நான் நினைக்கவே இல்ல இப்படி நடக்குமென்று ”நீ இப்புடியா பேசுவாய் …என்ன என்னண்டு நெனசாய்டா. உண்ட பகடிக்கு இங்க இருக்கிற ஆக்கள்தான் செரி … எனக்கிட்ட வெச்சிக்காத நானும் உன்னப் போல ஒரு அரசாங்க ஊழியந்தான்..”

கபீல் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு காரியாலயத்தை விட்டு வெளியேறினான்

நான் வாயடைத்துப் போனேன் .

அவன் இப்படிப் பேசுவானென்று நான் கொஞ்சங் கூட எதிர்பார்க்கவில்லை. நான் நகைச்சுவையாகத்தான் சொன்னேன். அவன் சீரியஸாக எடுத்துக் கொண்டான்.

நானும் மகா பெரிய கோபக்காரன் என்பது எனது நண்பர்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், ஒரு சொட்டுக் கோபமும் கபீல் மீது எனக்கு வரவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். இப்போது நான் இறைவனிடம் கேட்ட பிரார்த்தனை எனக்கு நினைவுக்கு வந்தது.

”யா அல்லாஹ் என்ர கோபத்திலிருந்தும் என்னக் காப்பாத்துவாயாக! யாரு என்ன சொன்னாலும் என்ன அமைதி காக்கச் செய்வாயாக”

இன்று நடந்தது ஒரு சோதனை என்றுதான் நான் நினைத்தேன். ஒரு மோசமான சம்பவத்தை ஏற்படுத்திவிட்டு, அப்போது நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்று இறைவன் என்னைச் சோதித்து இருக்கிறான்.
அவனுடைய சோதனையில் நான் பாசாகியிருக்கிறேன் என்பது மட்டும் தெளிவாக எனக்குப் புரிந்தது .

எனது பிரார்த்தனையினை இறைவன் ஏற்றுக் கொண்டுவிட்டான் என்பதை நான் இலகுவாக அறிந்து ஒரு புறம் மகிழ்ச்சி அடைந்தேன். கபீலை வைத்து இறைவன் என்னைப் பரீட்சிப்பான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை

என்னுடைய வாப்பா சரியான கோபக்கார மனுஷன். யாருக்கும் பயப்பிடமாட்டார். நியாமான நேர்மையான ஆள் அவர். பிடிக்காத விஷயங்கள் ஏதாவதென்றால் நெருப்பின் சூடு. அவர் கோபத்தின் முன்னே குளிர்

”மவன்… அவனோட சேராத… இவனோட சேராத… உண்ட வயசிக்கு மூப்பான கூட்டாளிமாரு ஒனக்கு வேணாம். அப்புடி கேள்விப்பட்டன் … வாப்பாவ வாப்பா எண்டு பாக்கமாட்டாய் ம்ஹ்ஹு ”என்னுடைய வாப்பா கோபத்தில் புத்தி சொல்வார்.

காதர், றசீட் என்னுடைய கூட்டாளிமார். ஆனா என்னை விட வயதில் கூடியவர்கள்.

ஒரு முறை இவர்களோடு குளிப்பதற்காக ஆற்றுக்குச் சென்றதைக் கேள்விப்பட்டு, நான் வீட்டுக்கு வந்ததும் வீட்டுச் சுவர் மூலையில் சாற்றி வைத்திருந்த வேலைக்காரன் கம்பினால் அடித்த அடி இப்போது நினைத்தாலும் சுரீரென்று வலிக்கும். வாப்பா இப்படிப் பலமுறை எனக்கு அடித்து இருக்கிறார். இன்னும் ஒரு முறை என்னைப் பிடித்து பக்கத்தில் இருந்த தென்னை மரத்தில் ஓங்கி என்னை அடிக்க முயற்சிக்கும் போது பக்கத்து வீட்டுக்காரன் முசுறு என்னைப் பிடித்துக் காப்பாற்றி இருக்கிறான்.

அப்படிக் கோபமான ஆள்தான் என்னுடைய வாப்பா. அவருடைய மகன் எனக்கு எவ்வளவு கோபம் வரும்.

நான் என்னுடைய மாமா வீட்டுக்குச் செல்லும் போது மூத்தம்பி பழைய கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு எனக்கு அடிக்க வந்தான். அவனுடைய கையிலும் கல் இருந்தது. நான் அவனைக் கட்டிப் பிடித்து கீழே போட்டுத் தள்ளி நிலத்தில் உருண்டு புரண்டு அந்தக் கல்லைப் பறித்து அவனுடைய தலையில் அடிக்க ஐந்து கட்டுத் தையல். இப்போதும் பசுமையாக அதே நேரம் பயங்கரமாக நினைவு இருக்கிறது.

வாப்பாவிடம் கேப் பசுமாடுகள் இரண்டு இருந்தன. அவை பல லீட்டர் பால் கறக்கும். பக்கத்துக்கு வீட்டுக்காரன் மீராசாஹிப் அந்த மாடுகளில் ஒன்றைக் கொன்றுவிட்டான். வைக்கல் கந்துக்கும் நெருப்பு வைத்துச் சாம்பலாக்கி விட்டான். இதை அறிந்த என்னுடைய வாப்பா அவனிடம் கேட்கப் போய் அவன் வாளெடுத்து வாப்பாவை வெட்ட வர பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து அந்தச் சண்டையை விலக்கி இருக்கிறார்கள் .

பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற நான் விடுமுறைக்காக ஊருக்கு வந்த போது கேள்விப்பட்டேன். என் உடல் துடித்தது. மீசை அப்போது முளைக்காதிருந்தாலும் அந்த இடம் கோபத்தில் துடித்ததை நான் உணர்ந்தேன் என் வாப்பா எவ்வளவுதான் அடித்து உதைத்துத் தண்டித்தும் கண்டித்தும் வளர்த்தாலும் அவை எனது முன்னேற்றத்துக்குத்தான் என்பதை நான் உணர்ந்தது எனக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைத்த போதுதான். அந்தத் தண்டனைகள் சேர்ந்து வாப்பாவோடு அவ்வளவு பாசத்தினை ஏற்படுத்தியது.

”டே… றாயில்… பல்லன் மீராசாயிபு உண்ட வாப்பாக்கு வாளால வெட்ட வந்த ஒனக்குத் தெரிமா? ஒங்கட மாட்ட சாவச்சிப் போட்டான் வேச மவன் ..பெரிய சண்ட அது. நீ கேள்விபட்டு இருக்க மாட்டாய் எண்டு எனக்கித் தெரியும் ஒனக்கிட்டச் செல்லி இருக்க மாட்டாங்க ” பக்கத்து வீட்டுக் கருவாட்டுக் கஸ்ஸாக் கிழவி என்னிடம் சொன்னாள்.

இதைப் பற்றி நான் வீட்டில் வாயே திறக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பல்லன் மீராசாஹிப்பைக் குறி வைத்துக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் ஒரு நாள் மதிய நேரம் அவனுடைய பழைய சைக்கிளில் முச்சந்தி ஏற்றம் இருந்து வந்து கொண்டிருப்பது
எனது வீட்டு முற்றக் கதவடியில் இருந்து வீதியைப் பார்க்கும் போது நன்றாக விளங்கியது. பல நாட்களாக வைக்கல் கந்து சுவர் மூலையில் காத்திருந்த இரும்பு அலவாங்கைக் கையில் எடுத்தேன். பல்லன் மீராசாஹிப் என்னை ஒரு வினாடியில் கடந்து செல்ல நான் பின்னால் ஓடிச் சென்று அவன் தலையில் ஓங்கி அடித்தேன். அவனும் அவனுடைய சைக்கிளும் சுருண்டு கொண்டு வேலியில் விழுந்து துடித்தன. இரத்தம் பீறிட்டு ஓடியது .

நான் வீட்டுக்குள் ஓடி வந்து அலவாங்கை மறைத்து வைத்துவிட்டு புதினம் பார்ப்பவன் போல அவனைப் பார்க்க வந்தேன். அவன் கத்திய கத்தில் சனம் கூடிவிட்டது. எல்லோரும் சேர்ந்து அவனை வைத்தியசாலைக்கு ஒரு காரில் அனுப்பி வைத்தார்கள்

அவனுக்கு அடித்தது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தாலும் யாரும் என்னைக் காட்டிக் கொடுக்கவில்லை.

”பல்லனுக்கு யாரோ நல்லா சாப்பாடு குடுத்திருக்கான்.. நான் செய்ய வேண்டியத அவன் செஞ்சிருக்கான். நானும் அவனக் கறிவிச்சிக்கிதான் இருந்தன்… அவன் முந்திட்டான்”

வாப்பா சொன்னதும் அவனுக்கு அடித்தது நான்தான் என்று சொல்ல வாயெடுத்தும் வாப்பாவின் குணம் அறிந்து அடக்கிக் கொண்டேன்.

”பாவம்… பல்லனுக்கு யாரோ அடிச்சிப் போட்டான்… புழப்பானோ தெரியா.. நல்ல அடி.. நானும் பாத்தன்… அவன் பாவம்… புள்ள குட்டிக்காரன்.. யா அல்லாஹ் அவன்ட உசுர அவன்ட ஹாயாத்த நீளமாக்கி வையி” உம்மா அவனுக்காகப் பாவப்பட்டாள்.
பரிதாபப்பட்டாள்.

”உம்மாவப் பாருடா… புருசன அவன் கொல செய்ய வந்தான் எண்டும் பாக்காம, அவனுக்கு துஆக் கேக்கிறத… ம்ம்ம்.. இதான் பொம்பள மனசு..”

நான் என் மனதுக்குள் உம்மாவின் நல்ல குணத்தை நினைத்து மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், பல்லனுக்கு இரும்பு அலவாங்கால் நான் தான் அடித்தேன் என்று உம்மாவுக்குத் தெரிய வந்தால், உம்மாதான் என்னைப் போலீசில் பிடித்துக் கொடுப்பாள் போல என்று நான் நினைக்கத் தவறவில்லை.

யார் அடித்தது என்பதற்குச் சாட்சி இல்லாததினால், நான் போலீசிலிருந்து தப்பிக்கொண்டேன். இல்லாவிட்டால் வழக்கு கோட் என்று அலைய வேண்டி வந்திருக்கும். எனது படிப்பும் நின்று போயிருக்கும். ஒருவாறு இறைவன் என்னைக் காப்பாற்றிவிட்டான்.
பல்கலைக்கழக விடுமுறை முடிந்து நான் கண்டிக்குச் சென்று விட்டேன்.

இப்படி எனது கோபத்தினால் ஏகப்பட்ட சண்டைகளும் குழப்பங்களும் நடந்துள்ளன. என் கோபத்தை நினைத்து நான் பல முறை வருந்தி இருக்கிறேன்

நான் அட்வான்ஸ் லெவல் படிக்கின்ற போது, இல்ல விளையாட்டுப் போட்டி நடை பெற்ற சமயம்… இரண்டு வருடங்கள் இல்லத் தலைவானாக இருந்து வழிநடாத்தி இரண்டு முறையும் முதலாமிடம் வாங்கிக் கொடுத்து வெற்றிக் கிண்ணம் பெற்று இருக்கிறேன்.
எனது இல்லத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் வயதை நான் பொய்யாகப் பதிவு செய்து அனுப்பியதாகவும், அது பற்றிய விசாரணைக்கு வருமாறும் மைதானத்தில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து என்னை அழைத்தார்கள்.

நான் மைதானத்தினுள் நுழைந்து விளையாட்டுக் கொமிட்டி காரியாலயம் செல்லும் வேளை பக்கத்து இல்லத்தைச் சேர்ந்தவர்கள் கூப்போட்டுக் கேலி செய்து குரல் எழுப்பினார்கள். எனக்கு அவமானமாகப் போய்விட்டது.

இருந்தாலும் பொறுமையோடு காரியாலயம் சென்று என்னில் தவறு இல்லையென்று நிரூபித்து விட்டுத் திரும்பும் போது மீண்டும் அதே கூக்குரல்கள்.

நான் நேரே அந்த இல்லத்தினுள் நுழைந்து அங்கிருந்தவர்களைக் காரசாரமாகத் தாக்கத் தொடங்க எனது அரபிக் இல்லத்தைச் சேர்ந்தவர்களும் ஓடிவந்து என்னோடு இணைந்து கொண்டார்கள். அடிதடியாகி பலருக்குக் காயமாகி இல்லவிளையாட்டுப் போட்டி இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

என் கோபத்தினால் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள் இவை.

பல்கலைக் கழகம் சென்ற போது என்னை ராக்கிங் செய்தவர்களை நான் தாக்கியிருக்கிறேன். அது முதலாம் வருட மாணவர்களுக்கும் இரண்டாம் வருட மாணவர்களுக்குமான குழுச் சண்டையாக மாறி பல்கலைக் கழகம் இழுத்து மூடப்பட்ட நிகழ்வும்
என்னால் நடந்திருகிறது.

கோபம் பெரிய நோய் என்பதை நான் கண்டறிய நீண்ட காலம் எடுத்தது. கல்வி அறிவும் ஒழுக்கமும் அனுபவங்களும் இறைபக்தியும் என்னோடு சேரும் போது பொறுமை என்னை நெருங்கத் தொடங்கிற்று.

இப்படியான ஒரு சூழலில்தான் கபீல் வார்த்தைகளால் என்னைத் தாக்கிக் காயப்படுத்தினான்.

கபீலும் நானும் ஒரே காரியாலத்தில் இருபது வருடங்களாக ஒன்றாகத் தொழில் செய்பவர்கள். கொழும்பிலும் இருவரும் பலகாலம் ஒன்றாகப் பணி செய்திருக்கிறோம். அவன் குடும்ப நண்பனும் கூட. எத்தனையோ தடவைகள் ஜோக் சொல்லிச் சிரித்திருக்கிறோம். நானும் கபீலை பலமுறை கேலி செய்திருக்கிறேன். அவனும் என்னையும் பலமுறை கேலி கிண்டல் செய்திருக்கிறான். ஆனால், அவன் என்னையோ நான் அவனையோ கோபித்தது கிடையாது.

எங்கள் காரியாலத்தில் நான் பெரிது நீ சிறிது என்ற பதவி பேதமோ ஊர் பேதமோ, அல்லது, வேறு வகையான தீய குறுகிய மன பேதங்கள் கிடையவே கிடையாது. எல்லோருமே நட்பாக ஒற்றுமையாகப் பணி செய்து நிறுவனத்தின் பெயரையும் புகழையும் ஓங்கச் செய்து கொண்டிருந்தோம்.

இன்னுமொரு முறை நானும் கபீலும் கொழும்பில் கடமை புரிகின்ற காலத்தில் கொழும்பில் இருந்து ஒரு வேனில் ஊருக்கு வந்து கொண்டிருந்தோம்.

அப்போது மஹியங்கனையில் வைத்து எங்கள் வேனை இராணுவம் நிறுத்தினார்கள். எங்களை வேனை விட்டு இறங்கச் சொன்னார்கள். எங்களைப் போராளிகளாகப் பாவித்து அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி நானும் கபீலும்
பலமுறை சொல்லிச் சொல்லிச் சிரித்து மகிழ்ந்திருக்கிறோம்.

அவன் ஒரு நாள் என் வீட்டுக்கு வந்தான். ”மச்சான் நான் கல்யாணம் கட்டப் போறண்டா …” இருவரும் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது திடீரெனச் சொன்னான்.

நான் எதிர்பார்க்கவில்லை .

”என்ன ..ஜோக் அடிக்கியா…?”

” விளையாட்டா நெனைக்காத மச்சான் ..உண்மயாத்தான் சொல்றண்டா ”

” செரிடா … ஊரிலேதானே …”

” அதுதான் இல்ல ”

அவன் திருக்கோணமலை . அதனால்தான் அப்படிக் கேட்டேன்

” அப்ப ”

” சமாந்துறயில…”

எனக்கு ஆச்சரியமாகவும் அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

” எப்புடிடா … லவ் எண்டா .. எனக்கிட்டச் சொல்லியிருப்பாய் .. எனக்கும் தெரிஞ்சிருக்கும் ”

அவன் தேநீரின் கடைசி மிடரை உறிஞ்சிக் குடித்து விட்டு தேநீர்க் கோப்பையை டிப்போவில் வைத்து விட்டு என்னையே பார்த்தான் .

என்ன சொல்லப் போகிறான் என்ற ஆவலில் நானும் அவனுடைய முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

” தெரிஞ்ச ஒரு கூட்டாளி மூலமா வந்திச்சி … குடும்பத்தோட வந்து பொண்ணு பாத்துட்டுப் போனாங்க. நானும் ஒருக்கா பாத்தேன் …எனக்கும் புடிச்சிருக்கு … எல்லாம் செரியான புறகு உனக்கிட்டச் சொல்லலாமெண்டு நெனைச்சன் ..”

” அப்ப எல்லாம் நல்ல விஷயந்தானே .. என்ர வாழ்த்துக்கள் மச்சான் …”

” நல்ல விசயந்தான் .. ஒனக்கிட்டதான் மொதல்ல சொல்லிருக்கன் … நீதான் என்ர மாப்ள தோழன் ” என்னைக் கட்டிப் பிடித்துக் கண் கலங்கி கபீல் சொன்னான் .

” டேய் …ஏண்டா கொழறாய்..நான் இருக்கண்டா … எனக்கி எவ்வளவு ஹப்பியா இருக்குத் தெரியுமா ?” நானும் கண்கலங்கிச் சொன்னேன் .

கபீலின் திருமணம் மிகவும் சிறப்பாக நடந்தது .

நான்தான் மாப்பிள்ளைத் தோழன். அவனுடைய அன்பும் நட்பும் என்னை வசீகரித்துக் கொண்டது .

என்னோடு கபீல் சண்டை பிடிப்பதற்கு முதல் நாள் நான் காரியாலயத்தில் இருக்கிறேன் .

எனது போன் ஒலித்தது. ” ஹலோ மச்சான் … ஒனக்கும் சேத்து சாப்பாடு வாங்குறன் .. நீ வேறெங்கயும் சாப்பாடு எடுத்திடாதடா”

” செரிடா மச்சான் ”

அதற்கு முதல் நாள் நான் காரியாலய பணியாளன் முர்சித்திடம் சாப்பாடு வாங்குவதற்குப் பணம் கொடுக்கும் போது கபீலுக்கும் சேர்த்துக் கொடுத்தேன். இப்படித்தான் இருவரும் உணவு நேரத்தையும் அடிக்கடி பகிர்ந்து வந்தோம்.

எனது நண்பர்களின் ஆதரவோடு ஏற்பாடு செய்த ஒரு விழாவில் என்னைப் பற்றிய அறிமுக உரையினை கபீலிடம் கேட்டு அவனின் விருப்பப் படி அழைப்பிதழிலும் போட்டு அந்த விழாவுக்கான அழைப்பிதழும் எல்லோருக்கும் கொடுத்தாகிவிட்டது
விழாவுக்கு இரண்டு நாட்கள் முன்பதாக நானும் நண்பர் ஜவாத்தும் பேசிக் கொண்டிருக்கும் போது கபீலும் வந்தான் .

” நாளக்கி ஒனக்கு ஏதும் வேல இருக்கா மச்சான் ?” கபீலைப் பார்த்துக் கேட்டேன் நான்.

” அப்ப நாளக்கி ரிகர்சல் பாக்கணும் கட்டாயம் வந்துடு ” நான் இவ்வளவுதான் கபீலிடம் அதுவும் நகைச் சுவையாகச் சொன்னேன். கபீல் கோபப் பட்டு பேசாத பேசக் கூடாத வார்த்தைகளெல்லாம் பேசிவிட்டான் .

” சேர் … அவர் நடந்து கொண்ட முற பச்சப் புழ … அவரு மனிசனே இல்ல. ஒங்களுக்கு ஒரு சொட்டுக் கோபமே வரல்ல … அதான் எனக்குப் பெரிய ஆச்சரியம் சேர் ” என்னோடு எப்போதுமே தம்பியாகப் பழகுகின்ற அப்படி நினைக்கின்ற ஜவாத் கோபம் கவலை கொண்ட மனதுடன் சொன்னது மிகவும் சரியாக இருந்தது .

இதைக் கேள்விப்பட்டு கையூம் , ரபீக் , சரீப் , சியா எல்லோருமே காரியாலயத்திற்கு ஓடி வந்து கபீலுக்கு ஏசினார்கள். அவன் அப்படி நடந்து கொண்டது பெரிய பிழை என்று சுட்டிக் காட்டினார்கள். கபீலை வீட்டுக்குச் செல்லென்று அனுப்பி வைத்து விட்டார்கள். எனக்குக் கோபம் வந்து ஏதாவது நடந்துவிடும் என்ற பயத்தில்!

நடக்க இருக்கின்ற விழாவில் கபீல் என்னைப் பற்றிப் பேச இருப்பதால் நகைச்சுவையாக அதுவும் வேண்டுமென்று ஒத்திகை பார்க்க வேண்டுமென்று நான் சொன்னதுதான் தப்பாகிவிட்டது.

இரண்டு நாட்கள் காரியாலயம் உறங்கிக் கிடந்தது. நண்பர்கள் முகத்தில் மலர்ச்சி இல்லை. மனதில் மகிழ்ச்சி இல்லை. நடந்த கசப்பான நிகழ்வு எனது நண்பர்கள் எல்லோரையுமே பாதித்திருந்தது. என்றாலும், என்னையும் நண்பன் கபீலையும்
மீண்டும் ஒன்று சேர்க்க மறைவில் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன .

” மச்சான் பங்கசனுக்கு இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கி… கபீல் பேசுறதா இல்லையா ?” ரபீக் கேட்டதிலிருந்து அவர்கள் முயற்சி பற்றிப் புரிந்து கொண்டேன் .

” கபீல் நடந்து கொண்டது நூறு வீதம் புழதான்… அது நமக்கெல்லாம் தெரிஞ்ச விஷயம் .. ஆனா ..இன்விடேசனில பேரப் போட்ட புறகு .. வேற ஒராள போடுற அவ்வளவு நல்லா இல்ல … ஆனா நீ என்ன முடிவு எடுக்கியோ அதான் எங்கட முடிவும் ” கையூம் சொன்னதும் எனக்குள் கோபம் உண்டானது.

ஆனால், நான் அதைக் காட்டிக் கொள்ளாமல் சொன்னேன் ” மச்சான் இதுல முடிவெடுக்க என்ன இருக்கி.. கபீல் நடந்துக்கிட்டது பச்சப் புழ .. இல்லயா அப்ப என்ன இதில முடிவெடுக்க இருக்கி…”

”அப்ப ஆரப் பேசப் வெக்ற ?”

”நீ பேசு ”

”ம்ம்ம் …ஒகே ..இன்னும் நீ யோசிக்க நேரமிருக்கி ”

அடுத்த நாள் நான் காலையில் நேரத்தோட காரியாலயம் சென்றேன்.

கபீல் அவனுடைய ஆசனத்தில் அமர்ந்திருந்தான் .

சரீப் கம்பியூட்டரில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்

நானும் எனது இடத்தில் அமர்ந்து கொண்டேன் .

இரண்டு நிமிடங்கள் வரை அமைதி குடி கொண்டிருந்தது. கபீலின் முகம் வாடியிருந்ததை அவதானித்தேன். கபீல் எழுந்து வெளியே சென்றான். சரீப் என்னுடைய பக்கம் திரும்பினார்.

”சேர் … கபீல் மிச்சம் கவலைப்படுறார்… அவர் செஞ்சது புழ எண்டு நல்லா யோசிக்கார். நடந்தத மறந்துட்டு நீங்க ரெண்டு பேரும் திரும்பவும் ஒண்டு சேரணும்.. மன்னிக்கிற என்கிறதப் பத்தி உங்களுக்கு நான் சொல்லத்தேவல்ல … இதால நம்ம எல்லாருக்குமே செரியான கவல … இப்ப எல்லாரும் சந்தோசமா இருக்கணும். விழா நடத்தணும் எண்டா அது உங்கட கைலதான் இருக்கி ”

நான் அமைதியானேன் .

சரீப் சொல்வது மிகவும் சரியென்று யோசிக்கத் தொடங்கினேன் .

”இருவத்தஞ்சி வருஷ பிரன்சிப்ப ஒரு சின்னச் சண்ட உடச்சா அந்த இருவத்தஞ்சி வருசமும் வீணாப் போச்சே …” ரபீக் நேற்றுப் போனில் என்னிடம் சொன்னது மீண்டும் என் நெஞ்சில் எதிரொலித்தது.

”என்ன .. சேர் … நான் சொல்றது செரிதானே …”

”செரி.. சரீப் … அவரு மன்னிப்புக் கேக்கணும் … கேட்டா நான் மன்னிப்பன் ” நான் இப்படிச் சொல்வேன் என்பதைச் சரீப் எதிர்பார்க்கவில்லை .

தன்னுடைய போனில் கபீலை வரவழைத்தார் சரீப். ஒரு நிமிடத்தில் காரியாலதினுள் நுழைந்தான் கபீல்.

அவனைக் கண்டதும் எழுந்தேன் நான்.

கபீல் என்னைக் கட்டிப் பிடித்து இறுக அணைத்துக் கொண்டு அழுது சொன்னான் ” மச்சான் ..என்ன மன்னிச்சுக்கடா …”

”நான் அப்பவே ஒன்ன மன்னிசிட்டண்டா.. ஆனா மனசில கவல .. அதான் ”

”இப்பதான் வாப்பா … எனக்கு சந்தோசம் …” சரீப் சொன்னார்.

எனக்கும் கபீலுக்கும் மனப் பராம் குறைந்து. காற்றில் மிதப்பது போல இருந்தது.

இதற்கிடையில் நாங்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்ததைப் பற்றி நண்பர்கள் எல்லோருக்கும் சரீப் தொலைபேசி வழியாகச் சொல்லிச் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தார்.

அன்று விழா நாள்.

வரவேற்புரையை கையூம் மிகச் சிறப்பாக நிகழ்த்தினார்.

அதை அடுத்து அறிமுக உரை. கபீல் என்னைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தொகுத்து சிறப்பாகப் பேசி முடித்து என்னை எழுந்து வரச் சொல்லி கையூமையும் அழைத்து கையூம் கையில் ஒரு கணையாழியைக் கொடுத்து தனது சார்பில் எனக்கு அணிவிக்குமாறு பணிக்க அதேபோல கையூம் எனது விரலுக்கு கணையாழி அணிவித்தார் அந்த மண்டபத்தில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து கைதட்ட எங்கள் நட்பினை ஆசீர்வதிப்பது போலிருந்தது.

Categories: சிறுகதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »