வாலிபமிடுக்கு, வாலிப்பான உடற்கட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரும்பிய மீசை, வாழ்க்கையின் அத்தியாயங்களை மீட்டவொண்ணா பேதலித்த நிலையில் ஜடமாய்ப் படுத்திருந்தான் பருவக்காளை விசாகன். குமுறிக்குமுறி அழுத கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் தாரை தாரையாக வடிய அவன் முன்னே அமர்ந்திருந்தாள் அவன் தாய் அமலா.
 

ஆண்டாண்டு காலங்கள் வானொலி என்னும் சமுதாய முன்னேற்ற வான் பரப்பில் பொன்மொழிகளையும்,  வாழ்வியல் சிந்தனைகளையும் வடித்து வடித்து பிறர் வாழ்வுக்கு வளம் சேர்த்த இந்த உள்ளமானது சொந்த வாழ்வின் சிந்தனைகளைச் சிந்திக்கத் தவறிவிட்டது.
 

அன்று வழமைபோல் மகனின் அறையைத் துப்பரவு செய்வதற்காக அவன் அறைக்குள் சென்றவள் அவன் மேசையை ஒருமுறை நோட்டமிட்டாள்.

“வளர்ந்ததுதான் மிச்சம் ஒருவேலை கூடச் செய்யத் தெரியாது. படிக்கிற மேசை கிடக்கிற கிடையைப் பார்”

என்று தனக்குத்தானே முணுமுணுத்தபடி ஒழுங்கின்றிக் கிடந்த புத்தகங்களை ஒழுங்கு செய்யும் நோக்குடன் புத்தகங்களைக் கையில் எடுத்தாள். ஒரு புத்தகத்தினுள் இருந்து ஒரு புகைப்படம் தரைநோக்கி விரைவாய் விழுந்தது. தன்னைப் பார் என்று கூறுவது போன்று அழகாய் காட்சியளித்த அந்தப்  புகைப்படம் அவள் கண்களில் தென்பட்டது. குனிந்தாள். தன் கரம் தொட்டுப் புகைப்படத்தை கண்ணருகே கொண்டு வந்தாள். விசாகனும் ஒரு ஐரோப்பிய இனப் பெண்ணும் அருகருகே நின்றாற் போன்ற காட்சி கண்ணில் பட்டது. இதயம் சுக்குநூறாக வெடித்துவிடுவதுபோல் அமலா உணர்ந்தாள்.
 

இந்த நிமிடம் அமலவிற்கு விசாகன் தாய் என்ற நிலையிலிருந்து தமிழ் சமுதாயத்தினிடையே ஒரு பெண் என்னும் ஒரு எண்ணமே தலைதூக்கி நின்றது. அடக்கமுடியாத கோபக்கனல் தெறித்தது. தொலைக்காட்சி நிகழ்வை சுவாரஸ்யமாகச் சிரித்துச் சிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த விசாகன் முன்னே கையிலிருந்த புகைப்படத்தை வீசி எறிந்தாள். விசாகனும் இலாவகமாக எறியப்பட்ட படத்தை எடுத்துத் தன் சட்டைப்பையினுள் வைத்து விட்டு மீண்டும் தொலைக்காட்சியில் லயித்தான்.
 

“எவ்வளவு தைரியம் உனக்கு. யாரிந்தப் பெட்டை?”
  

தாயாரின் கேள்விக்குப் பதிலாக “அது என்ர பிரண்ட். படம் எடுப்போம் என்றாள். எடுத்தோம். அதற்கேன் துள்ளிக்குதிக்கின்றீர்கள். இது என்ன புதினமான படமா? சொல்லிவிட்டு சலனமின்றி அமர்ந்திருந்தான் விசாகன்.
 

“எவ்வளவு நெஞ்சழுத்தம் உனக்கு. பிரண்ட் என்றால், என்ன அர்த்தம். அதை ஏன் புத்தகத்திற்குள் ஒளித்து வைத்திருக்கின்றாய். முளைத்து மூன்று இலை விடல்ல. அதற்குள் பெரிய எண்ணங்கள். அலட்சியமான கதை பேச்சு. உன்ன மகனாகப் பெற்றதற்கு இந்த சமுதாயத்தில தலை நிமிர்ந்து என்னால் எப்படி வாழ முடியும்” படபடவென்று வார்த்தைகளை சரமாரியாகப் பொழிந்தாள்.

 
“இப்ப என்ன நடந்திட்டு. நான் ஒன்றும் ஒளித்து வைக்கல்ல. நீங்க எந்த உலகத்தில. எந்த நூற்றாண்டில வாழ்றீங்கள்? போதும் அம்மா உங்கட சமுதாயக் கதையெல்லாம். அதைத் தூக்கிக் குப்பையில போடுங்க. அப்பா வேலையில்லாமல் கஷ்டப்பட்ட போது எந்த சமுதாயம் உங்கள வழ வைத்தது. நோயாளியாய் நீங்கள் கட்டிலில் கிடந்தீங்களே… எந்த சமுதாயம் உங்களைக் கவனித்தது… ” இது விசாகன் அனுபவித்த அத்தாட்சி வார்த்தைகள். அமலாவும் விடுவதாக இல்லை.

“சமுதாயம் எம்மை ஏறெடுத்துப் பார்க்கவில்லை என்பதற்காக சமுதாயக் கட்டுப்பாடுகளை மீற முடியுமா? பரம்பரைப் பழக்கவழக்கங்களை மாற்றமுடியுமா… ? எப்படியும் வாழலாம் என்பது இல்லை வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதுதான் வாழ்க்கை. இனிமேல் அவளுடைய தொடர்பை விட்டுவிடு”
 

“போதும், போதும் அம்மா! இப்போது கூட உங்கள் சமுதாயத்தின் முன் உங்கள் பெயர் கெட்டுப் போவது பற்றித்தானே சிந்திக்கின்றீர்கள். என்னைப் பற்றி நினைத்துப் பார்க்கிறீங்களா? எதற்காக இங்கு வந்து என்னைப் பெற்றீர்கள்? எல்லா இனங்களுடனும் என்னைப் படிக்க அனுப்பினீர்கள்? இந்த நாட்டு உதவிகளை ஏன் பெற்றீர்கள்? சிறு வயதிலிருந்து இவர்களுடன் பழகுவதற்கு ஏன் அனுமதித்தீர்கள்? முடியாது உங்களால் முடியாது. ஏனென்றால், இங்கு வாழ வேண்டுமென்றால், இணைந்துதான் வாழ வேண்டும். இந்த நாட்டு சுகம் தேவை என்றால், எங்களை இங்கு பெற்று வளர்த்து பயன் பெறுவீர்கள். ஆனால், இந்தப் பெண்களுடன் நாங்கள் வாழக்கூடாது. இது எந்த விதத்தில் நியாயமாக உங்களுக்குப் படுகின்றது அம்மா? என் எண்ணத்தில் ஊறியிருக்கும் அவள் நினைவுகளை இலகுவாக அழித்துவிட முடியும் என்று நினைக்கின்றீர்களா? இது உங்களுக்கு எங்கே விளங்கப் போகின்றது. நீங்கள் மகனை விட சமுதாயத்தைத்தானே நேசிக்கின்றீர்கள்?”
 

“நியாயம் நீ பேச நான் கேட்கப் போவதில்லை. எது நல்லது கெட்டது என்ற அறிந்து கொள்ள உனக்கு வயது போதும். எங்களுக்கும் அவர்களுக்கும் ஒத்து வராது. எங்கடைய ஆட்கள் இதை அறிந்தால் என்ன கதைப்பார்கள்?”
 

“பார்த்தீங்களா அம்மா. இப்போது கூட எங்கடை ஆட்கள் என்ன கதைப்பார்கள் என்பதுதான் உங்களுக்குப் பிரச்சினை. உங்களுக்கும் அவர்களுக்கும் ஒத்து வராமல் இருக்கலாம். ஆனால், எனக்கும் அவர்களுக்கும் ஒத்துவரும். ஏனென்றால், நாங்கள் அப்படித்தான் பிறந்ததிலிருந்து வாழுகின்றோம்!”
 

“அப்படியென்றால், உனக்கு ஒத்துவந்தால் மட்டும் போதும். எங்களுக்கு ஒத்துவரா விட்டால் உனக்குப் பிரச்சினையில்லை. அப்படித்தானே”
 

“இல்லை அம்மா! அது போகப் போகப் பழகிடும்”

இளமையும் முதுமையும் தத்தம் வாதங்களை முன் வைத்தன. வாக்குவாதங்கள் அறிவை மழுங்கடித்தன. “நான் உயிரோடு இருந்தால்தானே இதையெல்லாம் பார்க்க வேணும்… ”

அமலா ஓடிப்போய் குளியலறையிலிருந்த கிருமிநாசினிப் போத்தலைத் திறந்தாள். குடிப்பதற்காக போத்தலை உயர்த்தினாள். கூடவே ஓடிச் சென்ற விசாகன் போத்தலைத் தட்டிப் பறித்தான் பறித்த விசையில் தன் வாய்க்குள் மருந்தைச் சரித்து ஊற்றினான். உட்சென்ற மருந்து தொண்டை கழிந்து குடல் நோக்கிப் பயணமானது. 

அந்தக்கணமே அமலாவுக்குத் தாய்மை மேலோங்கியது. சமுதாயம், சுயசிந்தனை அத்தனையும் எங்கோ மறைந்தது. மகனின் உயிர் ஒன்றே முதன்மையானது. அவசர அவசரமாக வாகனத்தினுள் மகனை ஏற்றினாள். இந்த நாடகத்தைப் பார்த்தும் பார்க்காது இருந்த தந்தை வாகனத்தின் வேகத்தைத் துரிதமாக்கினார். மருத்துவமனை செல்லும் வழியிலேயே விசாகன் உடல் தாயின் மடியில் சரிந்தது. தன் கைகளால் தன் தலையிலே மாறிமாறி அடித்தாள். வலிக்கும் வரை அடித்தாள். 

பலத்த முயற்சியின் பின் விசாகன் உயிரை மீட்ட வைத்தியர். அவன் பழைய நினைவுகளை மீட்க முடியாது கைவிரித்தார். 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..