tamilnenjamவல்லதமிழ் ஓங்க வரலாற்றை நன்காய்ந்து
நல்லபுகழ் நுால்களை நல்கியவர்! – வெல்லுதமிழ்
அண்ணல் மறைந்திட்டார்! ஐயகோ! அன்பருளக்
கண்ணீர்க் கடலெனக் காண்!

ஓங்கும் தமிழணிக்கே ஒப்பில் தலைமையினைத்
தாங்கும் மறவர் தமிழண்ணல்! – ஈங்கெழா
நீடுதுயில் கொண்டதுமேன்? ஐயோ!தன் நெஞ்சுடைந்து
பாடுகுயில் தேடும் பறந்து!

ஆழ்ந்த உரையளித்துத் தாழ்ந்த நிலைதுடைத்துச்
சூழ்ந்த பகையொழித்துத் தொண்டீந்தார்! – வீழ்ந்துயிர்
அக்கக்காய் ஆகிடவே அய்அய்யோ எங்குற்றார்?
இக்கெட்டில் வாடும் இனம்!

அயற்சொல் அகற்றிடுவீர்! அந்தமிழ் நம்மின்
உயிர்கொள் எனவுரை ஓர்ந்தார்! – உயர்வனைத்தும்
தந்த தமிழண்ணல்! எந்த உலகுற்றார்?
சிந்தை அழுமே சிதைந்து!

தாய்மொழிக் கல்வி தழைத்திட வேண்டியே
ஓய்வின்றி நாளும் உழைத்தவர்! – சாய்வின்றி
வாழும் வழியளித்த வள்ளல் பிரிந்ததுமேன்?
சூழும் இருளே தொடர்ந்து!

கோயில் தலமெங்கும் கோலத் தமிழ்மணக்க
வாயில் வடித்த தமிழண்ணல்! – சேயவரைத்
தாயிங்குத் தேடுகிறாள்! போயுள்ள ஊரெதுவோ?
வாயிங்குக் கத்தும் வரண்டு!

உண்ணா துறங்கா துழைத்தவர்! எந்நாளும்
மண்ணார் மடமையை மாய்த்தவர்! – திண்ணமுடன்
இன்னும் பல..பகைவர் இங்குள்ளார்! ஏன்பிரிந்தார்?
மன்னும் துயரால் மனம்!

அண்ணல் பிரிவாலே இன்னல் பலகோடி
நண்ணும் நமதினமே! நற்றாயே! – திண்ணமுடன்
பொன்னை நிகர்த்தகவி பூத்தவர் போனதுமேன்?
என்னையினிக் காப்பார் எவர்?

பொன்னுால் அடைந்திடும் பூந்தமிழ் வாணரை!
நன்னுால் அடைந்திடும் நாவலரை! – தொன்னுால்
அடைந்திடும் துாயவரை! அண்ணலே நானிங்[கு]
அடைந்திடும் பாதை அறை!

பண்கள் அடைந்திடும் பாவலரை! பைந்தமிழ்
எண்கள் அடைந்திடும் ஏற்றவரை! – மண்ணுலகில்
நானெவரை நாடிடுவேன்? அண்ணலே மீள்பிறக்க
வானவரை வேண்டும் மனம்!


1 Comment

Fiverr Affiliate · ஏப்ரல் 13, 2025 at 9 h 49 min

I am really inspired along with your writing abilities and also with the
layout on your blog. Is this a paid theme or did you modify it yourself?
Either way keep up the nice high quality writing, it is rare
to look a great weblog like this one nowadays.
Youtube Algorithm!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.