“என்ன நினக்கிறான்னு! சத்தியமா என்னால யூகம்பண்ண முடியலக்கா” இப்படித்தான் முதன்முதலில் பேசஆரம்பித்தான் பிச்சைமுத்து என்னிடம்.
முகத்தை கவனித்தேன். சிவந்துவீங்கியிருந்தது. அழுதிருப்பான் போலும். அத்தனை விரக்தி,சலிப்பு அந்தமுகத்தில்..”சாவும் வரமாட்டேங்குது எனக்கு…”
அழுதுமுடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.வடிகாலுக்கு பின் தெளிவு பிறக்கும். இந்த வீட்டுக்கு குடிவந்து இரண்டுவருடமாக பிச்சைமுத்துவிடம் அவ்வளவாக பேசியதில்லை..
கிராமங்களில் புதியஆட்கள் தலைத்தெரிந்தாலே கடைசிதெருக்கோடிவரை தெரிந்துவிடும். கேட்காமலே நலம்விசாரிப்பு என்றபெயரில் புதுஆட்களின் விவரங்கள் தெரிந்துக்கொள்வார்கள். தேவையான உதவிகளும் கேட்காமலே செய்துதருவது கிராமத்து இன்றும்வழக்கத்திலிலுள்ளது. அதுஒரு எழுதப்படாதவிதி; கிராமத்து பண்பாடு. நமதான பாரம்பரியம்.
நகரங்களில் கொஞ்சம்கொஞ்சமாக மறைந்து எங்கோஓரிடத்தில் உயிர்ப்புடன் தென்படுகிறது. சென்னைவந்த புதிதில் மகன்போட்ட உத்தரவு..
“கதவ சாத்திவை,யாரரவது கூப்பிட்டா உடனே கதவை திறந்துடாதே! அதிகம் பேசவேண்டாம்.. நம்ம ஊர்போல இல்லம்மா கவனமா இரு”!
அப்படித்தான் சிறிதுநாள் பிச்சைமுத்துவீட்டின் உறவு.. காலை பால்வாங்கும்போது சிறியபுன்னைகையுடன் கடந்து செல்வான்.. காலைசென்றால் இரவுதான் பணிமுடித்து எப்போதுவருவான் என்றுதெரியாது.. அதிகம் பேசியது சாவி குடுக்கச்சொல்லி,!உங்க வீட்டில் பவர் இருக்கா?என்பதாக இருக்கும்.
இங்கு வந்த மூன்று மாதங்களுக்கு பிறகுதான் பிச்சைக்கு ஒருமகன்,.மகள் இருப்பது தெரியும்.. பிச்சையின் அம்மா மிகவும்வயதானவள் ..தன் வீட்டில் இருப்பதை எங்கள்வீட்டில் அதுக நேரம் இருப்பதை விரும்புவார்,,வயதானவர்கள் துணையாயிருப்பது எனக்கும் பிடித்திருந்தது.
சமையல் முதல் கைவைத்தியம் வரை பிச்சைஅம்மாவிடம்கேட்டால் சரியாய் இருக்கும்.
ரெண்டு வெற்றிலை சூடா தேநீர் போதும் கிழவி தன்கால நாட்டுபுற பாட்டும் கதைகளும் அருவிப்போல் கொட்டத்தொடங்கிவிடும்.அதுவும் அழகுடன் இருக்கும்.
மகன்வீட்டில் இருக்கும் நேரம் மட்டும் இந்த பக்கம் வராது பாட்டி. எப்போதும் மகனைப்பற்றியும்.தாத்தனைப்பற்றியும் யோசிக்கும் பேசும் பாட்டி.
பிச்சைமுத்து நீண்ட வருடங்களுக்கு பிறகு கருப்புசாமிக்கு கடாவெட்டி ஏகப்பட்ட வேண்டுதலுக்கு பிறகுபிறந்தவனாம்.
அந்தம்மா சொல்லும்போதே தாய்மையில் நீர்நிறையும் விழிகள்..
பிச்சைமுத்துக்கு ஊரெல்லாம் பெண்பார்த்து திருமணம் முடித்தார்கள். நாம் ஒரு கணக்குபோட காலத்தின் கணக்கு எப்போதும்வேறுமாதிரி இருக்கும்.. முதலிரவிலே தெரிந்தது மனைவி செல்லிக்கு மனநிலை சரியில்லைஎனபது.. செல்லியே இதைச்சொல்லிஅழுதபோது ஒன்றும் செய்யமுடியவில்லை..
அம்பைக் குற்றம்சொல்லி புண்ணியமில்லை.. ஆயிரம்உறவுகளுக்கு போய்ச்சொல்லி திருமணம் முடிஎன்பதை! இடைத்தரகு உறவுகள் பொய்சொல்லி பொய்சொல்லி என்று தன்விருப்பம் போல் மாற்றிய கோலத்தில் இந்த திருமணம் நடந்தது பிச்சைக்கோ தெரியாமல் போனதில் யாரைகுற்றம்சொல்ல?
மருந்தின் வீரியத்தில் செல்லிஎப்போதும் தூக்கத்தில்இருந்தது.. அவள் சொல்லாமலே உறவுக்களும் வீட்டில்உள்ளோருக்கும் தெரிந்துப்போனது..
ஒருசிறிய போருக்கு தயாரானது வீடு..அனைவருமாய் சேர்ந்து செல்லியை பிறந்தகம் அனுப்ப முடிவுசெய்தபோது! பிச்சைமுத்து மட்டும் உறுதியாய் இனி நான்பாத்துகிறேன். விட்ருங்க! என சொல்லும்போதே அவன் மனைவி உள்ளுக்குள் பெருங்குரலெடுத்து அழுதஓலம் ஊர்வாயை அடைத்தது..
மருத்துவமனை,மருந்துகள் என வருடம் ஒன்று போனது தெரியவில்லை.. இனி குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர் உறுதிஅளித்த பின்னேதான்! அவளை மனதார நெருங்கமுடிந்தது ..கார்த்தி பிறந்தபின் நிறையவே மாறுதல் செல்லியிடம்.
நான்கு வருடம் கழித்து இரண்டாவது குழந்தை சுமதி பிறந்த கொஞ்சநாளில் பெயர்தெரியாத காய்ச்சலில் செல்லி ஒருஇரவு சென்றுசேர!! பித்துபிடித்தது போல் சிலவருடம் பிச்சைஅலைந்தான். அப்பாவும் வயோதிகத்தில் காலமானார்..
பிச்சையின் அம்மாவுக்கு! இந்த இரண்டு மரணங்களும் மூன்றுமாத இடைவெளியில் அரங்கேறியது! மனதை,உடலை பலகீனத்தில் தாயைபடுக்கையில் வீழ்த்த!வீட கிட்டத்தட்ட ஒருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இடம்போல்! மகிழ்ச்சியனைத்தையும் துடைத்து சென்றுவிட்டிருந்தது.. உறவுகள் எவ்வளவோ சொல்லியும் பிச்சைமுத்து வேறு திருமணம் செய்துக்கொள்ளவில்லை.
தாய்இல்லாமல் குழந்தைகள் வளர்ப்பதில் உள்ள சிரமம் அனைத்தையும் சந்தித்தே வளர்த்துவந்தான்.. இதில் அலுவலகம் பணிமாற்றம் அரபுநாடுக்கு செல்லபணித்தது.
இதில் பிள்ளைகளின் நிலைத்தான் பெரும்வேதனையாக இருந்தது.. ஊரிலேயே விடுதிவசதி உள்ள பள்ளியில் பிள்ளைகளை சேர்த்துவிட்டான்.. தாயை கவனிக்க உறவுக்கார பெண்ணை உதவிக்குவைத்து புறப்பட்டுச்சென்றான்.
பத்து வருடம் போனது தெரியவில்லை..அவ்வப்போது போனிலும் நேரடி காணொளியிலும்! பிள்ளைகளுடன் பொழுது போயிற்று..இரண்டு வருடம் ஒரு முறை இரண்டு மாதவிடுமுறையின் ஊர் திரும்பும் பிச்சைக்கு..அறுபதுநாளும் திருவிழாதான்.. இந்தவருடம் பத்தாவது முடித்துதிரும்பும் மகனையும், சொந்தநாட்டிலேயே பணிமாற்றத்துடன் பிச்சையின் இல்லம் அவர்களை வரவேற்றது..
பிச்சையின்தாய்க்கு நிறையவே மகிழ்ச்சி வீடுநிறைந்ததில்.. அப்பா பிள்ளைக்கு உறவு தேர்வுமுடிவுகள் வரும்வரை சிறப்பாகத்தான் இருந்தது.. பிச்சைமுத்துவிடம் நிறைய எதிர்பார்ப்பு பிள்ளையிடமிருந்து!
இயல்பாக அணைத்து தகப்பன்களுக்கும் உண்டானதுதான்..
அடிப்படை மதிப்பெண்களுடன் கார்த்திவெற்றிபெற்றதை பிச்சையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.. முதன்முதலில் அப்பாவின் உக்கிரமுகத்தை,தெறிக்கும் அனலை அன்றுதான் காண்கிறான் கார்த்தி.. முதல் ஒருவாரம் தினம்திட்டு.வெளியில் செல்ல அனுமதிஇல்லை.சிறப்பு வகுப்புகளுக்கு சேர்த்தாகிவிட்டது..
இவை எதுவும் கார்த்திக்கு சிறைபோலவே இருந்தது.. பதினொன்றாம் வகுப்புக்கு விண்ணப்பம் வாங்கிவந்த அன்றுதான் முதலில் எதிர்த்துபேசதொடங்கினான்..
“எனக்கு தொழிற்படிப்பில் சேருங்கள், எனக்கு அதில்தான் விருப்பம்..” வந்ததே கோபம் பிச்சைக்கு!!
“என்னை எல்லோரும் என்னடா சொல்வாங்க. பையன் சரியா படிக்கல போல ன்னு கேவலமா பேசமாட்டாங்க.. நீ இதைபடி.! பிறகு மருத்துவம் சேர். அப்போதான் எனக்கு கௌரவம். என்ன சொல்ல!! ”
அன்றுதான் முதன்முதலில் மகனை கைநீட்டிஅடித்தான்.
பக்கத்தில் இருந்த எனக்கு சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன். கன்னம் முதுகு எல்லாம் வீங்கிஇன்னும் கோபம் தீராமல் அடித்துக்கொண்டிருந்தான் பிச்சை..
விடுங்க பிள்ளையை ன்னு .என் வீட்டுக்கு கூட்டிவந்து கொஞ்சம் ஆசுவாசம் ஆனபின் தேநீர் குடுத்து பக்கத்தில் அமர்ந்து.
“கார்த்தி என்னடா இப்படிபண்ற”
இந்த வார்த்தைக்கேட்டதும் திரும்பிபார்த்த பார்வையில். “நீங்களுமா?” என்று கேட்பது போலிருந்தது..
“சரி சரி விடு அப்பாதானே! என்னன்னு சொல்லு நான் வேணும்னா அப்பா கிட்டபேசறேன்..”
“எனக்கு பிடிக்கலை அத்தை.. படிக்க கஷ்டமா இருக்கு. பாலிடெக்னிக்முடுச்சு பி.ஈ சேர்ந்துக்கிறேன்.. ப்ளீஸ் அத்த அப்பாகிட்ட சொல்லி என்ன சேர்த்து விடுங்க”. ஒன்றும் சொல்லத்தோன்றவில்லை.. இந்த வயது பிள்ளைகள் நிறைய சிந்திக்கஆரம்பித்து விட்டார்கள்.. என் காலம் போல்இல்லை.. படிக்கவைத்தால் போதும் என்று இருந்தவள் நான்..
பிச்சையின் வீட்டில் பிச்சைஅழுவது தெரிந்தது. கிழவி சமாதானம் செய்துக்கொண்டிருந்தாள்.. அடி மகனுக்கு!வலி உனக்கா? என்று நினைத்தபடி உள்ளே நுழைந்தேன்.. “வாங்கம்மா” என்றான். “என்மரியாதை எல்லாம் போகப்போகுது இவனால பாத்தீங்க இல்ல எப்படி எதிர்த்துபேசறான்”.
“என்ன நினக்கிறான்னு! சத்தியமா என்னால யூகம்பண்ண முடியலம்மா” இப்படித்தான் முதன்முதலில் பேசஆரம்பித்தான் பிச்சைமுத்து .
“கொஞ்சம் பொறுமையா யோசிங்க தம்பி, இது நம்ம காலம் இல்ல. இப்போபிள்ளைகளுக்கு எல்லாம் தெரியுது. இணையதளம் நண்பர்கள் உலக அளவில் கால்பரத்திட்டு நிக்கிறாங்க. எது தனக்கு தேவை என்பதை தைரியமா சொல்லும் துணிச்சல் இருக்கு.. கார்த்தி விருப்பம் இது என்றால் விட்டுக்குடுங்க..
நீங்களோ நானோ அவன் கைய புடுச்சு எழுதமுடியாது.. அவன் எழுத்துக்களை அவன் எழுத ஆசைப்படுறான். விட்டுக்குடுங்க நீங்க.. கனமான சுவர் எழுப்பியபிறகு உடைக்கிறது ரொம்ப கஷ்டம்”.
“உங்களுக்கு உங்கபுள்ளைதான் முக்கியமே தவிர, ஊர் என்ன சொல்லும் உறவுகள் என்ன சொல்லும் என்று இருந்தால்! மகன் சொல்வது உங்களுக்கு எப்போர்த்தும் கேட்காமல் போய்விடும். கௌரவம் மனசுல இருக்குங்க..அந்த மனச கார்த்தி கிட்ட குடுங்க. அவன் பத்திரமா நிறைய அன்போட திருப்பித்தருவான்.. இது அவனோட வாழ்க்கை ..அவனோட தேடல்.. அவனோட ஆடுகளம்.. அதில் அவனை ஆடவிடுங்க!”
“வெற்றி,தோல்வி அவன் எதிர்கொள்ளட்டும். கலந்துக்கிறதுக்கு மட்டும் இப்போ நீங்க அனுமதி கொடுங்க பிச்சைமுத்து”.
“கண்டிப்பா கார்த்தி வாழ்க்கையில் முன்னேறுவான்.. அவனோட சொந்த முயற்சில்.. அவனுக்குன்னு இப்போதைக்கு நீங்க செய்யவேண்டியது ஒன்னே ஒண்ணுதான்”.
“உந்துதல் ஆசீர்வாதம் நம்பிக்கை. நம்புங்க கார்த்திய. இதுக்கு மேல உங்க விருப்பம் போல செய்ங்க பிச்சைமுத்து”.
மறுநாள் பிச்சையின் முகத்தில் ஒரு தெளிவு..
அவனுக்கு பின்னாடி இருந்து புன்னகையுடன் பெருவிரலை உயர்த்தி சைகை செய்கிறான் கார்த்தி.
1 Comment
பெயரிலி · ஜனவரி 28, 2017 at 13 h 29 min
மிக்க மகிழ்ச்சி.. நன்றி ..