(கலிவெண்பா)

சூல்கொண்ட வெங்கதிரோன் சுட்டெரிக்க நாற்புறமும்
கால்பதிக்கத் தோன்றாக் கலன்போலே துன்புறுத்தப்
பால்முகமோ வாடிடுமே பாவையவள் நாணத்தால்
மால்மருகன் தாள்போல் மனம்குளிரும் சோலையிலே
எல்லையிலா எண்ணங்கள் ஏடெடுத்துப் பாட்டெழுத
ஓரா யிரமாகி ஓயாதக் கற்பனைகள்
நேரே எழுந்தெழுந்து நெஞ்சத்தைப் பற்றிநின்
றொன்றைவொன்றும் முன்நிற்க ஒன்றும் புரியாமல்
நின்றுவிட்டேன்; பின்னர் நினைவெல்லாம் ஒன்றாகி
மின்னல் ஒளிபோல மேலோங்கும் ஓருணர்ச்சி
என்னுள் கருத்தாய் எழுந்து எழுதிடக்காண்;
ஊற்றுப் புனல்போல உள்ளம் களிப்புற
ஆற்றுப் பெருக்கேபோல் ஆர்த்தெழந்து மேலோங்க
மண்ணிற் பிறந்த மனநிலையை விட்டொழித்து
விண்ணிற் சிறகடித்து விர்ர்ரென் றெழுவதுபோல்
எங்கும் பறந்தேன்; இணையில்லா இன்பநிலை
பொங்கி வழிந்திடவே பொந்துகின்றேன் இன்பத்தை;
கோலக் கருவானங் கூத்தன் விரித்துவைத்த
நீலத் திருமேனி நின்றாங்குக் காட்சிதரக்
கண்டு களித்தோரும் கையால் விசிறிவிட்ட
மண்டுவெள்ளிக் காசுகள்போல் வான்வெள்ளிக் கூட்டங்கள்
எண்ணி மகிழ்ந்திருந்தேன் மேல்வானிற் மின்னுமெழில்
கண்டு களித்திருந்தேன் கண்கொள்ளாக் காட்சியினை;
கார்மேகக் கூட்டங்கள் கான மழைபொழியத்
தேர்போல ஓடிவர சேர்ந்தொன்றாய் ஊர்ந்துவர
தோகை மயிலானேன் துள்ளும் மனத்தகத்தே;
ஓகை மிகவாகி ஓவென்று கூவிக்
குளித்தேன் அதனால் குதித்தேன் அகத்தே
களித்தேன் , கரைந்தேன் கணக்கில் அடங்காது;
நீரால் நனைந்தமையால் நெஞ்சம் மிகக்குளிர்ந்தேன்
ஆரா இனிமைதரும் ஆனந்தம் பொங்கிவர
சேரு மவளும் எனக்குறியாள் என்பேனே
பாரும் வியந்திடும் பார்த்து.!


1 Comment

உமா · July 17, 2017 at 9 h 32 min

அருமை.

Leave a Reply

Your email address will not be published.

Related Posts

மரபுக் கவிதை

என்தேசம் என்சுவாசம்

வளைந்தகோடால் வரைந்துவைத்த படமா நாடு ----- வாழ்க்கையையே தியாகத்தின் வேள்வி யாக்கி வளையாத முன்னோர்கள் தீப்பி ழம்பால் ----- வார்த்துவைத்த வார்ப்படந்தான் இந்த நாடு! முளைவிட்டுத் தானாக முளைத்தெ ழுந்த ----- முட்செடியா இந்தநாடு? மானத் தாலே தலையுடலை விதைகளாக்கிக் குருதி நீரால் ----- தளிர்க்கவைத்த பன்னீர்ப்பூ இந்த நாடு!

மரபுக் கவிதை

இரயிலிருக்கை விடுதூது

காப்பு கன்னியைக் கண்டதும் காதலென எண்ணுகின்ற என்றன் பதின்ம எழில்வயதில் – அன்றொருநாள் நான்செய்த ஓர்குறும்பை நன்றாகப் பாடுகிறேன் ஊன்செய்தான் காக்க உவந்து ! புதுமை செல்வதையே தூதாய்ச் செலுத்திடுவார் ! என்றாலும் செல்வதெலாம் வெல்லத்தான் சென்றிடுமோ ? – சொல்லுகின்ற தூதைத் திறம்படவே சொல்வதுவே நற்றூதாம் ! Read more…

மரபுக் கவிதை

கண்ணீரின் கதை கேட்க வந்தாயா?

கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? – காதல் கடலுக்குள் விழுந்தேனே அறிவாயா? பெண்ணாக பிறந்தது பெரும் பாவமா? – பேதை பிணமாகி போனேனே உன் சாபமா? தவம் இருந்தே பசிதான் மறந்தேனே – உயிர் தாய் என்னை ஈன்றதை மறந்தேனே தன்னலம் பாரா தாய்மையின் ஈரம் காய்வதற்குள் உன்னிடம் Read more…