(முதலாமாண்டு நினைவஞ்சலி :27/07/2015)

விஞ்ஞானம் வென்றீரே; மனங்கள் யாவும்
விதைத்தவித்து விளைந்துநிற்க கண்டீ ரில்லை
அஞ்சாமை அகற்றினீரே; அறிவுக் கண்ணை
அகத்தினிலே சுடர்விடவேச் செய்த நீவிர்
நெஞ்சமெலாம் நிறைந்தமகான் கலாமென் போமே
நேர்படவே வாழ்த்துகாட்டி நெறிகள் சொல்லி
மிஞ்சிநிற்கும் மனிதகுல மாண்பு நீரே
மின்னிமறைந் திடவல்ல வாழ்வும் என்றோய்.
விஞ்ஞான சிறப்பெல்லாம் உன்னைப் பாட
வீணாகா இளைஞர்கள் மனத்தில் நின்றாய்
மஞ்சத்தின் பிடிமறந்து வெல்லும் சக்தி
மாணவர்கள் எண்ணத்தில் விதைத்து வைத்தாய்.

என்வாழ்வின் காலவெளி உன்னைக் கண்டு
என்வாழ்வோ முழுமையென்பேன் அண்ண லுன்னால்
பொன்னான நாட்களாகும் உங்கள் வாழ்கை
புடம்போட்டு எடுத்தாலும் குறையாச் செல்வம்
எந்தனது தலைமுறையின் கனவு நீரே
ஏற்புடைய தலைமகனார் என்றும் நீரே
தன்னிகராய் தன்மானத் தோடு வாழ
தரணியாளும் சக்தியாக கனவு தந்தாய்
உன்கனவாய் காணயிங்கு நாங்கள் உண்டு
உண்ணதமாய் உலகுய்ய முயல்வோம் என்றும்
உன்வழியில் பீடுநடை நாங்கள் போட
உடனிருந்து வழிகாட்ட இருக்க எங்கும்.

– கவிஞர் கு.நா.கவின்முருகு