உறங்கி நிலமகளை ஏர் கொண்டு கீறி
உறவாட வைத்தவன் உழவன்! – அவன்
உறவாடி மகிழ்ந்ததால் உண்டான செல்வத்தைக்
கொண்டாடி மகிழ்பவன் மனிதன்!
சேறு மிதித்தால் சோறு கிடைக்கும்
உலகுக்கு உரைத்தவன் உழவன்! – அந்த
உண்மை அறிந்தே உள்ளம் மகிழ்ந்தே
வணங்கி நிற்பவன் தமிழன்!
எழுந்து ஒளிரும் ஆதவன் அருளைத்
தொழுது வாழ்பவன் உழவன்! – அவன்
உழுது விளைத்த உணவைப் பெற்றே
உலகில் வாழ்பவன் மனிதன்!
மழைநீர் இலையெனில் உடல்நீர் சொரிந்து
உழைத்துக் களைத்தவன் உழவன்! – அவன்
மனம்போல் வாழ வளங்கள் சூழ
வாழ்த்தி மகிழ்பவன் தமிழன்!