ஒற்றைச் சேலையில்
தாலாட்டுக் கேட்ட
ஒருதாய் வயிற்று
உறவுகளெல்லாம்
ஒன்றுவிட்ட
சகோதரர்கள் போலானது !
ஒரு பாயில்
தூக்கம் பகிர்ந்த
ஒன்றுவிட்ட சோதர
சொந்தங்கள் தூரத்து
உறவு என்றானது!
ஒரே முற்றத்தில்
கூடிநின்று பாசத்தை
பரிமாறிய சொந்தமெல்லாம்
பக்கத்து ஊர் பழகிய
மனிதர்களைபோல போனது!
உற்றார் சுற்றத்தார்
எல்லாமே யாரென்று கேட்கும்
நிலைக்கு பாசம்
பச்சையம் இழந்துவிட்டது!
ஆமாம்!
பணம் அழைப்பு விடுக்கிறது
பணத்துக்கு மட்டும்!
வரவேற்று பந்தி பரிமாறுகிறது.
பணம் பணத்துக்கு பணத்தை!
பணம் பணத்தை
புதுப்பிக்கையில்
இங்கே பாசத்துக்கு
மலர்வளையம் வைக்கபடுகிறது!
மனங்களுக்கு
இனியென்ன வேலை இங்கே!?
அவைதானே பணமெனும்
விசத்தால் கொலை
செய்யப்படுகிறதே!