காப்பு

கன்னியைக் கண்டதும் காதலென எண்ணுகின்ற
என்றன் பதின்ம எழில்வயதில்அன்றொருநாள்
நான்செய்த ஓர்குறும்பை நன்றாகப் பாடுகிறேன்
ஊன்செய்தான் காக்க உவந்து !

புதுமை

செல்வதையே தூதாய்ச் செலுத்திடுவார் ! என்றாலும்
செல்வதெலாம் வெல்லத்தான் சென்றிடுமோ ? – சொல்லுகின்ற
தூதைத் திறம்படவே சொல்வதுவே நற்றூதாம் !
ஈதை உணர்ந்திடுவீ ரிங்கு !

நூல்

ஓடும் இரயிலில் உட்கார்ந்து கொண்டுயான்
பாடிக் கவிதைப் பரவசத்தில்ஈடில்லாக்

கற்பனைக் காட்டிடைக் கண்டுயிலும் நேரத்தில்
விற்புரு வத்தாள் விசைகணைகள்அற்புதமாய்

வீசும் விழியுடையாள் ! விந்தைதான் தன்னுருவாய்ப்
பேசும் திறத்திலே பெண்ணொருத்திகூசுங்

கழுத்தோரம் தொட்டுக் கனவுலகை நீக்கி
எழுந்திருங்கள் ஈதென் இடமென் ” – றெழில்மொழிந்தாள் !

பேச்சில் மயங்கியான் பேசாமல் நின்றுபின்னர்
காய்ச்சல் தெளிந்திடத்தைக் கண்டுகொண்டுமூச்சில்லாப்

பொம்மைபோல் அன்னாள் பொலியும் முகத்தழகில்
செம்மை உடலில் செழிப்பினிலும்அம்மங்கை

கொண்ட குரலினிலும் கொள்கை மறந்தவனாய்
விண்டவாய் மூடா விசித்திரனாய்க்கண்டிருந்தேன் !

என்றன் இருக்கைக் கெதிர்ரமர்ந்தாள் ! ஆகாகா
அன்றென்றன் ஆர்மோண்கள் ஆட்டத்தைஎன்சொல்வேன் ?

பார்வையிலே அன்னவளைப் பாதியெனத் தின்றுவிடும்
ஆர்வத்தில் கண்டிருந் தாழ்ந்திருந்தேன் ! – போர்வித்தை

நன்கறிந்த கண்ணாள் நயனத்தில் அம்பெய்து
மன்மதனைக் கூப்பிடும் மங்கையவள்முன்னிருந்த

மேனியெழில் சொல்லி மெதுவாகப் பேசுகிறேன்!
தேனிருப்பை மெல்லுதட்டில் தேடியே வானிருக்கும்

புள்ளும் குழவிகளும் பூச்சித்தேன் ஈக்களும்
துள்ளிப் பறந்து துவண்டிருக்கும் கொள்ளைமர்ம

முக்கோணக் காந்தமது மூக்கென் றிலங்கிநிற்கும்
அக்கோணம் பெற்ற அழகெழுத எக்கவியும்

மண்ணிற் பிறக்கவில்லை மன்னுகின்ற இவ்வெழில்கள்
கண்ட மயக்கத்தில் கத்திநின்றேன் புத்துயிராய்

நெஞ்சக் குழிக்குள்ளே நேராத அற்புதத்தைக்
கொஞ்சும் ஒருவிழியில் கொண்டுதந்தாள் மஞ்சக்

கலைபழக என்றன் கனவினிலே நின்றாள்!
அலைகடலில் கைசேர்ந் தணைத்தாள் மலையெனவே

அவ்வேளை தூக்கம் அழைத்திடவே கண்மூடி
செவ்விளமைப் பெண்ணோடு சேர்வதுபோல் கொவ்வைச்

சிவப்பிதழ் உண்டு சிலிர்ப்பதுபோ லெல்லாம்
உவந்து கனவுகண்டே உய்தேன் கவிக்கனவு

நின்று முடிந்த நிமிடத்தில் நானெழுந்தேன்!
கன்னி மறைந்துவிட்டாள் காலியிடம் நின்றதங்கே!

அன்றுவந் தங்கே அழகுபடத் தோன்றியே
நின்றவளை என்னென்று நீட்டிடுவேன் மென்னகையாய்

வந்து மனத்தில் வசந்தம் பரப்பியபூ
அந்த இடத்தில் அருகிலில்லை இந்தசேதி

ஓர்ந்த மனத்தில் ஒருகோடி மின்னலிடி
நேர்ந்துவந் தென்னை நெருக்குகியொலி ஆர்த்திருக்கும்

காட்சியினைக் கண்கொண்டு காண்பதுவுஞ் சாத்தியமோ?
மீட்சிபெற உள்ளம் மிரண்டிடவே நீட்சியுறும்

கோலங்கள் சொல்லவொணாக் கோரங்கள் அத்தனையும்
பாலகனைப் படுத்திப் பலிக்கேட்கும் ஓலமெலாம்

நீங்கி எனதுள்ளம் நித்ய அமைதிபெற
ஏங்கி ஒருவழியை என்மூளை தாங்கியதால்

நின்னையோர் தூதாய் நிகழ்த்துகிறேன் நீசென்றே
என்சேதி தாங்கி எழிலாகக் கன்னியவள்

நான்கண்ட காட்சி நனிக்கன வெல்லாமுந்
தான்கண்டு கொள்ளும் தரம்செய்வாய்! – “ஏனிங்கே

செல்லும் பொருளிருக்கச் செல்லாம லோரிடத்தே
வல்லவனா மென்னை வளைக்கின்றாய் சொல்லுகென்றால்

பெட்டிகள் மாறலாம் பெறுமிரயில் மாறிடலாம்
இட்டிருக்கும் நல்ல இருக்கையே ஒட்டிநீ

எங்கும் நகரா திருக்கும் திறன்கொண்டாய் !
தங்கியென் தூதைத் தரமாக இங்குரைப்பாய்!

தென்றல் அவளைத்தான் தேடி அலையாது
நின்றுமண்ணில் வந்து நிலவுந்தான் ஒன்றாது!

கிள்ளை பழம்தேடும் கின்னரங்கள் கூச்சலிடும்
பிள்ளையென் சோகம் பிதற்றாதே! – துள்ளுகின்ற

சேடி எனக்கில்லை சேர்வதெலாம் அப்பெண்ணே!
ஓடும் நதிதூ துரைக்காதே ஊடிப்

பிரிந்ததண்ட வாளங்கள் பின்னவளைக் கண்டு
விரித்தென்றன் சேதி விளம்பா துரிமைக்

கவிதையது சென்றாலும் கன்னி அறியாள்
தவமிருக்கும் கொக்கும் தடைதான் இவையெல்லாம்

செய்ய முடியாத செய்தற் கரியவினை
ஐய! முடிப்பாய் அதையறிவேன் பைய

இருந்தவிடத் தேயிருந் தின்பமொழிப் பெண்தான்
வரும்பொழுதைப் பார்த்து வளமாய் ஒருதவந்தான்

மேற்கொள்வாய் மீண்டும் மெலிவிடையாள் வந்துவிட்டால்
ஏற்றுன்னில் அன்போ டிருத்திவைத்து நேற்றொருநாள்

உன்னிருக்கை தன்னில் உறங்கிக் கிடந்திட்ட
மன்மதனை ஒத்த மனத்தழகன் என்னிடமோர்

சேதிசொன்னான் நானதனைச் செப்பிடுவேன் என்றுரைத்து
வாதிடா துன்மேல்நான் வார்க்கின்ற தீதிலா

என்தொலைப் பேசியதன் எண்ணைத்தான் காட்டியவள் !
மன்புதிய எண்வாங்கி வை !


1 Comment

விவேக் பாரதி · July 12, 2017 at 9 h 26 min

“தமிழ்நெஞ்ச”த்தின் பணி தொடர என் வாழ்த்துகள்.

நல்ல கவிகளை நாளும் புரந்திடும்
வல்ல தமிழ்நெஞ்சம் வாழிய ! – செல்வதமிழ்
எங்கிருந் தாலும் எடுத்துப் பகிர்கின்ற
உங்கள் செயலிங் குயர்வு !

Leave a Reply

Your email address will not be published.

Related Posts

மரபுக் கவிதை

என்தேசம் என்சுவாசம்

வளைந்தகோடால் வரைந்துவைத்த படமா நாடு ----- வாழ்க்கையையே தியாகத்தின் வேள்வி யாக்கி வளையாத முன்னோர்கள் தீப்பி ழம்பால் ----- வார்த்துவைத்த வார்ப்படந்தான் இந்த நாடு! முளைவிட்டுத் தானாக முளைத்தெ ழுந்த ----- முட்செடியா இந்தநாடு? மானத் தாலே தலையுடலை விதைகளாக்கிக் குருதி நீரால் ----- தளிர்க்கவைத்த பன்னீர்ப்பூ இந்த நாடு!

மரபுக் கவிதை

கண்ணீரின் கதை கேட்க வந்தாயா?

கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? – காதல் கடலுக்குள் விழுந்தேனே அறிவாயா? பெண்ணாக பிறந்தது பெரும் பாவமா? – பேதை பிணமாகி போனேனே உன் சாபமா? தவம் இருந்தே பசிதான் மறந்தேனே – உயிர் தாய் என்னை ஈன்றதை மறந்தேனே தன்னலம் பாரா தாய்மையின் ஈரம் காய்வதற்குள் உன்னிடம் Read more…

மரபுக் கவிதை

தமிழில் உறைந்து போதல்

பித்தனாய் ஆனேன் பூந்தமிழே – நெறி பிறழாத கவிதைதா பொற்சிமிழே -– உன்னில் மொத்தமாய் ஆவி உடல் மோகனமாய்த் தந்த பின்னே படித்தேன் – கவி – வடித்தேன் நற்றிணையில் தமிழ் மணக்கும் பாராய் – காதல் நர்த்தனங்கள் நிலை கொள்ளும் வேராய் – கை பெற்றணையா தீபமென Read more…