ஒரு ஊரில் கந்தன் என்பவர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார், அவர் ஒரு விவசாயி, அவருக்கு குழந்தை இல்லை. ஆனால், அவர் ஒரு பெண் நாயை வளர்த்து வந்தார். அந்த நாய் அவர் மீது பாசமாக இருக்கும். அவர் சொன்னதை கேட்கும். அவர் எங்கு சென்றாலும் அவருடன் அவருடைய நாயும் செல்லும். அந்த நாயைக்கண்டாலே கந்தனின் மனைவிக்குப் பிடிக்காது. அடித்து விரட்டுவாள். திட்டித் தீர்ப்பாள்.
ஒருமுறை கந்தன் தன் வேலையை முடித்து திரும்பிக் கொண்டிருந்தார். அவர் எப்போது சைக்கிளில் செல்வது தான் வழக்கம். நாயும் அவருடன் வந்து கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக கந்தன் விபத்தில் சிக்கினார். அது ஆள் நடமாட்டம் இல்லாத பாதை. லாரியின் டிரைவர் மது போதையில் இருந்ததால் அந்த விபத்து நேரிட்டது. அது மதிய வேளை என்பதால் யாரும் இல்லை, கந்தனின் கால் லாரி டயரில் சிக்கி விட்டதால் சிதைந்துவிட்டது. நாய்க்கு எதுவும் ஆகவில்லை என்பதால் அது கந்தனின் வீட்டை நோக்கி ஒடியது.
கந்தனின் மனைவி நாயைக் கண்டதும் “அவர் எங்கே?” என்றாள். அது , ” லொள் லொள் ” என குரைத்துவிட்டு அவளுடைய சேலையைக் கவ்வி இழுத்தது. அதனால் கோபமடைந்த அவள் அதை அடித்து விரட்டினாள்.
மீண்டும் கந்தனிடம் ஓடி வந்த நாய் அவருடைய இரத்தத்தில் பிறண்டு எழுந்து மீண்டும் வீட்டிற்கு சென்றது. இரத்தத்தைப் பார்த்த கந்தனின் மனைவி பதறி போனாள். “அவருக்கு என்ன ஆச்சு? ” என்றாள். நாய் ஓட ஆரம்பித்தது. நாயைப் பின் தொடர்ந்த அவள் அங்கே தன் கணவன் இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதைக் கண்டாள். உள்ளம் பதறி, தன் கணவனை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றாள். நாயும் ஆம்புலன்ஸ் பின்னாலே ஓடிச் சென்றது.
கந்தன் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார். அவரின் மனைவி கலங்கியபடி நின்றிருந்தாள். அவள் அருகில் மீண்டும் சேலையைக் கவ்வி இழுத்து அழாதே என்று ஆறுதல் சொல்வதைப் போல் வாலை ஆட்டிக் கொண்டு நின்றது நாய், அவசர சிகிச்சை செய்து முடித்து வெளியே வந்த டாக்டர், ” இன்னும் 5 நிமிடம் காலதாமதமாக வந்திருந்தால் உங்கள் கணவர் அதிக இரத்த இழப்பு ஏற்பட்டு இறந்திருப்பார். இப்போது, கவலை வேண்டாம். ஆனால், கால் சிதைந்துவிட்டதால், அதை அகற்றிவிட்டோம் ” என்று கூறிச் சென்றுவிட்டார்.
கந்தனின் மனைவி தன் கணவனின் உயிரோடிருந்தால் போதும் என்று நினைத்து, தன் நாயைக் கட்டிப் பிடித்து அழுதாள். அது அவளை நக்கியதோடு, அவள் கண்ணீரையும் துடைத்தது.