கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிகள் பாடுமாம்
என் வீட்டு தறியோ என்னை கவிஞனாக்கியது!
என்னிதய ஓசைகளை காட்டிலும்
தறியின் ஓசைகளையே
நான் அதிகமாக்க் கேட்டிருக்கிறேன்!

தறிகள் ஆடும் போதுதான் எனக்குள்
காதலும் நர்த்தனம் ஆடுகின்றன …

இலைகளை கோர்க்கும் போதுதான் எனக்குள்
வார்த்தைகள் கோர்வையைத் தேடுகின்றன …

நாடா அங்கும் இங்கும் ஓடும் போதுதான்
எனக்குள் வரிகள் தாண்டவம் ஆடுகின்றன …

சட சட சட வென என் தறிகள்ஓடும் போதுதான்
எனக்குள் கவிகளும் வடிவம் பெறுகின்றன…

இதய ஓசை நின்று விட்டால்
எனக்குள் உயிரின் ஓசை இல்லை!
தறியின் ஓசை நின்று விட்டால்
எனக்குள் கவிதை ஆசையும் இல்லை!

பெரும்பாலானவர்களை கவிஞனாக்கியது
காதல் என்றால் …
என்னை கவிஞனாக்கியது
எந்தன் தறிகள் தான்
செய்யும் தொழிலே தெய்வம்
அந்த தெய்வம் என்னையும்
கவிஞனாக்கியது!

ஒவ்வொரு இரவிலும், தறிகளின் அடியிலே
என் தாயின் மடிகளாய் நினைத்து
நான் உறங்கி போகிறேன்!