இயற்கை எழுதிய
தண்ணீர்க் கவிதை நான்.
மண்ணின் மனக்குரலின்
திரவப் பதிவு . . !

புவிக்கோளத்தின் புதுமை
யுகங்களைக் கடந்து நிற்கும்
அகிலத்தின் ஆயுள் ரேகை.

வெளியில் மிதக்கும்
வெளிச்சப் புதையல்.

எழுந்திடத் துடிக்கும் என் அலைகள்,
குளிர் ஜுவாலைகள்.

உயிர்களைப் பிரசவித்திட
மண் மங்கை கருவுற்ற போது
நான் உயிரணுக்களுக்காக
ஊறிவந்த தாய்ப்பால்.

நான்
பிரபஞ்ச மொழியில் பேசியதெல்லாம்
புரியாமல் போனதால்
உங்கள்
உள்ளூர் மொழியில்
உரைத்திட வந்தேன்…

ஜீவ நாடியாய் செல்லத் துடித்து
கட்டாறாகக் காலம் கழித்திருந்தேன்.

கரைகள் இரண்டைக்
காவலுக்கு அனுப்பினீர்கள்.
கௌரவம் வந்ததாய்க் கர்வப் பட்டால்..
என்னை ஆங்காங்கே
அணைச் சிறைகளுக்குள்
அடைத்து வைக்கிறீர்கள்.

என் பார்வை முழுதும்
பள்ளங்களையே பார்த்திருக்க

மேடுகளைக் கண்டு
மிரண்டு போகிறேன்.
அருவியாய்ப் பாய்ந்து
அவ்வப்போது குதிக்கிறேன்.

வரும் வழிதோரும்
பச்சைக் கம்பளப்பாய் விரிக்கின்றேன்.

உங்கள் கால்களைத் தழுவ
பூக்களைப் பரிசாகச்
சுமந்து வருகின்றேன்.

நீங்களோ முட்களையே
முகத்தில் வீசி எறிகின்றீர்கள்
உங்கள் அழுக்குகளை
அகற்றிட வந்த என்னை
அசிங்கங்களால் அழுக்காக்கி விட்டீர்கள்

என் உடன்பிறப்புகளின் சந்திப்புகளில்
பாதையில் நேர்ந்த
துயரங்களைச் சொல்லி
தேம்பி அழுவதால்தான்
கடல் நீர்
கண்ணீரால் கரித்து
உப்பு நீராய் உவர்த்துப் போனது.

சமுத்திர சங்கமம் என்னும் சங்கற்பத்தில்
சமரசங்களுக்கு சம்மதிப்பதில்லை.
இலட்சியங்களை அடகு வைத்துவிட்டு
அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை.
திசை தெரியாமல் தேடி அலைந்ததுண்டு
ஆனால்
என்றும் களைத்தோ சோர்ந்தோ
திரும்பிச் சென்றதில்லை.
தாமதம் ஆகலாம்
ஆனால் தவிர்க்க முடியாது.

எங்களைச்
சூரிய நெருப்புச் சுட்டெரிக்கிறது.

மேகச் சிறகுகளைக் கட்டிக்கொண்டு
மேலே பறந்து
மழைத் துளியாக
மறுபடி உயிர்க்கிறோம்.

என் கோபத்தைக் காட்டிட
அவ்வப்போது குமுறியிருக்கிறேன்.

நீங்களோ…
நியாயங்களைத்
தள்ளுபடி செய்துவீட்டீர்கள்.

தரையோடு தரையாய்
தவழ்ந்து வந்து கேட்கும்
இந்தத் தண்ணீரின் கோரிக்கைகள்
நிராகரிக்கப்படும் என்றால்

நான்
ஒருநாள்
நெருப்பாகக் கொழுந்துவிட்டு
நிமிர வேண்டியிருக்கும் . . !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.