கன்னல் கவியழகில் காதல் பெருக்கெடுத்து
மின்னும் தமிழ்நெஞ்சம் இன்னமினார்! – மன்னுபுகழ்
பின்னும் நிலையுறுக! பேறுகள் பெற்றோங்கி
இன்னும் கலையுறுக ஈங்கு!
அன்பின் பெருக்கால் அனைவரையும் ஆட்கொள்ளும்
இன்பத் தமிழ்நெஞ்சம் எம்அமினார்! – நன்வாழ்கை
அன்னை மொழியேந்தும்! முன்னை நெறியேந்தும்!
பொன்னை அகமேந்தும் பூத்து!
கம்பன் இதழேங்கக் கற்ற கலையளித்த
நம்மின் தமிழ்நெஞ்சம் நல்லமினார்! – செம்மொழியை
எங்கும் பரப்பும் இனியபணி ஓங்குகவே!
பொங்கும் புகழிற் பொலிந்து!
நல்ல இதழ்ப்பணியை நாடிப் படைக்கின்ற
வல்ல தமிழ்நெஞ்சம் வண்ணமினார்! – பல்லாண்டு
வாழ்க! வளங்கள் வளர்ந்தோங்கி விண்ணருளால்
சூழ்க நலங்கள் சுடர்ந்து!
நூலின் வடிவமைப்பாம் நுட்பம் பலகற்ற
பாலின் தமிழ்நெஞ்சம் பண்ணமினார்! – ஆலின்
தழைப்பேந்தி வாழ்க! தனித்தமிழ் கொண்ட
செழிப்பேந்தி வாழ்க சிறந்து!
12 Comments
சீராளன். வீ · ஏப்ரல் 25, 2016 at 14 h 24 min
இன்பக் கவியில் இனிக்கின்ற நல்வாழ்த்தில்
அன்பின் தமிழ்நெஞ்சம் ஆரமினார் – என்றும்
இறையின் அருள்பெறுவார் இவ்வுலகை வெல்வார்
மறைதமிழ் போலும் மலர்ந்து!
தம · மே 2, 2016 at 10 h 37 min
மிகவும் அருமையான வாழ்த்து அண்ணா
படித்தேன்! சுவத்தேன்! தமிழை உணர்ந்தேன்!
வாழ்க வளமுடன், நலமுடன் தமிழ்நெஞ்சம்!
தமிழ்ச்செல்வன் · மே 2, 2016 at 10 h 42 min
அண்ணன் தமிழ்நெஞ்சம் ஆற்றும் பணியறிந்து
எண்ணம் இனித்தே எழுதுகிறேன்! – வண்ணங்கள்
கொண்டொளிர் வாழ்வுறக! கோல எழிலொளிரும்
தண்டமிழ் போன்றே தழைத்து!
hyrunrahman · நவம்பர் 4, 2016 at 3 h 06 min
படித்தேன் இனித்தேன் அருமை!
Rimza Mohamed · நவம்பர் 11, 2016 at 6 h 15 min
Good Poem
பாவேந்தல் பாலமுனை பாறூக் · ஜூன் 26, 2017 at 13 h 36 min
தமிழொடு வாழும் நெஞ்சம்
தமிழொடு வாழும் நெஞ்சம்
தகைமையில் உயர்ந்த நெஞ்சம்
அமிழ்தினில் இனிய தான
அன்பினில் கனிந்த நெஞ்சம்!
பிறந்தநாள் இன்று அந்தப்
பெருமகன் தன்னை வாழ்த்தும்
அரியதோர் வாய்ப்பைப் பெற்றேன்
அன்னார்க்கு என்றன் வாழ்த்து!
நிறைநலம் பெற்று வாழ்க!
நீடூழி வாழ்க! வாழ்க!!
இறையவன் அருளி னாலே
இன்பமே பெற்று வாழ்க!
விவேக் பாரதி · ஆகஸ்ட் 5, 2017 at 23 h 12 min
நல்ல கவிகளை நாளும் புரந்திடும்
வல்ல தமிழ்நெஞ்சம் வாழிய ! – செல்வதமிழ்
எங்கிருந் தாலும் எடுத்துப் பகிர்கின்ற
உங்கள் செயலிங் குயர்வு !
அ.முகம்மது அலி ஜின்னா · ஆகஸ்ட் 22, 2017 at 2 h 58 min
தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் தமிழ்நெஞ்சம் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றார்கள்.
முகம்மது அலி ஜின்னா · ஆகஸ்ட் 26, 2017 at 13 h 36 min
சிறப்பானவரைப்பற்றி சிறந்த கவிஞர் அருமையான கவிதையை தந்தமைக்கு அன்புடன் வாழ்த்துக்கள்
மலர்மதி · ஜூன் 7, 2018 at 14 h 16 min
‘வடிவமைப்பு வேந்தர்’ வாழ்க!
வடிவமைப்பு என்னும் உளிகொண்டு பாங்காய்
வடிவங்கள் யாவும் செதுக்கிடும் ஆசானே,
மாந்தர் பலரை வழிநடத்திச் சென்றிடும்
வேந்தர் அமினாரே வாழி!
பொன்னியின் செல்வன் · நவம்பர் 7, 2020 at 16 h 51 min
தமிழ் நெஞ்சம் தழைக்க நல்ல
தனி மகனாய் விளங்குகின்ற தமிழமின்
புவிதன்னில் பூத்தநாள் இன்று; நல்லோர்
செவியெங்கும் தேன்தமிழை சேர்க்கு மிவர்
சிறப்புடனே வாழ்க பண்ணெடுங் காலம் !
TikTok Algorithm · ஏப்ரல் 16, 2025 at 16 h 25 min
I am extremely impressed along with your writing skills and also with the structure to your weblog.
Is that this a paid theme or did you customize it yourself?
Anyway keep up the excellent quality writing, it’s uncommon to look a
great blog like this one these days. Blaze AI!