தமிழ் எங்கள் உயிருக்கு நேர்தெருவெங்கும் தமிழ்முழக்கம்
நறுந்தேனாய் ஒலிக்கின்ற
திருநாளும் வந்திடத்தான் வேண்டும் – நாம்
தீந்தமிழில் பேசிடுவோம் மீண்டும்!

விழியின்றேல் ஒளியில்லை
மொழியின்றேல் இனமில்லை
அழியாமல் மொழிதன்னைக் காப்போம் – நாம்
அன்றாடம் தமிழ்பேசி ஆர்ப்போம்!

ஆதியிலே மூத்தக்குடி
பாதியிலே பிரிந்தின்று
வீதியிலேக் கிடப்பதென்னக் கோலம் – நீயும்
விழித்திட்டால் கைகூடும் ஞாலம்!

பெற்றெடுத்தக் குழந்தைக்கு
மற்றமொழி பெயர்வைத்தல்
குற்றமென உணர்வதுவும் என்றாம் – இனிய
கொஞ்சுதமிழ் பெயர்சூட்டல் நன்றாம்!

பெற்றோரைப் பேணாமல்
நற்றமிழைக் காவாமல்
வற்றித்தான் போனதுவா அன்பு – நீயும்
வருந்தித்தான் அழுவதுவா பின்பு!