அமர்ந்தவர் எழுந்து விடுவதாயும் கற்பனைகளை அவளே வளர்த்துக் கொண்டு தன்னையும் பெற்றோரையும் பெரிதும் கஷ்டப்படுத்தினாள்.

பயணிகளின் அந்தச் செயல்களுக்கெல்லாம் வேறு வகையான காரணங்களும் இருக்கலாமென்று எவ்வளவு சொன்னாலும் ஏனோ அவள் மனம் ஏற்க மறுத்தது. புவனாவின் தாழ்வு மனப்பான்மையைப் பெற்றோர் அறிந்தே இருந்தனர். அது படுத்திய பாடு புவனாவின் சராசரிக்கும் உயர்வான அறிவை மழுங்கடித்தது. அதைப் போக்குவதற்கும் அவர்களிருவரும் பல வழிகளில் முயற்சிக்கவே செய்தனர். ஆனால், மாற்றம் தான் தெரியவில்லை.
அன்று மாலையே அப்பாவுடன் சென்று நகைக்கடையில் ஒரு ஜோடி வெள்ளிக்கம்மல் மற்றும் ஒரு ஜோடி பிளாட்டினம் உலோகக் கம்மல் இரண்டையும் வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தாள்.

அன்றிரவு புவனாவின் முகத்தில் சிறு மகிழ்ச்சி ஏற்பட்டது போலிருந்தது. வந்தனா வழக்கம் போல மகளிடம் பாடங்களை முனைந்து படிக்க ஆரம்பிக்கச் சொன்னதும் சரி சரி என்று சலிப்போடு தலையை ஆட்டியதோடு சரி. அதன் பிறகு, அவள் தன் போக்கில் எப்போதும் போல் புத்தகங்களையும் பாடங்களையும் அலட்சியமே செய்து வந்தாள். அவள் அப்பாவோ பொறுமையாக இருந்ததோடு வந்தனாவையும் பொறுமையுடன் மகளின் போக்கில் போய் சற்று விட்டுப் பிடிக்கச் சொன்னார். எத்தனை நாட்களுக்கு என்று தான் வந்தனாவிற்குத் தெரியவில்லை. புவனாவிற்கு எதார்த்தத்தைப் புரிய வைக்க என்ன தான் வழி என்று குழம்பியபடியே அடுத்து வந்த நாட்களை நகர்த்தினாள் வந்தனா. துணைவருடன் பேசும் போதெல்லாம் தான் தனித்து இல்லை என்ற உணர்வு அவளுக்குச் சற்று ஆறுதல் அளிக்கவே செய்தது. இருப்பினும், வீட்டில் பகல் வேளைகளில் தனித்து இருக்கும் போது கவலை அவளை அரித்தது. ஒரு வேளை தனக்கு இன்னும் ஒரு குழந்தை இருந்திருந்தால் கவனம் இருவரிடமும் சென்றிருக்குமோ. அப்படியிருந்திருந்தால் புவனாவும் நண்பர்களிடம் இவ்வளவு நாட்டம் கொண்டிருக்கமாட்டாளோ என்று பலவாறாகக் குழம்பினாள் அவள்.

ஒரு முறை புவனா தனக்கு ஒரு வெள்ளை நாய்க்குட்டி கேட்டிருந்தாள். கடையில் ஒரு சிறிய கருப்பு நாய்க் குட்டி இருந்தது. அவள் அதை வேண்டாமென்று மறுத்தாள். “நான் தான் கருப்பு. எனக்கு வாங்கற நாயுமா கருப்பா இருக்கணும்? உங்களுக்கு என்னப் புரிஞ்சிக்க முடியல. அதனால எனக்கு உங்களோட பேசப்பிடிக்கல. ஒரு நாய் குட்டியாவது வீட்டில இருந்தா நல்லாருக்கும்னு சொன்னேன். வெள்ளை நாய்குட்டி கடையில வரும் போது போன் போட்டு சொல்லச் சொல்லுங்கப்பா, என்று அப்பாவிடம் மகள் கூறியது அடிக்கடி வந்தனாவின் நினைவில் வரும். ஒரு வாரமாய் புவனா செய்த கோமாளித் தனங்களை மௌனமாய் பார்த்த படியிருந்தாள். அங்காடிக்கடையில் அடுக்கியிருந்த அத்தனை சிவப்பழகுச் சாதனங்களும் வீட்டிற்கு வந்துவிட்டது. தோழிகளுடன் தொலை பேசியில் பேசிய நேரம் தவிர மீதி நேரத்தில் முகத்தில் அவற்றைப் பூசிக் கண்ணாடி முன்னால் நின்று, ஊறிய பின் முகம் கழுவி மறுபடியும் கண்ணாடி முன் நின்று அப்படியும் இப்படியும் முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துப் பொழுதைக் கழித்தாள்.

விளம்பரங்களில் காட்டுவது போல ஏதேனும் மாயாஜாலம் நடந்து தன் நிறம் மாறாதாவென்று அவளுக்கு ஆசை. மாறினால் தான் வந்தனாவும் அகம் மகிழ்வாளே. ஆதாயம் முழுவதும் விளம்பரம் செய்தவர்களுக்கேயன்றி வேறு யாருக்குமில்லை. அப்பாவின் காசெல்லாம் வண்ணவண்ண முகப்பூச்சுக்களாக மாறின. முதல் நாள் ‘எல்லா விஷயத்திலும் தலையிடாதீங்கம்மா’ என்றவளிடம் வந்தனாவால் மறு நாளே பேச முடியவில்லை.

விடுமுறையில் தொலை பேசி விடாமல் அடித்தது. அவளும் குசுகுசுவென்று நேரம் போவதே தெரியாமல் பேசினாள். இடையிடையே விழுந்து விழுந்து சிரித்தாள். கேள்வி கேட்டாலோ ‘லீவு தானேம்மா’ என்று தெனாவெட்டாய் பதிலளித்தாள். சதா ‘பாய் பிரெண்ட்ஸ், கேர்ல் பிரெண்ட்ஸ், தமிழ் படம்’ என்று மாறிமாறி ஒரே அரட்டை. விடுமுறையெல்லாம் வீணாவது புவனாவிற்கு ஒரு பொருட்டாகவே இல்லை. வந்தனாவின் மனம் தான் கட்டுக் கடங்காமல் கவலையில் உழன்றது. இன்னும் ஒரே வாரத்தில் பள்ளியும் திறக்கவிருந்தது. தன் கணவரின் நெருங்கிய நண்பர் திரு அஸ்மானின் வீட்டுப் புது மனை புகு விழாவிற்குச் செல்லவென வந்தனா ஆடைகளைத் தேர்ந்தெடுத்து வைத்தாள். புவனாவையும் அப்பா கூப்பிட்ட போது அவள் எப்போதும் போல முதலில் மறுத்தாள். பிறகு, அப்பாவின் கோபமான முறைப்பை அலட்சியப்படுத்த முடியாத ஒரே காரணத்திற்காக தனது பஞ்சாபி உடையை எடுத்து அணிந்து கொண்டு கிளம்பினாள்.

அறையினுள் மகள் ஆடை மாற்றும் போது கணவர் மனைவியிடம், “வந்தனா, நாம புவனாவை எங்கேயும் அதிகம் கூட்டிட்டு போறதேயில்ல. தவிர, நானும் அஸ்மான் கிட்ட அவளப் பத்தி சொன்னேனா, அவன் எல்லாத்தையும் கேட்டுட்டு புவனாவ நிச்சயம் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கான். அங்க நிறைய பேர் வருவாங்களாம். எல்லாரையும் புவனா சந்திச்ச மாதிரியும் இருக்கும். அதோட, அவங்களுக்குத் தெரிஞ்சவங்க பொண்ணு ஒண்ணு இருக்காம் வந்தனா. நம்ப புவனாவ விட ஒரு வயசோ என்னவோ தான் பெரிசா இருக்கும் போல. பாவம், அதோட கதையைக் கேட்டா கல்லும் கரையும் வந்தனா. அந்தப்பெண்ணோட புவனா பேசட்டும்னு சொன்னான். அதுவும் தவிர,..” மகளின் தலையைக் கண்டதும் பேச்சு பாதியில் நிற்கிறது. வெளிர் நீல நிற உடை புவனாவிற்கு பளிச்சென்ற எளிமையான அழகைக் கொடுத்தது. அதை அவளிடம் சொன்னதும் “சும்மா எனக்காகச் சொல்லாதீங்கம்மா. ஐ காண்ட் பிலீவ் ல் திஸ். இப்போ அங்க கூட்டத்துல நான் தான் தனியாத் தெரியப் போறேன். நான் வரல்லைன்னாலும் விடறீங்களா? சரி, சீக்கிரமாவாவது திரும்பிடுவோம், சரியா?” என்று முணுமுணுத்தபடியே தனது முகத்தின் அணிகலனாய் அவள் அணிந்திருந்த புன்சிரிப்பைப் பிடிவாதமாய்க் கழற்றியெறிந்த போது வந்தனாவிற்குச் சங்கடமாய் இருந்தது. அப்படிச் செய்வதில் புவனாவிற்கு ஒரு சந்தோஷம். தனது தாழ்வு மனப்பான்மைக்குத் தகுந்த தீனி போட்டு விட்டாற் போன்ற ஒரு அலாதி திருப்தி. தான் பெரிய மனது வைத்து ஏதோ பெற்றோருக்கு பெரிய உபகாரம் செய்யும் தோரணையோடு தான் வேண்டா வெறுப்பாகக் கிளம்பினாள்.

திரு. அஸ்மானின் வீட்டில் பல இனக்கூட்டம் குட்டிச் சிங்கப்பூராய்க் கூடியிருந்தது. கிட்டத் தட்ட கடைசியாக நுழைவதற்கு மன்னிப்புக் கோரும் பாவனையுடன் நுழைந்ததுமே எல்லோரையும் குசலம் விசாரித்து விட்டு திரு. அஸ்மான் குடும்பத்தினருக்கு வாழ்த்தும் கூறிய வந்தனா, கூடத்தை கண்களும் ஓர் அறையை சிறுவர்களும் ஆக்கிரமித்திருப்பதைக் கவனித்தாள். சாப்பாட்டு அறையில் பெண்கள் சிலரும் சமையலறையில் மற்ற பெண்களும் இருந்தனர். வந்தனாவின் பின்னாலேயே சாப்பாட்டு அறைக்குப் போக எத்தனித்த புவனாவை திரு. அஸ்மான் விடாப்பிடியாக மூடியிருந்த வேறொரு அறைக்குக் கூட்டிச் சென்றார். புவனா அம்மாவின் மீது வைத்திருந்த பார்வையை அகற்றாமல் தன் கால்களை வலுக் கட்டாயமாக இழுத்தபடி அசட்டுச் சிரிப்புடன் அவருடன் சென்றாள். அவளுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை அவளை யாருடனும் பேசவோ பழகவோ விடவில்லை. அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த சின்யீ லீயையும் மற்ற இளம் பெண்களையும் அறிமுகப் படுத்திவிட்டு அகன்றார் திரு. அஸ்மான். சாப்பாட்டு மேசையின் நாற்காலியில் அமர்ந்து புவனா மகளைக் கவனித்தபடியிருந்தாள். அவளது தவிப்பை ஓரளவிற்கு உணர்ந்திருந்தாலும் மற்றவருடன் பழகப் பழகத் தானே கூச்சம் போகும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். ஆரம்பத்தில் சின்யீயின் சுடர் போன்ற அழகும் குங்குமம் கலந்த மஞ்சள் நிறமும் புவனாவை அவளிடம் நெருங்கவிடவில்லை. முதலில் மிகவும் தயங்கிய புவனா சிறிது நேரத்தில் சின்யீயுடன் பேச ஆரம்பித்திருந்தாள். சின்யீ தான் அவளைப் பேச வைத்தாள் என்றே சொல்ல வேண்டும். சின்யீ பேசும் இருபது வார்த்தைகளுக்கு புவனாவிடமிருந்து ஒரேயொரு வார்த்தை அதுவும் தயங்கி வரும்.

புவனாவுடன் தனித்திருக்கும் போது சின்யீ அதிக இயல்பாகவே பல நாட்கள் பழகிய தோழியைப் போலப் பேசத் துவங்கினாள். புவனாவின் நீண்டு வளர்ந்த கூந்தலை வியந்து பாராட்டிய போது புவனா, “தனக்கு குட்டையான கூந்தலே விருப்பம்” என்றாள். “இருக்கறதை விரும்பாம இல்லாததை விரும்பறது மனித இயல்பு தானே, புவனா. ஆனா, எனக்கு உன்னோட முடி ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கு பஞ்சாபி உடையும் மெஹ்ந்தியும் (மருதாணி) கூட ரொம்பப்பிடிக்கும்” ரசித்தபடி கூறியிருக்கிறாள் சின்யீ. “எனக்கும் உன்னப் போல நிறைய முடி இருந்திச்சி தெரியுமா புவனா? எல்லாமே கொட்டிடிச்சி. இந்த முடி கூட இன்னும் ஒரு மாசத்துல முழுவதும் கொட்டிடும்னு தான் நினைக்கிறேன். என்ன அப்படி ஆச்சரியமா பாக்கறே? இதையெல்லாம் நான் யார் கூடவும் பேசறதில்ல. என் மேல யாரும் பரிதாபப்பட்டா எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காது. ரொம்ப கூச்சமாக இருக்கும். ஆனா, அஸ்மான் அங்கிள் தான் உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லச் சொன்னாரு. உன்னைப் பத்தியும் சொன்னாரு. பயப்படாத. நாங்க பேசினதெல்லாமே ஒரு அக்கறையிலதான். நான் உன்னோட பேசறதுனால உன் மனசுல கொஞ்சம் தன்னம்பிக்கை வந்திச்சின்னா எனக்கு அதுவே சந்தோஷம் தான். எனக்கு கீமோ தெரபி (ரசாயன சிகிச்சை) நடந்துகிட்டிருக்கு. நாலு மாசம் முன்னாடி மூட்டுக்களெல்லாம் ஒரேயடியா வீங்கிடிச்சு. அதுக்கப்புறம் நிறைய சோதனையெல்லாம் செஞ்சாங்க. இரத்தத்துல சிவப்பணு குறைஞ்சிருக்குன்னு தெரிஞ்சிச்சு.அப்புறம் தான் எனக்கு லுக்கேமியா (இரத்தப்புற்று நோய்), அதுவும் முத்தின நிலையில இருக்கிறதக் கண்டு பிடிச்சாங்க. நோயோட மருத்துவர்கள் போராடறத விட நான் முழு மூச்சாப் போராடறேன். இருக்கற கொஞ்ச நாள் என்னால முடிஞ்சதைச் செய்யணும்னு தான் ஆசைப்படறேன்”, என்று சின்யீ தெளிவாக சிரித்தபடி வேறு யாரையோ பற்றிக் கூறுவது போலக் கூறியதும் புவனாவிற்கு அவள் மீது பரிதாபத்தை விட மரியாதையே மிகுந்தது.

“உனக்குத் தெரியாது புவனா, எங்க அம்மா, அப்பா, அண்ணா, மூணு பேரையுமே போன வருஷம் நான் இழந்துட்டேன். மலேசியாவுல வாகன விபத்துல இறந்துட்டாங்க. இப்போ பாட்டி வீட்டுல மாமாவோட இருக்கேன். அடுத்த வருஷம் சாகப் போகற எனக்கு படிப்பு எதுக்குன்னு நான் நினைச்சிருந்தா, எனக்கு போன வருஷம் ஓ லெவல்ல (உயர்நிலை இறுதியாண்டு) எட்டு ‘ஏ ஒன்’ (சிறப்புத் தேர்ச்சி)கிடைச்சிருக்குமா புவனா, சொல்லு? எப்படியும் மரணம் நிச்சயம். எனக்கு மட்டுமில்ல. எல்லாருக்கும் தான். என்ன ஒரு வித்தியாசம், எனக்கு எப்போன்னு முதல்லயே தெரிஞ்சிடிச்சு. இருக்கற வரைக்கும் நம்ம அம்மா, அப்பாவோட அருமை தெரிஞ்சு அவங்கள சந்தோஷப்படுத்தணும். புவனா, நீ வேற யாருக்காகவும் இல்லாம உனக்காகப் படிக்கணும்.”

புவனாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ! அவளால் தன் முன்னால் இருக்கும் உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் விட்டாள். இத்தனை சோகமும் சின்யீயிற்கா? வேறு யாருடைய கதையையோ சொல்வதைப் போல உணர்ச்சிகளால் கடுகளவும் அவதிப் படாமல் இவளால் எப்படிச் சொல்லமுடிகிறது! “உடல்ல எனக்கிருக்கும் நோயை விடவா புவனா உன்னோட கருப்பு நிறம் மோசமாயிடிச்சி. எனக்கு சிவப்புத் தோலிருந்தென்ன செய்ய, புவனா,ம்,.? உனக்கிருக்கும் ஆரோக்கியம் எனக்கில்லையே. பல விதமா கற்பனை பண்ணிக் கிட்டு நீயும் வருத்தப்பட்டுகிட்டு பெற்றோரையும் கஷ்டப்படுத்தற. அந்தக் கற்பனைகள் நிஜமேயில்லை புவனா. உன்னோட பெற்றோரோட அக்கறை தான் நிஜம். நிஜமான குறை இருக்கற என்னால சந்தோஷமா இருக்க முடியும்னா ஆரோக்கியமான உன்னால சந்தோஷமா இருக்க முடியாதா? உன்னால அடுத்த வருஷம் பத்து ‘ஏ ஒன்’ வாங்க முடியும்னு உனக்குத் தெரியுமா? உன் குறை உன் மனசுல, உன் பார்வையில், அதை நீ மாத்திக்கலாம்; மாத்திக்கணும். அப்பத்தான் நீயும் மகிழ்ச்சியா இருக்கலாம். உன் பெற்றோரும் மகிழ்ச்சியா இருக்கலாம். இருக்கற வரைக்கும் முடிஞ்சதைச் சாதிச்சு நிறைவா வாழ்ந்திடணும் புவனா. இல்லன்னா அது வாழ்க்கையே இல்ல.”

விருந்து உண்டு முடிந்ததுமே புவனாவைப் பார்த்துக் கிளம்பலாமா என்று கேட்டதற்கு ‘இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து விட்டுப் போகலாமே’ என்று புவனா கெஞ்சியது வந்தனாவிற்கு ஒரே ஆச்சரியம். சீக்கிரம் கிளம்பலாம் என்று முதலில் சொன்னதே புவனா தான். ஆனால், இப்போது சின்யீயிடம் பேச வேண்டுமென்று இன்னும் கொஞ்சம் நேரம் இருக்க ஆசைப் பட்டாள். மேலும் சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பிய புவனா வழியெல்லாம் ‘சின்யீ புராணம்’ பாடிய படி வந்தாள். சின்யீயைப் பற்றியும் அவள் சொன்னவற்றைப் பற்றியும் விவரித்தபடி இருந்தாள். புவனாவின் முகத்திலேயே ஒரு பெரிய மாற்றம் தெரிந்தது. வீட்டினுள் நுழைந்தவுடனே வந்தனா தொலைபேசியில் ஏதும் தகவல் பதிவாகியிருக்கிறதாவென்று ஆராய்ந்ததில் புவனாவின் சினேகிதி ஒருத்தி தான் பல முறை கூப்பிட்டிருப்பது தெரிந்தது. “அவளுக்கு வேற வேலையில்லம்மா. சும்மா அரட்டையடிக்கத் தான் கூப்பிட்டிருப்பா. ஒரு விஷயமும் இருக்காது. நான் நாளைக்கி அவளோட பேசிக்கிறேன்”, என்று புவனா கூறியது வந்தனாவிற்கு மட்டுமல்லாது அவளது கணவருக்கும் கூட தோழியோடு உலகை மறந்து பேசும் புவனாவா இப்படிச் சொல்கிறாள் என்று ஒரே ஆச்சரியம்.

அடுத்து வந்த ஒரு வாரத்தில் புவனா அரையாண்டுத் தேர்வுக்குப் படிக்காமல் விட்டுப் போன பாடங்களையும், இனிமேல் ஆசிரியர் நடத்தவிருக்கும் பாடங்களையும் மளமளவென்று இரவு பகலாகப் படித்து முடித்ததோடு தொலைபேசியையும் அரட்டையையும் தவிர்த்தாள். முகப்பூச்சுக்கள் சீந்துவாரற்று மூலையில் கிடந்தன. மாலையில் சின்யீயுடன் பத்து நிமிடம் மட்டும் தொலைபேசியில் பேசினாள். ஒரு நாள் மாலையில், “அம்மா எனக்கு தலைக்கு எண்ணை தடவி முடியைப் பின்னி விடறீங்களா?”,என்றதுமே வந்தனா மூர்ச்சை போடாத குறைதான்! புவனா தன் முடிக்கு எண்ணை தடவுவதை நிறுத்தி இரண்டு வருடங்களாகின்றனவே! ஏதோ அப்பாவின் கோபத்திற்கு பயந்து தான் முடியை வெட்டி விடாமல் அப்படியே விட்டிருந்தாள். வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கிறாயே, ங் மோ கியோவுல ‘தமிழ்’ படம் ஓடுதாமே, நாம ரெண்டு பேரும் வேணா போவோமா?”, என்று அம்மா கேட்டதற்கும் “என்னம்மா இருக்கு தமிழ் படத்துல, நாம வேணா லைப்ரரிக்குப் (நூலகம்) போவோமா? டைம் வேஸ்ட் பண்ணாம நான் நிறைய படிக்கப் போறேம்மா”, தமிழ்த் திரைப்படப் பைத்தியமான புவனாவே வேண்டாமென்று சொல்லி விட்டாள்.

மகளின் பிரச்சனை எவ்வாறு தீருமோவென்று பயந்த படியிருந்த வந்தனாவிற்கு, அந்த ஆண்டவனே சின்யீயின் உருவில் வந்தது போலச் சுலபமாகத் தீர்ந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த இந்த அரிய மானிடப் பிறவியில் ஞாலமும் கல்வியும் நயத்தல் வேண்டும் என்று புவனாவிற்கு சின்யீ என்ற அந்தத் தேவதை போதித்ததில் வந்தனா பேருவகையடைந்தாள்.
தாயும் தந்தையும் சொல்லாததை ஒன்றும் நிச்சயம் சின்யீ சொல்லி விடவில்லை. ஆனாலும், சின்யீயின் சொல்லிற்கு இருந்த பலத்தைச் சொல்லி மாளாது. யார் சொல்லிக் கேட்டால் என்ன, அவள் நலத்திற்காகச் சொல்வதை அவள் கேட்டால் போதுமே ! ஒரு சிலரைப் பார்க்கும் போது, தான் எத்தனை மேலான வாழ்க்கையைப் பெற்றிருக்கிறோம் என்று புவனாவிற்கு மனதில் பட்டு விட்டதென்று வந்தனாவிற்குப் புரிந்து விட்டது. வந்தனாவிற்கு வேறு என்ன வேண்டும் !?பள்ளியும் திறந்தது. மகிழ்ச்சியுடன் தன் சீருடையை உடுத்திக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பிய புவனா, கருப்புத் தான் எனக்குப் பிடிச்ச கலரு,ம், டடண்ட் டடண்ட் ம்.ஹ்.ம்”, என்று கண்ணாடி முன்னால் பாடிய படியே தலை சீவினாள். வந்தனாவிற்குத் தன் கண்களையும் காதுகளையும் துளியும் நம்பமுடியவில்லை.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..