அ.முஹம்மது நிஜாமுத்தீன்
எனது நண்பருக்கு வெளியூருக்கு வேலை மாற்றலாகிவிட்டது.
முதல் நாள்.வேலை முடிந்து திரும்பும்போது ரெஸ்டாரெண்டுக்குச் சென்று, தோசையும் காபியும் ஆர்டர் செய்தார். சர்வர் கொண்டுவந்து வைத்ததும், “தோசைக்கு சட்னியும் சாம்பாரும் வேண்டாம்; ஜீனி கொண்டுவாருங்கள்” என்றார் நண்பர். “தோசைக்கு ஜீனி கிடையாது, சட்னி, சாம்பார்தான்” என்றார் சர்வர். எனக்கு ஜீனிதான் வேண்டும் என்று சண்டைபோட்டு வாங்கிசாப்பிட்டுவிட்டு வந்தார் நண்பர்.
இரண்டாம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் “இன்றுமுதல் தோசைக்கு ஜீனி கிடையாது” என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் சாம்பார், சட்னியும் வந்தது. நண்பர் உடனே மறுபடியும் தோசை கொண்டுவரச்சொன்னார். வந்தது. நண்பர் ஜீனி கொண்டுவரச்சொன்னார். சர்வர் மெனு போர்டைக் காட்ட, நண்பரோ, “இன்று, முதல் தோசைக்கு ஜீனி கிடையாதுதான்; நான் இரண்டாவது தோசைக்குதான்ஜீனி கேட்டேன்” என்று சொல்லி ஜீனி வாங்கி இரு தோசைகளையும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டார்.
மூன்றாம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் “இனிமேல் தோசைக்கு ஜீனி கிடையாது” என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் சாம்பார், சட்னியும் வந்தது. நண்பர் உடனே மறுபடியும் தோசை கொண்டுவரச் சொன்னார். வந்தது. ஏற்கெனவே தட்டிலிருந்த தோசையின்மேல் இந்த தோசையையும் வைத்துவிட்டு நண்பர் ஜீனி கொண்டுவரச்சொன்னார். சர்வர் மெனு போர்டை காட்ட, நண்பரோ, “இனி, மேல் தோசைக்கு ஜீனி கிடையாதுதான். நான் கீழ் உள்ள தோசைக்குத்தான் கேட்டேன்” என்று பிடிவாதமாய் கேட்டுவாங்கி இரண்டு தோசைகளையும் ஜீனியுடன் சாப்பிட்டு புறப்பட்டார்.
நான்காம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் “இனி தோசைக்கு ஜீனி கிடையாது” என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் சாம்பார், சட்னியும் வந்தது. நண்பர் உடனே இட்லி கொண்டுவரச் சொன்னார். வந்தது. நண்பர் ஜீனி கொண்டுவரச்சொன்னார். சர்வர் மெனு போர்டை காட்ட, நண்பரோ, “நான் தோசைக்கு ஜீனி கேட்கவில்லை; இட்லிக்குத்தான் கேட்டேன்” என்று கேட்டுவாங்கி இட்லியையும் கூடவே தோசையையும் ஜீனியுடன் சாப்பிட்டு புறப்பட்டார்.
ஐந்தாம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட அதே சர்வர் ஓடிச்சென்று மெனு போர்டில் “இனி தோசை, இட்லி, பூரி எதற்கும் ஜீனி கிடையாது” என்று எழுதிப் போட்டுவிட்டார். நண்பர் ஜீனிபோடாமல் காபி கொண்டுவரச்சொன்னார். சர்வர் காபி கொண்டு வந்தார்.. நண்பர் காபியைக் குடித்துப்பார்த்துவிட்டு ஜீனி கொண்டுவரச் சொன்னார். வந்தது. நண்பர் இப்போது தோசை கொண்டுவரச்சொன்னார். தோசையும் வந்தது. தோசையை ஜீனியுடன் சாப்பிட்டுவிட்டு, காபியை ஜீனியில்லாமலே குடித்துவிட்டு நண்பர் புறப்பட்டார்.
இத்தனை நாளாக நடைபெற்ற அனைத்து சம்பவங்களையும் பார்த்துக் கொண்டிருந்த முதலாளி நண்பரிடம் “சார், இனி எப்போதும் உங்களுக்கு தோசைக்கு ஜீனி உண்டு” என்று அனுமதி அளித்தார். சர்வரிடம் முதலாளி “இனி உனக்கு சர்வர் வேலை கிடையாது. நிறுவனத்தின் நடைமுறைகளை நன்கு கடைபிடிக்கிறாய். இனி நீ சூப்பர்வைசர்.” என்று சொல்லி மிகவும் பாராட்டினார்.