அன்புள்ள அம்மா …
உன் சுகம், நலம் அறிய …,
அளவிலா ஆவல் எனக்கு – உன்
அன்பு மகள் நான்
பக்கத்தில் இல்லாதபோதும் – நீ …
எப்படி இருக்கின்றாய் தாயே!
உன் பிஞ்சுகளாம் – என்
தம்பியும், இரு தங்கைகளும்
நலமாக உள்ளனரா?
கல்யாணமாகிப்போய்விட்ட
அக்காவும், அண்ணாவும்
வந்து போவதுண்டா?
நீண்ட நாள்களாய் – என்
மடல் காணாத உன் கண்கள்
உறங்கி இருக்காதென்பது
எனக்குத் தெரியும்
மூன்று மாதங்களுக்கொரு முறை
என் பிஞ்சு விரல்கள் வரையும்
காகிதம்தான் உன் மனதுக்கு
அமைதியளிக்கும் என்பதும் தெரியும்!
எழுதவும் கற்றுத் தந்தாய்,
ஒழுக்கமும் ஊட்டிவிட்டாய்
பிணங்களும் பின்னால் அலையும்
பணத்துக்கு வழியில்லாமல்
கடல் கடந்து வந்துவிட்டேன்
கலையிழந்து வாடுகின்றேன்!
அரபு நாட்டு அரக்கர்களின்
அடிமையாகிப் போன பின்னால்
நான் காணும் இன்னல்கள்
எழுத்தினில் அடங்காதம்மா
மனம்விட்டுச் சொல்லிவிட்டால் – நீ
உயிர்விட்டுப் போய்விடுவாய் என்பதனால்
இத்துணை நாளும் மடலே எழுதவில்லை.
இங்கென்றால்
நன்று என்ற சொல்லே
நாறித்தான் கிடக்கிறது!
எஜமானின் அப்பா
இயலாத கிழவன்தான்
நாளும் அவனைக் குளிப்பாட்ட
நான்தான் பலிக்கடாவாம்
குளிப்பாட்டவும் வேண்டும் – உடல்
குளிர, ஆற்றவும் வேண்டும்!
எஜமானின் வீட்டு கனவான்களுக்கு
சமைத்துத்தான் கொடுக்கின்றேன்
வயிற்றுப் பசியாற்றவும்
உடற் பசியாற்றவும்
என்னைத்தான் நாடுகின்றான்
ஒருவன் மாறி ஒருவன்!
செத்துப்போன உடலுக்குள்ளே
ஒரு குற்றுயிராய் வாடுகின்றேன்
கலங்கிவிடாதே தாயே…!
என்றோவொரு நாள்
விடுதலை கிடைத்தால்
வந்து சேருகின்றேன் – உன்னையும்,
உன் பிஞ்சுகளின் முகங்களையும்
இறுதியாக ஒருமுறை பார்த்துவிட …
நீ கற்றுத்தந்த ஒழுக்கத்தை
தெருவிலே விட்டவளாய்…
என்னை மன்னித்துவிடம்மா!!!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...