தமிழ் வணக்கம்

கற்கண்டு சொல்லேந்திக் கார்வண்ணன் வில்லேந்திக்
கமழ்கின்ற தமிழே..நீ வாராய்!
காலத்தை வெல்கின்ற கோலத்தை என்பாட்டில்
கணக்கின்றி எந்நாளும் தாராய்!
சொற்கொண்டு வையத்தை நற்றூய்மை நான்செய்யச்
சுடர்கின்ற தமிழே..நீ வாராய்!
சொக்கட்டான் கோடாக இக்கட்டே இல்லாமல்
தொடர்கின்ற சீர்வேண்டும் நேராய்!
பொற்புண்டு! புகழுண்டு! கற்புண்டு! கனிவுண்டு!
பொலிகின்ற தமிழே..நீ வாராய்!
பொன்னான என்னாவைத் தண்ணீரின் படகாக்கிக்
கண்ணான கவிவேண்டும் சீராய்!
வற்புண்டு! வடிவண்டு! வெற்புண்டு! வியப்புண்டு!
மணக்கின்ற தமிழே..நீ வாராய்!
சற்றென்று முன்னாலே பட்டென்று பாத்தீட்டப்
பற்றோடே ஓர்பார்வை பாராய்!

இறை வணக்கம்!

அரங்கத்து மாமன்னா! ஆழ்வாரின் மலர்வண்ணா!
அருள்கேட்டு நிற்கின்றேன் காப்பாய்!
சுரங்கத்துப் வளமாகச் சுவைக்கின்ற நலமாகச்
சுரங்கின்ற பாட்டள்ளிச் சேர்ப்பாய்!
தரங்கத்து மீதாடும் வரங்கொண்ட படகாகித்
தங்கத்து மொழியேந்திப் பூப்பாய்!
பெருங்கொத்து மலர்சாற்றி அருஞ்சொத்துத் தமிழ்சாற்றிப்
பிணைகின்ற என்னன்பை ஏற்பாய்!

தலைவர் வணக்கம்

பிறையென்னும் பெயரேந்தி நிறையென்னும் மனமேந்திப்
பீடேந்தும் கவிகொண்ட தலைவா!
மிறையென்னும் ஒருசொல்லைக் கறையென்னும் துயர்ச்சொல்லை
மேவாத தமிழ்கொண்ட மறவா!
இறையென்னும் உருவத்துள் முறைகொண்ட பெண்ணாக
எழில்கொண்ட தமிழ்வாழும் மார்பா!
துறைகொண்ட குகனாகப் பறைகொண்டு பகர்கின்றேன்
மரைகொண்டு தொழும்உன்னை என்..பா!

அவை வணக்கம்!

நாட்டரசு காண்தேர்தல் நாட்டத்தைக் கொள்ளாமல்
பாட்டரசு கேட்கின்ற அவையே!
கூட்டரசு வந்தாலும் குறையரசு கண்டாலும்
கொடுக்காது தமிழ்போன்று சுவையே!
காட்டரசு அரிமாபோல் பாட்டரசு தாசன்..நான்
கைகூப்பிச் சொல்கின்றேன் வணக்கம்!
வேட்டரசு சந்தங்கள் நீட்டரசு தான்செய்ய
விளைக்கின்ற பாட்டெல்லாம் மணக்கும்!

முன்னிலை:
தமிழ்மாமணி கோவிந்தசாமி ஐயாவுக்கு வணக்கம்

திருமண்ணும் இடவில்லை! திருமார்பில் பெண்ணில்லை!
திருநாமம் கோவிந்த சாமி!
அரும்பென்னும் அணியில்லை! அழகுக்குக் குறையில்லை!
அசத்தும்..மோ கினிக்கீடாய் மேனி!
அரும்பண்ணும் திருப்பாட்டும் அரங்கத்தில் தினம்உண்டு!
ஐயாவும் கவியுண்ணும் தேனீ!
அருந்சொத்து தமிழுண்டு! பெருஞ்சொத்து வாழ்வுண்டு!
அடியேன்..என் வணக்கங்கள் கோடி!

கம்பன் வணக்கம்
கம்பன் காவடிச் சிந்து!

1.
காவிய கம்பனைப் பாடு! – மகிழ்
வோடு – புகழ்
சூடு – அவன்
கட்டிய நூல்இறை வீடு – அதைக்
கற்றேதினம் முத்தேதமிழ் பெற்றேமனம் கொத்தேமலர்
கண்டுளம் சொக்கியே ஆடும் – தூய
தொண்டுளம் நம்மிடம் கூடும்!

ஓவியம் போலொளிர் பாட்டு – கனிக்
கூட்டு – தினம்
கேட்டு – நீ
ஒப்பிலாப் பாக்களைத் தீட்டு! – வாழ்வு
ஒளியேபெற உயர்வேயுற உயிரேவளர் உரமேயென
ஒண்டமிழ்க் கம்பனை ஏந்து! – இன்பத்
தண்டமிழ் ஆற்றிலே நீந்து!

குகன் படகு பேசுகிறது

குகனின் படகு நான்
அகமுற்றுப் பேசுகிறேன்!
ஆற்றின் காற்றாகக்
சொற்களை வீசுகிறேன்!

தண்ணீரில் உள்ளதால்
என் பேச்சைத்
தள்ளிவிட வேண்டாம்!

கண்ணீரில் பேசுகிறேன்!

கடைசியில் வந்ததால்
கண்ணீரில் பேசுவதாய்க்
கற்பனை செய்ய வேண்டாம்!

கடல் செல்லும் என் மக்கள்
காணமால் போகின்றார்!
ஆதலால்
கண்ணீரில் பேசுகிறேன்!

காதலைக் காட்டும்
அகத்துறை!
மோதலைக் காட்டும்
புறத்துறை!
காதலையும் மோதலையும்
காட்டும்
படகுத்துறை!

இறைவனும் நானும் ஒன்று!
இறைவனும்
கரையேற்றுவான்!

நானும் கரையேற்றுவேன்!
அதனால்
இறைவனும் நானும் ஒன்று!

சிலேடை வெண்பா (படகும் பரமனும்)

கடல்தவழும்! கண்தவழும்! காதல் மணக்க
இடம்அருளும்! வாழ்நலம் ஏந்தும்! – திடமாக
நம்மைக் கரையேற்றும்! நல்ல எழிற்படகும்
செம்மைத் திருமாலும் செப்பு!

மக்களைப் படகாக்கி
அரசியல் வாதிகள்
கரையேறும் காலமிது!

அரசியல் கடலில்
சிலர் முழுகி முத்தெடுப்பார்!
சிலர் முழுகி – மக்களின்
மூச்செடுப்பார்!

படகு நான்
பேச்சுக் கலையில் சிறந்தவன்!
பைந்தமிழ்
ஆட்சிக் கலையில் உயர்ந்தவன்!
எப்படி?

இரண்டு நாக்குகளை வெட்டி
ஒன்றாய் ஒட்டி
வளைத்தால் – என்
உருவம் வரும்

நாவலரின் நாக்கின் மேல்
நடமாடும் தமிழன்னை
இன்றென்
வாக்கின் மேல் வலம் வருவாள்!

நாக்குகளை இரண்டை
நானுற்ற காரணத்தால்
பேச்சுக் கலையில்
சிறந்தவன் நானே!

இரு நாக்குப்
பேச்சென என்னை
எள்ளி விட வேண்டாம்!

என் நாக்கு
கருநாக்கு!
கடல் அலையின்
பெரும் நாக்கு!
கவி அலையின்
அரும் நாக்கு!

முப்படையில்
கப்பல் படை
என் வாரீசுகளே!

நாடுகளைக்
கண்டு பிடிக்க
என் வாரீசுகளே
தொண்டு புரிந்தனர்!

உலக முன்னேற்றத்திற்கு
என் வாரீசுகளே
வழி போட்டனர்! – பிள்ளையார்
சுழி போடட்டனர்!

வயல்வெளியில்
நீர் அள்ளும்
ஏற்றப் பாட்டுப்போல்..
கடல்வெளியில்
நீர் தள்ளும்
என் பாட்டும்
ஏற்றப் பாட்டு – ஆம்
தமிழரின் ஏற்றத்தைச்
சாற்றும் பாட்டு!

நான் மிதப்பது
தண்ணீரில்!
இந்த அரங்கம் மிதப்பது
தமிழ்ச்சீரில் – கம்பன்
கவிச்சீரில்!

நான்
நீரில் மிதக்கின்றேன்!
என்னையும் விடச் சிலர்
நீரில் மிதக்கின்றார் – மது
நீரில் மிதக்கின்றார்!

ஆற்றுக்கு அணையுண்டு
ஆசைக்கு அணையில்லை!
ஆற்றின் கரைபோன்று
ஆசைக்குப் கரையிட்டால்
அழிவுக்கு வழியில்லை!

காற்றின் திசையறிந்தே – என்
பயணம் சிறக்கும்!
வாழ்வில் – எதிர்
காற்றின் விசையறிந்தால்
வெற்றி கிடைக்கும்!

எடுப்பு, தொடுப்பு, முடிப்பு
இசைப்பாட்டு!
துடுப்பு – என்றன்
விசைப்பாட்டு!

தமிழா!
துணிவே வாழ்வின்
மிசைப்பாட்டு!

துணிவை இழந்தால்
காண்பாய்
வசைப்பாட்டு!

படகில்
நீர் புகுதல் ஆகாது!
வாழ்வில் – கெட்ட
பேர் புகுதல் ஆகாது!

கடலும் ஆறும்
ஊர் புகுதல் ஆகாது!

சாதிவெறி! சமயவெறி!
பார் புகுதல் ஆகாது!

இணைந்து கட்டிய
இரண்டு படகுகள்
இராமனும் இலக்குவனும்!

தண்ணீரில் ஆடும்
படகானான்
சுக்கிரிவன்!

ஆற்றின் ஆழம்
அறியாமல் இறங்கியவன்
வாலி!

காணமால் போன
படகைக்
கண்டுபிடித்த காவலன்!
சொல்லின் நாவலன்!
அனுமன்!

வண்ணப் படகாக
எண்ணம் பறித்தாள்
அன்னைத் சீதை!

கடலுக்குள்
சுழல் உண்டு!
காதல் கொண்ட
உடலுக்குள்
சுழல் உண்டு!

காதல் சுழலில்
சிக்கிய
இராமனும் சீதையும்
ஓடாத படகானார்!

எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழிக்
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபொறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!
(கம்பன் – 514)

துடுப்பிழந்த படகானான்!
போர்க்களத்தில்
இராவணன்!

கரையறியாப் படகானான்
பரதன்!

புயல் கொண்ட
படகானான்
தயரதன்!

உடைந்த படகானாள்
சூர்ப்பணகை!

நீரில் முழுகும்
படகானான்!
அன்பென்னும்
சீரில் முழுகும்
கும்ப கருணன்!

கரையேற்றும் படகாய்க்
இராமனைக் கொண்டான்!
வீடணன்!

சுனாமிபோல்
எழுந்தவன்
இந்திரசித்து!

படகின்
வளைவை நிகர்த்தது
கூனியின் முதுகு!

பிரிந்து சென்ற
காதலன் வரவுக்குக்
காத்திருக்கும்
காதலிபோல்
நான் காத்திருக்கிறேன்!
இராமன் மீண்டும்
வருவானென….

நல்லதோர் ஆட்சி
அமையுமெனக்
காத்திருக்கும்
தமிழகம்போல்
நான் காத்திருக்கிறேன்

இராமன் மீண்டும்
வருவானென….

புதுவைக் கம்பன் விழாக் கவியரங்கம்
07.05.2016


1 Comment

Ananthi Raghunathan · ஜூலை 29, 2016 at 17 h 40 min

ஐயா கவிதை நன்று
நேற்றுதான் படித்தேன் நீங்கள் எழுதிய கவி காலத்திற்கு ஒப்ப நயம்பட எழுதியுள்ளது அருமையிலும் அருமை
அதுவும் எப்படி ஐயா குகனின் படகு பேசுவது போல ஆஹா அது அருமையிலும் அருமை
அப்போதைய தேர்தல் நேரம் அதையும்,,,மது இவைகளையும் சுட்டிக் காட்டியது அருமை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

மரபுக் கவிதை

யாசக வாசலிலே…

இமைகள் வருடிய தாயும் எங்கே
இதயம் தொட்ட உறவுகள் எங்கே
இரக்கம் படைத்த நெஞ்சமும் எங்கே
இளமை வளமை இன்பம் எங்கே..எங்கே…?

தோளில் சுமந்த செல்வங்கள் எங்கே
தேடியச் செல்வங்கள் போனதும் எங்கே
ஓடி யாடி உழைத்த….தெல்லாம்
தேடியும் பார்த்தேன் தெரியவில்லை.

 » Read more about: யாசக வாசலிலே…  »

புதுக் கவிதை

காடுகள்

காடுகள் – நம்
வாழ்விடத்தின் கடைகால்கள்
ஆனால்… நாம்
தகர்த்துக் கொண்டிருக்கிறோம்.

காடுகள் – நம்
உயிர்வளி சேமிப்பகங்கள்
ஆனால்… நாம்
செலவழித்து கொண்டிருக்கிறோம்.

 » Read more about: காடுகள்  »