ஹேய்….இங்க பாரேன் கிரி….! மூணு மாசக் குழந்தையைக் கூட இந்த ‘மாண்டசரி ஸ்கூல்ல’ சேர்த்துக்கறாளாம். வெரி நைஸ்…இல்லபா … நல்லவேளையா இப்ப ..நம்ம கீட்ஸு க்கு நாளையோட அவன் பொறந்து நாலாவது மாசம் முடியப் போறது ..இன்னி வரைக்கும் இந்த ஹோர்டிங் அட்வெர்டைஸ்மென்ட் என் கண்ணுலயே படல பார்த்தியா..? டூ யு நோ திஸ் பிஃபோர் ரா….?
நோ….பார்…….!
தெரியாதுங்கறியா….? இல்ல ‘நோ பார்’னே சொல்றியா..
இல்ல பார்கவி தெரியாதுன்னு சொல்றேன். நானும் உன்கூட சேர்ந்து இப்பத்தான் இதைப் படிக்கறேன்..
யூ…சோம்பேறி …டெய்லி இந்த வழியாத் தானே வரே நீ…அதெப்படி உன் கண்ணுலேர்ந்து இவ்ளோ பெரிய ஹோர்டிங் தப்பிச்சது ?
இதெல்லாம் உங்க கண்ணுக்குள்ள மட்டும் தான் சிக்கும் ….நான் பாட்டுக்கு ரேடியோ மிர்ச்சி கேட்டுக்கிட்டு எனக்கு முன்னாடி யார் வண்டி ஓட்டறா..? ஏதாவது அம்ச ஃபிகர் கண்ணுல மாட்டாதான்னு டைம் பாஸ் சைட் அடிச்சுண்டு இருப்பேன்..போயும் போயும் இதெல்லாம் யாருக்கு வேணும்? நான் தனியா வெளில வந்தாச்சுன்னா அவ்ளோ தான். சென்ட் பெர்செண்ட் பாச்சலர் ரா…!
அதே தான் நானும் திங் பண்ணேன்…உன்னைப் பத்தி….நீயே அதை அக்செப்ட் பண்ணீட்டே…ஹேய் மிஸ்டர் கிரி….நீ தான் மிஸஸ் பார்கவியாகி ரெண்டு வருஷமாயாச்சு….அதுக்கு அடையாளமா..?
உன் கழுத்துல தாலி தொங்கலை….!
ம்கும்….உன் காதுல கடுக்கண் மின்னறது மச்சான்….மண்டைக்கு சூடு போட்டுக்கோ சொல்லிட்டேன்….ஒழுங்கா ஆபீஸ் போனமா….வேலையை மட்டும் பார்த்தோமா…பார்கவிக்கும், கீட்சுக்கும் பிடிச்சதை வாங்கித் தந்தோமான்னு நல்ல பையனா லட்சணமா சமத்தா நடந்துக்கணம்…..சரியா….காரை ஒட்டிக் கொண்டிருந்த கிரியின் காதைத் திருகி அழகு காட்டினாள் பார்கவி.
அங்க பாரேன்… பார்….அந்தப் பொண்ணு எப்படி பைக்குல அவனோட ஒட்டிக்கிட்டுப் போறாள்னு….நீயும் இருக்கியே….ஆயிரம் சொல்லு பைக் பைக்கு தான் கார் ….கார்…தான். இல்லியா பார்….!
நீ திருந்தவே மாட்ரா ..! உன்னோட லொள்ளும்…ஜொள்ளும் ..
என்னோட கவச குண்டலங்கள் மாதிரி…!
வீட்டுக்கு வா…அம்மா காதுல போட்டு வைக்கிறேன்…..உன்னோட திருவிளையாடலை….! உங்கம்மா பண்ற அர்ச்சனைக்கு மட்டும் தான் நீ அடங்குவே..!
வேண்டாண்டி…பார்….என் பாவமான மூஞ்சியைப் பாரேண்டி ..! அம்மாவுக்கு, ஆரம்பிச்சா நிறுத்தத் தெரியாதுன்னு உனக்கே தெரியுமே.
சரி.சரி…ஜோக்ஸ் அபார்ட்…..இப்ப விஷயத்துக்கு வா……நம்ம கீட்ஸுக்கு நல்ல ஸ்கூல் கிடைச்சாச்சு…
நாளைக்கே போயி விசாரிக்கணம்….அட்ரெஸ மெசேஜ் பண்ணி சேவ்ல போட்டு வெச்சுக்கோ.
கஷ்டம் கஷ்டம்..இவன் பொறந்து வெறும் நாலே மாசம் தானே ஆறது….அதுக்குள்ளே உனக்கு என்னாச்சு பார்.?
இவ்ளோ அவசரப் படறே. அட…நான் தான் மறந்தே போய்ட்டேன்….நீ தான் ஒன்பது மாசம் முடிஞ்சதுமே ஹாஸ்பிடல்ல ரூம் போட்டு, இன்னிக்கு இந்த நட்சத்திரத்துல தான் என் குழந்தை பொறக்கணும்னு அடம் பிடிச்சு சிசேரியன் கேஸாச்சே.உன் கிட்ட என் பருப்பு வேகாது…..!.
ஆஸ்பத்திரி வாசல்ல நாதஸ்வரம் ஏற்பாடு பண்ணி வெச்சு குழந்தை பொறந்த உடனே வாசிக்க சொல்லியிருந்தேனே அதை நீ பாராட்டவேயில்லை…கிரி ….!
ஆமாமா…..அதான் குழந்தை பயத்தில், பிறந்ததும் இன்குபேட்டர்ல போய் படுத்துண்டான்…இதெல்லாம் என்னமோ…தெரியலை….நீ மட்டும் தான் அப்படியா இல்லை உன் குடும்பத்துல வேற யாராச்சும் இப்படி மரை கழண்ட கேஸுகள் இன்னும் இருக்கா…?
உனக்குத் தெரியாதா….? இதெல்லாம் கூட வாஸ்து மாதிரி தான்…இப்பல்லாம் இதெல்லாம் ஃபேஷனாவே ஆயாச்சு.. இப்படில்லாம் பண்ணாதவா தான் குறைவு.
நான் இதுல ஜீரோ…. பட் நோ..பெயின் ……நோ கெய்ன்டி பார்….!
ம்கும்…நோ பெயின் பட் கெய்ன்..கீட்ஸ்…!
நான் உன்ன மாதிரி..என்னை மாதிரியெல்லாம் நம்ம குழந்தையை வளர்க்க மாட்டேனாக்கும். எனக்குன்னு ஒரு ப்ளான். என் கசின் சிஸ் திவ்யா தெரியுமா.?.. ஞாபகம் இருக்கா?
ம்ம்….அந்த பரட்டைத் தலை…..அச்சச்சோ….அந்த பாப் தலைவி…!
அது…..! அவள்….குழந்தை வயித்தில இருக்கும்போதே அதுக்குன்னு எதோ ஒரு கிளாசுக்கு போயிருக்கா…அதனாலத் தான் அவ குழந்தை பிரேமுக்கு ஒரு வயசு தான் ஆறது…அதுக்குள்ளே புத்தகத்துல இருக்கும் அத்தனை படத்தையும் ஐடெண்டிஃபை பண்ணி டக்கு டக்கு ன்னு சொல்றானாம். இவளுக்கு ரொம்பப் பெருமையா இருக்காம்…போன வாரம் கூட ஃபோன் பண்ணிச் சொல்லி சந்தோஷப் பட்டாள் .
ரொம்ப முக்கியம்….! இல்ல… இல்ல… பிரேம் இப்பவே நம்ம கீட்ஸ் க்கு வில்லனாயிட்டானா..? ன்னு.
என்ன நீ கிரி…..நம்ம கீட்ஸ் கூட அவனை மாதிரி வரவேண்டாமா…? அதுக்குத் தான் இந்த ஸ்கூல்.
இந்த விஷயத்தில் நீ அவசரப் படாதே பார்…! அம்மாட்டயும் கேட்கணும்..அவாளுக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே இருக்காது நீ வேணாப் பாரேன்… எவனோ காசு பிடுங்க போடற ஐடியாவில் நீங்க முதலீடு செய்யாதேங்கோன்னு சொல்வா.
ஆமாமா…அப்டித் தான் சொல்வா…நான் சொல்ற எதுக்கு உங்கம்மா உடனே அப்படியா சரின்னு சொல்லிருக்கா..? அதெல்லாம் கேட்டுண்டு இருந்தா நம்ம குழந்தை கடைசி பெஞ்சுல கண்ணைக் கட்டிண்டு உட்காரணம், பரவாயில்லையா..? உங்களுக்கு வேணா பரவாயில்லைன்னு இருக்கலாம்….என்னால முடியாது. ஐ வில் மேக் ஹிம் தி பெஸ்ட் கிட் …! உலகம் எவ்வளவு வேகமா போறது தெரியுமா? அதுக்கேத்த வேகம் இருந்தாத் தான் வர காலத்துல பிழைக்க முடியும்.
வீட்டுக்குள் போனதும் என்ன மாதிரியான வாக்குவாதம் நடக்கப் போறதோ….இப்பவே மனத்தில் 70mm அளவுக்குத் திரை விழுந்து அதில் பார்கவி ஃபுல் ஸ்க்ரீனில் முறைத்துக் கொண்டு தெரிந்தாள் . அதை ஜூம் அவுட் பண்ணுவதற்குள் வீடு வந்து விட்டது.
காரைப் பார்க் செய்து விட்டு, ஹேய்….கமான் பார்…..பி ரிலாக்ஸ்ட்….இங்கேர்ந்தே மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்காதே….அம்மா கண்டு பிடிச்சுடுவா…! ஒ கே. கூல் பேப்..கொஞ்சம் சிரியேன் .
எனக்குத் தெரியாதா..? உங்கம்மாக்கு உடம்பெல்லாம் கண்ணுன்னு..இதுக்கொண்ணும் குறைச்சலில்லை….. ஈஈஈஈ …போதுமா…?
அது சரி…ரொம்ப வாராதே..! ரொம்ப ஜாஸ்தி….கொஞ்சம் குறைச்சுக்கோ பரவாயில்லை ‘சின்ன இ’ யே…போதும்.
நான் என்ன இங்க ஈயாப் பிடிக்கறேன்….’சின்ன ஈ’ போதும்…வெ வெ வெ வெ ..கிரியைப் பார்த்து அழகு காட்டினாள்…இங்க பாரு. அம்மாக்கிட்ட எனக்கு நீ சப்போர்ட் பண்ணிப் பேசணம் ..புரிஞ்சுதா? நான் என் குழந்தைக்கு எது செஞ்சாலும் அவன் நல்லதுக்குத் தான் செய்வேன்.
அது சரி… எல்லாருக்குமே அப்படித்தான் குழந்தை மேல பாசம் உண்டு பார்.
யார் இல்லைன்னா…..அப்டி இருந்தால் எனக்கு யார்ட்டயும் இதுக்காக கெஞ்சவே வேண்டாமே..நாளைக்கே அந்த ஸ்கூல்ல சேர்த்துடலாம்….இல்லையா?
வீட்டுக்குள் நுழையும் வரை பேசிக் கொண்டே செருப்பைக் கழற்றி விட்டு, உள்ளே நுழைந்ததும்,ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டே ‘சரவணன் மீனாட்சி ‘ சீரியலில் ஐக்கியமாகி பார்த்துக் கொண்டிருந்த சுபத்ரா , ஊஞ்சலை நிறுத்தி விட்டு, ஷாப்பிங் போய்ட்டு வந்தாச்சா…? கீட்ஸ் பசிச்சு அழுதானா….முதல்ல அவனுக்கு திருஷ்டி சுத்திப் போடணம். என்றபடி ஊஞ்சலிலிருந்து இறங்கினாள் .
ம்மா…..உன் மருமகள் சொல்வா….கேளேன்…..நம்ம கீட்ஸ்சை நாளையிலேர்ந்து ஸ்கூல்ல சேர்க்கப் போறாளாம்..
என்னடாது கூத்தாயிருக்கு…?.பொறந்து நாலு மாசம் கூட கழியலை…இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கெல்லாம் யார் ஸ்கூலை கட்டி வெச்சுண்டு உட்கார்ந்திருக்கா . நன்னாருக்கு போ..!
அதெல்லாம் இருக்கு. குழந்தை வயித்துக்குள்ள இருக்கும்போதே சொல்லித் தர ஸ்கூல் எல்லாம் கூட வந்தாச்சாம். பார்கவி சொல்றா. நமக்கு தான் இதெல்லாம் ஒண்ணும் தெரியலை.
அதுக்குள்ளே ஸ்கூலாவது….கீலாவது … நான் இதுக்கு ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். ப்ளே ஸ்கூலுக்கு போக மூணு வயசானவட்டு பார்த்துக்கலாம்.
ம்மா…நீ கொஞ்சம் சும்மா இரேன்….கிரி அம்மாவின் வாயை அடைத்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த பார்கவி,
ஏன் நிறுத்திட்ட கிரி… நீயே அம்மாட்ட சொல்லியாச்சா..?
இல்லையில்ல இப்பத் தான் சொல்லிண்டு இருக்கேன்.
இதோ பார் பார்கவி…அவன் எல்லாம் சொன்னான்….ஆனா அதெல்லாம் நம்மாத்து குழந்தைக்கு இந்தக் கூத்தெல்லாம் ஒண்ணும் வேண்டாம். பொறந்து நாலு மாசம் ஆகும் குழந்தையை யாராவது ஸ்கூல்ல சேர்ப்பாளா? இன்னும் முகம் பார்க்கவே முழுசா ஆரம்பிக்கலை.
இப்பல்லாம் வயித்தில் இருக்கும் குழந்தைக்கே பாடம் சொல்லித் தர ஸ்கூல் இருக்கு தெரியுமா?
அந்தக் கண்றாவியெல்லாம் நமக்கெதுக்கு? யாரோ பைத்தியம் பிடிச்சவா பண்ணினா நம்மளும் பண்ணணமா ? குழந்தைக்கு செர்லாக் கரைத்துக் கொண்டே சொல்லும் சுபத்ராவைப் பார்த்து,
அதெல்லாம் ஒண்ணுமாகாதும்மா . கீட்ஸ் கண்டிப்பா இந்த ஸ்கூல்ல சேருவான். ஒரே வருஷத்தில் அத்தனையையும் கத்துப்பான்…நீங்களே பார்த்து அசந்து போயிடுவேள்.
கிரிதரனை நாங்க அஞ்சு வயசுல தான் ஸ்கூல்லயே சேர்த்தோம்…அவனுக்கு என்ன படிப்பா வரலை…? அவன் அப்பா பள்ளிக் கூடம் போன வயசென்ன தெரியுமா..? பத்தோ பன்னெண்டோ…அவர் என்ன வக்கீலாகலையா?
அது அந்தக் காலம்…நீங்க அந்தக் காலத்துலேயே இன்னும் இருந்தாக்கா நான் என்ன செய்றது? காலத்துக்கேத்தா மாதிரி மாறித் தானே ஆக வேண்டியிருக்கு. கோபத்துடன் அடம் பிடிக்கும் கீட்ஸின் வாயில் செர்லாக்கைத் திணித்தபடியே சொன்னாள் பார்கவி.
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் சொன்னால் கேளு. காலம் ஒண்ணும் அப்படியே தலை கீழா மாறிப் போகலை. கொஞ்சம் மாடர்னா இருக்கு..ஒத்துக்கறேன்.கட்டினவனை வாங்கோ…போங்கோ..ன்னு கூப்பிடறதிலிருந்து வா..போ..ன்னு பேசறது வரைக்கும்…மத்தபடி ஒண்ணும் பெரிய மாற்றம் இல்லை.
நீங்க இந்த வீட்டுக்குள்ள இருந்துண்டு இவ்ளோ தான் மாற்றம்னு சொன்னா ஆச்சா?
இல்லையே…டீவி சீரியல்ல இப்பத் தான் கேட்டேன்..சரவணனை மீனாட்சி…வாடா…போடான்னு ஏலம் போடறாளே, அதை வெச்சுத் தான் சொல்றேன். ஏன்….நம்மாத்தில் நடக்கலையா?
இதைக் கேட்டதும், படக்கென்று குழந்தையை மடியிலிருந்து வாரியெடுத்து தோளில் சார்த்திக் கொண்டு கிண்ணங்களை தொப் தொப்பென்று கிட்சன் சிங்கில் போட்டு விட்டு விருட்டென்று படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டு கதவைச் சார்த்திக் கொள்கிறாள் பார்கவி.
ஒண்ணுமே இல்லாததுக்கு இவ்ளோ கோபமா? சிவ சிவா….! இந்தக் காலத்துப் பொண்களுக்கு பேருக்கு ஆம்படையான் பேரைப் பின்னாடி வாலாட்டமா எழுதறாப்பல.முன்னால கோபிஷ்டின்னு சேர்த்தாலும் தேவலை போலத் தோணறது.
டேய்…கிரி….நீங்க ரெண்டு பேரும் சாப்டாச்சா? வெளில வாசல்ல போயிட்டு வந்தாலே கூடவே ஏதாவது பிரச்சனையையும் சேர்த்து வாங்கீண்டு வந்தால் நான் என்ன பண்ணுவேன் ? எல்லார் சௌகரியம்…நான் சொல்லியாச்சு…கேட்டால் கேளுங்கோ…கேக்காட்டா எப்படியோ ஆகட்டும்….அறுத்தவ சொல்லு அந்த அடுக்களை முட்டும் தான் எந்த அம்பலமும் ஏறாதுன்னு தெரியும்…..இருந்தும் நான் மாமியார் பவுசு காட்டறேன் பார்…என் புத்தியைச் சொல்லணம் …அவாள்லாம் படிச்சவா….பல இடம் போறவா….வரவா……
ம்ம்ம்ம்….டேய்…கிரி……பார்கவியை சாப்பிடக் கூப்பிடு. மத்தபடி அவளோட எந்த விஷயத்துலயும் நான் என் ஜலதோஷ மூக்கை நுழைக்கலை. சொல்லிக் கொண்டே வாஷ்பேசினை நோக்கிச் சென்று மூக்கைச் சீந்தி அலம்புகிறாள்.
ம்ம்மா….போகட்டும் . விடேன்… நீ வீணா இதுல தலையிடாதே. அவளுக்கு நம்ம கீட்ஸ் ரொம்ப சின்ன வயசிலயே நிறைய படிச்சுடணம்னு ஆசைப்படறா . நான் ஏற்கனவே சொல்லிப் பார்த்தாச்சு…உனக்குத் தான் அவ குணம் தெரியுமே.
நல்ல குணம்..!தான் பிடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு ….!
கொஞ்சம் விட்டுப் பிடிச்சா சரியாயிடும்மா..!
என்ன…தும்ப விட்டு வாலைப் பிடிக்கச் சொல்றே? நான் விடறேன் நீ பிடிச்சுக்கோ. நீயாச்சு… உன் பொண்டாட்டியாச்சு. நானா சம்பாத்திக்கறேன்…நானா காசு கட்டப் போறேன்…?
அப்போ சும்மா இரேன்…!
எப்பவும் நான் சும்மா இருந்தா உங்களுக்கு சந்தோஷம் தானேப்பா.
ம்மா, பார்த்தியா கோச்சுக்கறே.
இப்பல்லாம் உங்க காட்ல மழை…. ஜமாயிங்கோ. நான் ஏன் கோவிச்சுக்கப் போறேன்..? அந்தக் காலம் போலையா இந்தக் காலம்…அதான் இந்தக் காலத்துக்கு புதுசா கம்ப்யூட்டர் கொம்பு முளைச்சிருக்கே…!
இந்த ஒரு வார்த்தை பச்சைக் கொடியில் , பார்கவி ‘கீட்ஸ்’ஸுக்கு அடுத்த நாளே அட்மிஷன் போட்டு விட்டாள். நம்ம கீட்ஸ் கிட்ட ஒரு போட்டோவை காண்பிக்க, அவன் எவ்வளவு உன்னிப்பா அதையே பார்த்துண்டு இருந்தான் தெரியுமா..?
ஏதோ பெரிய விஷயமாக அதைச் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள்.
ஆமா… எல்லாம் சரி தான்.. இதுக்கு அவாளுக்கு எவ்வளவு தட்சணை எடுத்து வெச்சேள் ?
நாலு மாசத்திலேர்ந்து ஒரு வயசு வரைக்கும் இருபதாயிரம் ஃபீஸ். அதுக்கப்பறம் கூட பத்தாயிரம் ஆகுமாம்.
பேஷ்….பேஷ்…ரொம்ப நன்னாருக்கு….முகம் பார்க்க ஆரம்பிக்கிற குழந்தைக்கு என்னத்தை அப்படி சொல்லித் தந்துடுவா? அப்போ என் பேரன் ஐஸ்டின் மாதிரியோ இல்லாட்டா அப்துல் கலாம் மாதிரியோ வரப் போறானா?
இந்த நக்கல் தானேம்மா வேண்டாங்கறது…நிச்சயமா என்னை மாதிரியோ உங்க பிள்ளை மாதிரியோ இருக்க மாட்டான்…முகத்தில் பெருமை பொங்கச் சொன்னவள் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் .இவனும் ஏதாவது புதுசாக் கண்டுபிடிச்சு இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பான். அதுக்கு இப்பல்லாம் நிறைய ஆப்பர்ச்யூனிட்டி இருக்கு. இவாளுக்குத் தான் இனிமேல் நிறைய ஓபனிங்ஸ். அம்மா…இன்னைக்கு நிஜம்மா நீங்க இவனுக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கோ…அப்டியே எனக்கும்…! என்று சொன்ன பார்கவியைப் பார்த்து,
அது சரி….! என்னமோடிம்மா …உன் ஆசைக் கனவு ஜெயிச்சால் நான் நல்ல மாமியார்…தான்..என்று கேலியாகச் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைகிறாள் சுபத்ரா.
என்னம்மா நீங்க…இதுக்குப் போயி அலட்டிகறேள். ஐம் சாரிம்மா…..கெஞ்சலான குரலில் ஐஸ் வைத்து சொல்வதைக் கேட்டதும் சுபத்ராவும் உருகித் தான் போனாள்.
காலச் சக்கரச் சுழற்சியில் பத்து வருடங்களை முழுங்கியிருந்தது. சுபத்ரா தெய்வமாகி சட்டத்துக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்….மென் மேலும் பதவி உயர்வில் கிரி நேரமே இல்லாமல் தவித்தான். பார்கவி கூடிப்போன பத்து கிலோவை தன் உடம்பிலிருந்து கரைக்க அரும்பாடு பட்டு டயட்டில் தவித்துக் கொண்டிருந்தாள். கீட்ஸ் மட்டும் பத்து வயது சிறுவனா அல்லது இருபது வயது வாலிபனா என்று அனைவரையும் சிந்திக்க வைத்தான்.
கீட்ஸ்…படிச்சுட்டியா…ஹோம் வொர்க் பண்ணியாச்சா?
ஓவர்….நத்திங் பெண்டிங். படிக்க ஒண்ணுமேயில்லை …ஐம் கோயிங் டு வாட்ச் மூவி நௌ .
மா….இட்ஸ் ஸோ போரிங் …எனக்கு வெளில போகணும்….கார் சாவி தாயேன் . ஒரு ரவுண்ட் போயிட்டு வரேன்..
அய்யய்யோ வேண்டாம்டா ப்ளீஸ்….!
….ம்ம்ம்மா……ஐ கான்ட் டாலரேட் யூ .மாம்…நீங்க சும்மாயிருங்க.. எனக்கு இப்பவே காரை எடுத்துண்டு வெளில போகணும்…நான் போறேன்…பை….என்று துள்ளிக் குதித்து வெளியில் ஓடும் போது, பார்கவி ஆடித்தான் போவாள்.
ஒண்ணா….ரெண்டா….பத்து வயதுப் பையனுக்கு என்ன தோணுமோ, அதெல்லாம் அவனுக்கு மூணு வயசிலயே தெரிஞ்சு போன மாதிரியும், இப்போ அவன் ஒரு காலேஜ் படிக்கிற பையனைப் போல நடந்து கொள்ளும்போது மனசு கலங்கித் தான் போனது பார்கவிக்கு.
நாளாக நாளாக , இதுவே பெரிய தலைவலியாகிப் போனது அவளுக்கு.
டாட்….எனக்கு ஐ போன், வேணும்….ப்ளூ ரே கேம் சிடீஸ் வாங்கிக்கறேன்…ஒரு டென் தௌசண்ட் செக் எழுதுங்கோ.
இவன் பார்க்கும் தோரணையில், கிரியின் கை, தானாக செக்கில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விடும்.
டாட்…எனக்கும் ஒரு பேங்க் அக்கௌண்ட், கிரெடிட் கார்ட் எல்லாம் வேணும்..ப்ளீஸ் டூ இட். ஒரு பெரிய பிஸ்னெஸ் பண்ணப் போறேன்….கேமிங்….!
போச்சுடா…! ரெண்டு கைகளையும் தலையில் வைத்துக் கொள்வார்.
ஸ்கூல் டீச்சர் தினசரி போன் செய்து, உங்க சன் கீட்ஸ் மத்த பசங்களைக் கெடுக்கிறான்….பர்ஸ்ட் ரேங்க் மட்டும் வாங்கினாப் போதாது…மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாது..அவனுக்கு நாங்க டபிள் ப்ரமோட் பண்ணி வேற கிளாஸ்ல போடலாம்னு யோசிக்கறோம்..ஹி இஸ் ஓவர் ஸ்மார்ட்…வெரி வெரி இன்டெல்லிஜென்ட். அதான்…என்று தயங்க.
பெருமை ஒரு பக்கம் இருந்தாலும்…..இது எங்கே கொண்டு விடுமோ என்று அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு பயந்து கொண்டே இருந்தாள் பார்கவி.
ஒரு நாள் அவள் பயந்தது கூட நடந்தது.
டபிள் பிரமோஷனில் இன்னும் துளிர் விட்டுப் போனது கீட்ஸ்ஸுக்கு. தன்னுடன் படிக்கும் பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுக்கப் போக, மைனர் பெண்ணின் கவனத்தைச் சிதறல் செய்கிறான் என்று அவர்கள் வீட்டிலிருந்து நாலு பேர்கள் இவர்கள் வீட்டை முற்றுகையிட்டு எச்சரித்து விட்டுப் போகையில், பார்கவிக்கும், கிரிக்கும்…கீட்ஸ்ஸுக்குமிடையே பூகம்பமே வெடித்தது.
கடைசியில் இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பார்கவி நீ ? நீ நினைச்சது ஒண்ணு …நடக்கறது ஒண்ணாச்சே…
ஆரம்பத்தில் அம்மா சொன்னதைக் கேட்டிருந்தால்…இப்படியெல்லாம் நடந்திருக்காதோ என்னவோ.?
கற்றுக்கொள்ளும் வயதில் அத்தனையும் தெரிந்து விட்ட நிலையில் அடுத்தது என்ன என்ற தேடலின் உச்சியில் இருந்தாலும் அங்கு அவனுக்கென்று ஒன்றுமே இல்லாதது போலவும்…உலகப் பாடத்தில் கற்றுக் கொள்ளவென்று எதுவுமே தனக்கு இல்லை என்றும் உணர்வுகளோடு நடந்தான் கீட்ஸ்.
எப்போதும் எல்லோரையும் பார்க்கும் போதும் தனக்கு மட்டும் எல்லாம் தெரிந்து விடுகிறது என்ற ஆளுமையும் அதிகார உணர்வும் மேலோங்கிய அவனை யார் கண்டாலும் ‘திமிர் பிடித்தவன்’ பெரிய கர்வம் பிடிச்சவன்… என்றெல்லாம் பட்டம் கொடுத்து கேலி பேசுவார்கள். இவன் வருவதையும் தவிர்ப்பார்கள்.
பட்டமும், கேடயமும், பரிசுக் கோப்பைகளும் ஒரு புறம் நிரம்பி வழிந்தாலும்…அதைத் தரை மட்டமாக்கும் நிகழ்வுகளும் கூடவே நடக்கத் தொடங்கி அவனை நிலை குலைய வைத்தது.
அது கோபமாக வெளியேறத் துவங்கிய போது பார்கவிக்கும் கிரிக்கும் பிள்ளைப் பாசத்தைக் கடந்து ‘இவனை வைத்துக் கொண்டு சமாளிப்பது கடினம் என்று தோன்றியது’.
பார்…இப்பப் பார்….! எவ்ளோ சொன்னேன்…அப்பவே சொன்னேன்…இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு. உலகத்தோட ஒத்துப் போகத் தெரியாமல் உன்னோட பேராசைக்கு நம்ம பையனை பலியாடாக ஆக்கி வைச்சுட்டியே..
டாக்டரே சொல்லிட்டார். அதுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இன்ஃ பாக்ட் சின்னக் குழந்தையா இருக்கும்போதே அவன் படு சுட்டி..ஹைபர் ஆக்டிவ் சைல்ட். தெரிஞ்சுக்கோ. வாட்ஸ் நெக்ஸ்ட்….! இது இப்ப அவனை மனசுக்குள் ரொம்பப் படுத்தறதுன்னு நினைக்கறேன்.
அவனை ஒரு சைக்கியார்டிஸ்ட்ட அழைச்சிண்டு போனால் எல்லாம் சரியாய்டும். பார்கவி சமாதானப் படுத்தினாள் .
இப்பத் தானே பதினைந்து வயசாறது. அதுக்குள்ளே எங்க வந்து நிக்க வெச்சுட்டான் பாரேன் ? பார்.கிரி புலம்பிக் கொண்டிருந்தான்..எல்லாம் உன்னால…வந்த வினை.
அதே சமயம் அவனைப் பாராட்டு கிரி…..அவன் ஷேர் ட்ரேட் பண்றான்….ரியல் எஸ்டேட்ல என் பேர்ல இன்வெஸ்ட் பண்ணிருக்கான். லேப்டாப் ரிப்பேர் பண்றான்…கம்ப்யூட்டர் அசெம்பிள் பண்றான்…இதெல்லாம் அவனோட பிளஸ்…தெரியுமா?
வி ஷுட் கவுண்ட் ஹிஸ் குட் திங்க்ஸ் டூ…! எவ்ளோ அட்வான்ஸ்டா திங் பண்றான்.
அவனுக்கு எது வேணும் எது வேண்டாம்னு நம்மால சிந்திக்க முடியலை. நம்ம நினைக்கறது எல்லாமே அவனுக்கு அவுட் டேட்டட்டா இருக்கு. இப்பவாவது உனக்கு புரியறதா? என்னால நிம்மதியா இருக்க முடியலை பார்.
இதெல்லாம் ரொம்ப காமன் தான்…கிரி. நாம தான் இன்னும் கொஞ்சம் அவனுக்கேத்தா மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.
நாம பண்ணிக்கலாம்….வெளி உலகம் பண்ணிக்குமா? போடா சர்தான்னு சொல்லிட்டுப் போகும். எல்லாத்துலயும் நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்புன்னு இருந்தா, ஹௌ எனி ஒன் வில் டாலரேட் திஸ்.? இப்பக் கூட ஒரு நல்ல ஃப்ரெண்ட் இல்லை அவனுக்கு.
நீ சொல்றாப்பல லாப்டாப், கம்ப்யூட்டர், ன்னு எல்லாத்தையும் பிரிச்சு மேயறான்…சரி தான். அதே நேரம் அவனுக்குக் கோபம் வந்தால் அதே கம்ப்யூட்டரைத் தூக்கிப் போட்டு உடைக்கிறானே. கேட்டது கிடைக்கலைன்னு தெரிஞ்சா சுவத்துல ஓங்கி குத்தி தன் கையைத் தானே காயப் படுத்திக்கறானே….எல்லாம் அவனுக்கு சாதகமா நடக்கணும்னு யோசிக்கறானே இதெல்லாம் தப்பில்லையா ? அஃப் கோர்ஸ்….அது ஜெனெடிக்னு வெச்சிக்கலாம்.
கோபத்தில் தன் கையிலிருந்த காப்பி டம்ப்ளரைத் தூக்கி எறிகிறாள் பார்கவி.
இத…இத….இதத் தான் சொன்னேன்…என்று கிரி சொல்லவும்
பார்கவி ‘ஓ’ வென தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள்.
சரி…சரி….ஸாரி …அழாதே…நீ மட்டும் என்ன செய்வே.?..நாளைக்கு டாக்டர்கிட்ட போகலாம்.
அப்பாயின்ட்மென்ட் வாங்கிடறேன் சரியா…அவளை சமாதானப் படுத்தி விட்டுப் படுத்துக் கண்களை மூடிக் கொள்கிறார் கிரிதரன். வழக்கம் போலவே தூக்கம் அவருக்கு ‘டா டா…பை பை ‘ சொல்லிக்கொண்டு ஓடியது. எத்தனை இரவுகள் தூக்கம் போயிருக்கும்..? தூக்கம் மட்டுமா…அப்படியே தலையைத் தடவிப் பார்க்கும் போது மொழு மொழுவென்று வழுக்கைத் தலையில் விரல்கள் வழுக்குகிறது.
அடுத்த நாள் இரவு…!
என்னங்க மேடம் இது… இதுக்குப் போயா உங்க பையனுக்கு கவுன்சிலிங் பண்ண அழைச்சிட்டு வந்தீங்க. தயவுசெய்து உங்க வீணான கவலையை விட்டுத் தள்ளுங்க. நான் அவன்கிட்ட தனியாப் பேசிப் பார்த்த பிறகு தான் இதைச் சொல்றேன்….உங்க சன் செம ஸ்மார்ட். மூளைதான் அவனோட மூலதனம். எங்க போனாலும் பின்னிப் பெடலெடுப்பான் . டோன்ட் வொர்ரி. என்ஜினீயரிங் சேர்த்து விடுங்க…கோல்ட் மெடல அள்ளிட்டு வந்திடுவான். அப்பப்பப்பப்பா….எதைக் கேட்டாலும் டக்கு டக்குன்னு நெத்தியடியா பதில் சொல்ற பிள்ளைய கைல வெச்சிட்டு நீங்க கலங்கினா…ஐம் சாரி….உங்களைத் தான் பார்க்கறவங்க தப்பு சொல்லுவாங்க…சம்திங் ராங்ன்னு…! இப்ப இருக்குற காலத்துக்கு இவ்ளோ ஸ்பீட் ரொம்ப ரொம்ப அவசியம். உங்களுக்கு இப்பப் புரியாது. போகப் போகப் பாருங்க..!
டாக்டர் சொல்லியனுப்பியத்தை நினைத்துக் கொண்டே கண்களை வெறுமனே மூடியபடி படுத்திருந்தாள் பார்கவி.
நிம்மதியா தூங்குவதா…..? இவ்வளவு இண்டெலிஜெண்ட் கீட்ஸ்ஸுக்கு ஏன் அடிக்கடி விரக்தி வருகிறது…? கோபம் வருகிறது?
வீட்டிலும் இருக்கப் பிடிப்பதில்லை…..பள்ளியில் இருக்கவும் பிடிப்பதில்லை…..மனம் அமைதியில்லாமல் அலைபாய்கிறது.
எங்க போனாலும் தனக்கு மிஞ்சியவர் யாருமே இல்லைங்கற ஒரே எண்ணத்தில் தானே நுழைகிறான். அவனுக்குள் இருக்கும் சுபீரியர் தாட்ஸ் தான் எல்லாத்துக்கும் காரணம். அவன்கிட்ட சொல்லிப் புரிய வைக்கலாம்னு நினைச்சால்..பேசவே விட மாட்டேங்கறான். என்னன்னு சொல்லறது..?
நாட்களும் வாரங்களும் மாதங்களுமாக ஓடி வருடங்களைக் கடத்திச் சென்றன.
மனசுக்குள் புகுந்து கொண்டு இறங்க மறுத்த வருத்தம் பார்கவியின் வயதை இருபது வருடங்கள் கூட்டியது.சுகரும், இரத்த அழுத்தமும் கூட துணைக்கு வந்து அவளுடன் கைத்தடி போலச் சேர்ந்து கொண்டது.
பாதி நாட்கள் வீட்டுக்கே வராமல், படிப்பையும் முடிக்காமல் கீட்ஸ், இமயமலை வரைக்கும் சென்று வந்து…மாம்….ஐ லைக் ஒன்லி ஹில்ஸ்…அதும் ஹிமாச்சல் ..நான் அங்கயே கூட போய் இருந்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்…..கீட்ஸ் இதைச் சொன்னதும், அவள் தலையில் இமயமலையையே ஏற்றி வைத்தது போலிருந்தது பார்கவிக்கு.
என்னடா சொல்றே….கீட்ஸ்..? உனக்கு இப்பத்தான் முப்பது வயசாகுது….ஒரு கல்யாணம் காட்சி செய்யாமல்…குடும்பம்னு ஒண்ணு இருந்தால் இந்த மாதிரி தாட்ஸ் எல்லாம் வராது…! வாழ வேண்டிய வயசில் நீ இப்படிச் சொல்றது கொஞ்சம் கூட சரியில்லை.
மாம்….டாட்…நீங்க தான் நான் இன்னும் சின்ன வயசா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..பட் ….எனக்கு இந்த மெட்டீரியல் வேர்ல்ட்ல எதுவும் பெரிசா இருக்கறதாத் தெரியலை. ஐ ஹேட் எவெரிதிங். ப்ளீஸ் லீவ் மீ அலோன். ஐ கான்ட் ஸ்டே எனிமோர் ஹியர்.
ஐ நீட் பீஸ்….அமைதி மட்டும் தான் நிரந்தரம்…அது தான் எனக்கு வேணும்.இந்த உலகம் ரொம்ப ஸ்லோ…அதனால தான் ஒரு அமைதியான இடத்தில் என்னை அமைதியாக்கிக்க பழகிக்கப் போறேன்..ஏன்னா எனக்கு இந்த மைண்ட் ஸ்பீட் பிடிக்கலை.
இதைக் கேட்டு அதிர்ந்தே போனாள் பார்கவி. அவள் தலை தானாகக் குனிந்தது. கிரிதரன் விழிகளில் கண்ணீர் நிறைந்த பார்வை அவனது அம்மாவின் படத்தின் மேல் விழுந்தது.
இந்த வார்த்தை தான் அவர்களை பெற்றவர்களாக அழைத்து மதித்து அவன் பேசிய கடைசி பேச்சு. அன்று தான் கீட்ஸை அவர்கள் கடைசியாகப் பார்ப்பது என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.
மகன் கிளம்பிப் போய் வீடு வெறிச்சென்று சூனியம் பிடித்தாற்போலிருந்தது. ஒரே நாளில் அனைத்தையும் இழந்த செல்வந்தரின் நிலை போல உணர்ந்த இருவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுத்துவது போல ஒரு அழைப்பு மணி அடித்தது.
மீண்டும் மகன் வந்து விட்டானோ….? ஓடிச்சென்று கதவைத் திறந்த பார்கவியால் நம்ப முடியவில்லை..
அங்கு, கையில் ஆறு மாதக் குழந்தையுடன் அழகானப் பெண்றொருத்தி ” ஐ ம் தீட்சா…திஸ் இஸ் கீட்ஸ்’ஸ் சன்…” சொல்லிக் கொண்டே பார்கவியைத் கடந்து வீட்டுக்குள் நுழைகிறாள்.