ஏ.டி.ஆர் விமானத்தில் சக பயணியாக இறங்குபவர்களை எளிதில் அடையாளம் கண்டுவிட முடிகிறது. அப்படித்தான் அவரை அடையாளம் கண்டுகொண்டு, அவர் வியந்து, கட்டிப் பிடித்து, கை கொடுத்து விடைபெற்றபின், நண்பர் கேட்டார்.
“அவர் தானே?”
“ஆமா”
“நிஜமாவே அவர் தானே? அந்தxxx கம்பெனியில இருந்த ஜி.எம்?”
“ஆமா” என்று அழுத்தமாகச் சொல்லி சீரியஸாக நடக்க முயன்று தோற்று, சிரித்தேன் (தோம்)
விசயம் இதுதான்.
ஒரு வருடம் முன்பு , மஹாராஷ்டிரத்தின் பின் தங்கிய பகுதி ஒன்றில் இருக்கும் உற்பத்திச்சாலைகள் பகுதிக்குப் போயிருந்தோம். இந்த xxx கம்பெனியில் விரிவாக்கப் பணி நடந்துகொண்டிருந்தது. வேலையை முடித்துக்கொண்டு, தயாரிப்பு ஆலை ஜெனரல் மேனேஜ்ரைப்பார்க்கப் போனோம்.
“அவர் ரவுன்டுக்குப் போயிருக்காரு. உக்காருங்க” என்றது ஒரு பெண். புதிய ஊழியராகச் சேர்ந்திருக்கிறால் போலும். முன்பெல்லாம் ஆர்த்த்ரிடீஸால் அவதிப்படும் மிஸஸ். குல்கர்னி இருப்பார்.
பத்து நிமிடத்தில் ஜி.எம் வந்தார். தலைக்கவசத்தை கழற்றி, தொப் என சேரில் அமர்ந்தார். மிகவும் களைத்திருந்தார். பெல் அடித்து அந்தப் பெண்ணை அழைத்தார்.
“ மூணு டீ சொல்லு. எனக்கு தண்ணி வேணும்” என்றார்.
“குல்கர்னி மேடம் இல்லையோ?” என்றேன்.
“அவங்க மெடர்னிடி லீவுல போயிருகாங்க”
“அவங்களா?” என்றேன் திகைத்து. குல்கர்னி மேடம்-க்கு குறைந்தது ஐம்பத்து நாலு இருக்கும்.
“அட. அவங்க பொண்ணுக்கு டெலிவரி” என்றவர் எரிச்சலில், கண்மூடி ஆயாசமாக. அவரிடம் ப்ரச்சனையே இப்படி எசகுபிசகாக எதாவது தவறான ட்விட்டர் மாதிரி சொல்வதுதான்.
“அடடா,ரொம்ப வேலை போலிருக்கே சார்? களைச்சிருக்கீங்களே?” என்றேன், பேச்சை மாற்றியபடி.
“அதேன் கேக்கறே? தினமும் செத்துப் பொழைக்கறேன்”
அந்தப்பெண் டீயும், தண்ணீர் டம்ளருமாக வந்து சேர்ந்தாள். டேபிளில் வைத்துவிட்டு, அவருக்கு பின்னால் நின்றுகொண்டாள்.
“என்ன ப்ராப்ளம்?” என்றார் நண்பர்.
“ எரக்ஷன்ல ப்ராப்ளம். ” என்றார் ஜி.எம் ஆயாசமாக, புதிய ஆலை நிறுவுதல், செயல்படவித்தல் என்பதை எரக்ஷன் , கமிஷனிங் என்பார்கள்.
சிரிப்பை அடக்கி , சீரியஸாக டீயை குடிக்க முயன்றோம். அந்த விடலைப்பெண் அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு, வாயைக் கையால் பொத்திக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“குல்கர்னி மேடம் மெடர்னிடி லீவுல போயிருச்சு. இந்தப் பொண்ணுக்கு அனுபவம் பத்தாது. நான் எவ்வளவுதான் செய்ய முடியும்?”
நண்பர் சிரிப்பை அடக்க முயன்று , அந்தப் பெண்ணை கண்ணால் ‘சிரிக்காதே’ என்பதுபோல் மிரட்ட முயன்றார்.
ஜி எம் அதன்பின் சொன்னார் , திரும்பிப் பார்க்காமலே “ப்ரச்சனை இவளுக்கு நல்லாவே’ தெரியும்”
சிரிக்காம என்ன செய்ய?