( மறைந்த மாபெரும் கவிஞனுக்கு கண்ணீர் அஞ்சலி ! )
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான் என்றவன்
தமிழரை கலங்க வைத்தான் இன்றோ
நம்மை கண்ணீரில் மிதக்க வைத்தான் !
கவிதை உலகின் காவியத் தலைவன்
அன்னை தமிழின் அழியாக் கவிஞன் !
உடலால் மறைந்து உள்ளத்தில் நிறைந்தவன்
உலகத் தமிழர் நெஞ்சினில் நிலைத்தவன் !
வாய்மையுடன் வாழ்ந்த வாலிபக் கவிஞன்
உள்ளத் தூய்மையால் உயர்ந்த கவிஞன் !
கொள்கைத் தவறா கொற்றவனே வாலி
கொட்டினாலும் தட்டிகொடுப்பவனே வாலி !
கவிஞர் உலகத்தின் அவதாரப் புருஷன் நீ
வாடாத மலர்களாய் நினைவு நாடாக்கள் நீ !
பாண்டவர் பூமியால் தமிழர்களை ஆண்டவன் நீ
கலைஞர் காவியம் படைத்த காவிய நாயகன் நீ !
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
கண்போன போக்கிலே கால் போகலாமா…
என்றெல்லாம் சொன்னவனே எங்கேநீ சென்றாயோ
எண்ணத்தின் வலிகளை எழுத்தாக்கிய வாலியே !
வலிவிழந்தாலும் பொலிவில் குறையாதவனே
வழியிருந்தும் வாய்ப்பைத் தேடி ஓடாதவனே !
இளையத் தலைமுறைக்கு வழிவிட்டவ்னே
உள்ளக் களிப்புடன் ஊக்கம் அளித்தவனே !
மறக்கவும் முடியாது உங்கள் பாடல்களை
பிறக்கவும் இல்லை உங்களக்கு இணையாக !
கேட்டிடுவோம் உங்கள்குரலை ஊடகங்களில்
தட்டி எழுப்பிடும் தமிழர் இதயங்களை என்றும் !
ஒலிக்கும் உன்பாடல்கேட்டு உள்ளங்கள் அழுதிடும்
ஓய்வெடுக்க சென்ற உனை நினைந்து உருகிடும் !
உன்னை வாழ்த்திப் பாடுகிறோம் நீ வரவேண்டும்
உன் நினைவோடு வாழ்வோம் நாங்களும் என்றும் !