தெனாலிராமன் கதை
மன்னர் கிருஷ்ண தேவராயருக்கு அவருடைய அம்மாவின் மேல் அளவு கடந்த பாசம். அவருடைய அம்மாவுக்கு வயதாகிவிட்டது. படுத்த படுக்கையாக இருந்தார்.
இனிமேல் அவர் பிழைப்பது கஷ்டம் என்பது மன்னருக்குத் தெரிந்துவிட்டது. அவர் தன் அம்மாவிடம் “உங்களுக்கு வாய்க்கு ருசியாக சாப்பிட என்ன வேணும் சொல்லுங்கள். நீங்கள் ஆசைப்படுவதை வாங்கித் தருகிறேன்” என்று கேட்டார். அவருடைய
அம்மா, “எனக்கு மாம்பழம் சாப்பிடணும் போல இருக்கு” என்றார்.
அது மாம்பழ சீசன் இல்லை. ஆனால் எப்படியாவது மாம்பழம் வாங்கி வந்து தர வேண்டும் என்று மன்னர் விரும்பினார். அம்மாவின் கடைசி ஆசை அல்லவா?
தன்னுடைய வேலையாட்களை அனுப்பினார். “எங்கேயாவது போய் எப்படியாவது மாம்பழத்தை வாங்கி வாருங்கள்” என்று உத்தரவு போட்டார். மாம்பழம் வந்தது. ஆனால் அதற்குள் அவர் அம்மா இறந்துவிட்டார்.
ராஜாவுக்கு ஒரே துக்கம். மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்று வருத்தம். அம்மாவுடைய ஆத்மா சாந்தி அடையாதோ என்று பயந்தார்.
இதற்கு என்ன செய்யலாம் என்று புரோகிதர்களிடம் கேட்டார்.
புரோகிதர்களுக்குப் பேராசை. “உங்க அம்மா மாம்பழம் சாப்பிடாம இறந்ததால், இதுக்கு பரிகாரம் பண்ணியே ஆகணும்” என்றார்கள்.
என்ன பரிகாரம்?
“தங்கத்தால் ஆன 108 மாம்பழங்களை 108 புரோகிதர்களுக்குக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அம்மாவின் ஆத்மா சாந்தியடையும். இதுதான் பரிகாரம்” என்றார்கள் புரோகிதர்கள். ராஜாவும் அவர்கள் சொன்ன மாதிரியே பரிகாரம் செய்து புரோகிதர்களை மகிழ்வித்தார்.
தெனாலிராமன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தப் புரோகிதர்கள் ராஜாவை ஏமாற்றுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார். அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார்.
தெனாலிராமன் அந்தப் புரோகிதர்களிடம் போய், “என் அம்மாவுக்குத் திதி வருது. எனக்கும் பரிகாரம் பண்ணணும். நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வாங்க” என்றார். புரோகிதர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. நல்ல வருமானம் கிடைக்கும் என்று கிளம்பினார்கள்.
தெனாலிராமன் அவர்களை வரவேற்று உபசரித்தார். பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு புரோகிதராகப் பூஜை அறைக்கு வரச் சொன்னார். அங்கே பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை வைத்திருந்தார். அந்தக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டார்.
புரோகிதர்கள் கதறிக்கொண்டே ராஜாவிடம் போய் புகார் செய்தார்கள். ராஜாவுக்கு ரொம்பக் கோபம். “தெனாலிராமா! ஏன் இப்படி சூடு போட்டாய்?” என்று கோபத்துடன் கேட்டார்.
தெனாலிராமன் பணிவாக பதில் சொன்னார். “ராஜா! நான் எந்தத் தப்பும் பண்ணல. எங்கம்மா ரொம்ப உடம்பு சரியில்லாமல் இருந்தாங்க. சாகிற நேரத்துல அவருக்கு வலிப்பு நோய் வந்துடுச்சி. வைத்தியர்கள் அவருக்கு சூடு போடச் சொன்னாங்க. ஆனா சூடு போடறதுக்கு முன்னாலயே அவர் செத்துபோயிட்டார். எங்கம்மா ஆத்மா சாந்தி அடையணும்னா புரோகிதர்களுக்கு சூடு போடணும்னு பெரியவங்க சொன்னாங்க. அதைத்தான் செஞ்சேன்” என்றார்.
“நீ சொல்வது ரொம்ப முட்டாள்தனமா இருக்கே!” என்றார் ராஜா.
“இதில் என்ன முட்டாள்தனம் இருக்கு? உங்க அம்மா மாம்பழம் சாப்பிடாம செத்துப் போனபோது புரோகிதர்களுக்கு தங்கத்துல மாங்கா செஞ்சு குடுத்தீங்க இல்லயா? அதே மாதிரிதான் இது” என்றார்.
அப்போதுதான் தான் செய்த முட்டாள்தனம் அவருக்குப் புரிந்தது. புரோகிதர்களின் பேராசையும் புரிந்தது. தெனாலிராமன் செய்ததை எண்ணி அவருக்குச் சிரிப்பு வந்தது. சிரித்துக்கொண்டே தெனாலிராமனைப் பாராட்டினார்.