ஈழத்தமிழ்க் கவிஞர்களுள் சுட்டிச் சொல்லத்தக்க படைப்பாக்கத் திறனாளராக அறியப்பெறுபவர் பாலமுனை பாறுக். கவிதைத்துறையில் நாற்பதாண்டுக் கால அனுபவ முதிர்ச்சியும் அரிய பயிற்சியும் உடைய பாறுக் அண்மைக்காலத்தில் திறனாய்வாளர்களால் அதிகம் பேசப்படக்கூடிய படைப்பாளர்களுள் ஒருவராக ஆகியுள்ளார்.

அடுத்தடுத்து வெளிவந்த அவரது குறுங்காவியங்கள்தாம் அந்த ஈர்ப்புக்குக் காரணம் கொந்தளிப்பு (2010), தோட்டுப்பாய்மூத்தம்மா (2011), எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு (2011) ஆகிய மூன்று குறூங்காவியங்களை வசன கவிதையில் புதிய பொருண்மைகளைக் கருக்கொண்டு விறுவிறுப்பான வீச்சுடன் படைத்து இலக்கிய உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த நிலையில் கலாபூசனம் பாலமுனைபாறுக் குறும்பாத் தொகுதி ஒன்றை த் தற்போதுத் தந்துள்ளார்.

மரபில் வல்லவரான கவிப்புனல் பாறுக், புதுக்கவிதையின் பக்கம் சிறிது பயணித்து மீண்டும் யாப்பை நோக்கி வந்துள்ளார். கவிஞர்களிடம் குறும்பாக்களைப் படைக்கும் போக்குதுளிர்த்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

காய் காய் மா
காய் காய் மா
காய் காய்
காய் காய்
காய் காய் மா

என்ற அமைப்பில் 90 குறும்பாக்கள் அடங்கப் பிற பாக்கள் வேறு யாப்பில் அமைந்துள்ளன. இயைபுத் தொடையும் மோனைத் தொடையும் எல்லாப் பாக்களையும் அணி செய்கின்றன. எதுகையும் அவ்வவ் விடங்களில் எட்டிப் பார்க்கிறது. பல குறும்பாக்களில் எள்ளல் துள்ளி விளையாடுகிறது.

சான்றுக்கு:

‘படைப்பாற்றல் வற்றிவிட வாடி
பத்திரிகை நிருபர்களை நாடி
படம் போடப் புகழ்தேடிப்
பாடுபடும் கலைமான்கள்
இடம்பிடித்தார் மேடைகளில் ஓடி’

ஊழல் அங்கிங்கெனாதபடி நீக்கமற எங்கும் நிறைந்து விட்டது. அலுவலகத்தில் பணி முடிக்க வேண்டுமென்றால் இலஞ்சம் கொடுக்க வேண்டிய அவலம் நிலவுகிறது. ஆணாக இருந்தால் பொருளையும் பெண்ணாக இருந்தால் உடலையும் கேட்கும் அயோக்கியர்களின் இருப்பைப் பல பாக்களில் பதிவுசெய்துள்ளார் கவிஞர்.

‘கந்தோரில் கையூட்டுப் பெற்றான்
கடமைகளில் தவறியவன் கெட்டான்
வந்தவனை பொலிஸாரே
வலைவீசிப் பிடித்ததனால்
இன்றவனோ கூண்டிலகப் பட்டான்’

என்று இலஞ்சப் பேர்வழிகளின் இறுதிப் புகலிடம் சிறை தான் என்பதை உணர்த்தி
எச்சரிக்கிறார்.

பெண்கள் பண்பாட்டை மறந்து பாழாகும் நிலையை,

‘எழிலரசி எதிர்வீட்டுச் சீதை
எவனோடு ஏகினளோ கோதை
பழிசுமந்தாள் வயிறூதிப்
பதைபதைத்தாள் ஊர்கேட்க
விழிபிதுங்கி நின்றனளே பேதை’

என்ற பாவும்

‘அற்புதமாய் மெட்டெடுத்துப் படித்தாள்
அபிநயமும் அழகழகாய்ப் பிடித்தாள்
பொத்தென்று விழுந்தனளே
போய்ப்பார்த்துச் சுழித்தார்கள்
இப்படியேன் வாந்திவரக் குடித்தாள்’
என்ற பாவும் சுட்டுகின்றன.

‘பக்கத்து வீட்டிலொரு பாவை
பால்நிலவு வதனத்தாள் பூவை
முப்பதையும் தாண்டிவிட்டாள்
முடியவில்லை திருமணமே
எப்படியும் சீதனமாம் தேவை’

என்னும் குறும்பா வரதட்சணைக் கொடுமையால் வாடும் முதிர்கன்னிகளின் அவல நிலையை
அறிவிக்கிறது.

‘இன்ரநெட்டால் வந்ததந்த இணைப்பு
எழுந்துவிட்டார் ஓட்டலுக்குஅழைப்பு
சென்றங்கே பார்த்தவரோ
சிரசினிலே கைவைத்தார்
வந்தவளோ அவர்மகனின் பிணைப்பு’

என்ற குறும்பா ஒழுக்கக் கேட்டால் விளையும் குடும்பச் சீர்குலைவைச் சித்திரிக்கிறது.

‘பட்டினியில் பசிபிணியில் கிடந்தார்
பலமாதம் வாடிஅவர் மடிந்தார்
இத்தனைநாள் எங்கிருந்தார்
இவர்களவர் உறவினராம்
கத்தத்தைக் கொடுக்கத்தான் விரைந்தார்’

என்ற பா மாய்ந்து விட்ட மனிதநேயத்தையும் போலி மனிதர்களையும் படம்பிடித்துக்
காட்டுகிறது.

தமது கவிதைகளைச் சமுதாயத்தை எதிரொளிக்கும் கண்ணாடியாகக் காட்டுவதோடு நின்று விடாமல் அறிவுரைகூறும் ஆயுதமாகவும் கவிஞர் கையாண்டுள்ளார்.

‘ஈரைந்து மாதங்கள் சுமந்து
ஈன்றாளே தாயவளை மறந்து
பேரென்ன புகழென்ன
பேச்சென்ன நிறுத்ததனை
போய்ப்பாருன் தாயினைநீ திருந்து’
‘மக்களொடு அன்பாகப் பழகு   
மதித்தவர்க்குப் பணிபுரிய இளகு
கட்டிவைத்த நாயாகக்
கடமையில் குரையாமல்
ஒத்துழைப்பாய் உத்தியோகம் அழகு’

என்பன போன்ற அறிவுரைகளை இந்நூலில் பரக்கக் காணமுடிகிறது.

இவ்வாறாகப் பாலமுனை பாறுக்கின் குறும்பாக்களுள் சில குறும்புப் பாக்களாகவும், பல சமூக உணர்வு அரும்பும் பாக்களாகவும் மிளிர்கின்றன.

நெய்திறம் மிக்க நெசவாளர் செய்த நேரிய நூலாகிய இந்நூல்இலக்கியச் சுவைஞர்களின் உள்ளங்களில் உயரிடம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

அன்புடன்,
மு.இ.அகமது மரைக்காயர்

தமிழ்மாமணி, செந்தமிழ்ச் செம்மல்,
கவிச்சுடர், கலைக்கோமாமணி,
பேராசிரியர், முனைவர் மு.இ. அகமது மரைக்காயர்
தமிழ்த்துறை,
புதுக்கல்லூரி,
சென்னை- 600 014

விலை ரூபா 300 / இலங்கையில்
தபாற் செலவு தனியானது.

முகவரி
பாலமுனை பாறூக்
14 ஏ, பர்ஹானா மன்ஸில்,
பாலமுனை – 03 (32354)
ஸ்ரீலங்கா


1 Comment

பர்சானா றியாஸ் · ஜூலை 7, 2017 at 13 h 36 min

பல குறும்பாக்கள் தந்தவர்
தேன்கவிதரு தமிழ்ப் பித்தர்
பாலமுனைத் தாய் பெற்ற சித்தர்

பாலமுனை பாறூக்
காலமுமைப் பாடும்
ஞாலமுனைப் போற்றும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நூல்கள் அறிமுகம்

Moon inside the well

ஹைக்கூ (Haiku) தமிழ் இலக்கியத் தளத்தில் தவிர்க்க முடியாத கவிதை வடிவமாக நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே வருகின்றது. ஹைக்கூ ஜப்பானிய இலக்கிய வடிவம் என்றாலும், 17 ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக் வடிவமைக்க,

 » Read more about: Moon inside the well  »

நூல்கள் அறிமுகம்

இலங்கையில் சிங்களவர்

இலங்கை அரசின் இனவெறிப் படுகொலைக்குத் துணை நிற்கும் நடுவணரசும் ஏன் தமிழக அரசும், உருசியா, சீனா போன்ற பொதுவுடைமை நாடுகளும், ஏனைய உலக நாடுகளும் வரலாற்றுப் பிழை செய்வதை இந்நூல் அரண் செய்கின்றது. தமிழர் யார்?

 » Read more about: இலங்கையில் சிங்களவர்  »

நூல்கள் அறிமுகம்

மொழி பெயர்க்கப்படாத மௌனம்

வாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே.

 » Read more about: மொழி பெயர்க்கப்படாத மௌனம்  »