கரும்பு கொல்லைக்குள்ளே..
கட்டை வெதைக்கையிலே..
ஏங்கண்ணுக்குள்ள.. ஓங்கண்ண..
வெச்சு புதைச்சுப் புட்ட..

மொளைச்சி வார புல்லு போல..
மனசுக்குள்ள துளுத்து வளந்துபுட்ட..
மண்ணணைச்சு வெக்கறப்போ
மனசணைச்சி நின்னுகிட்ட..

ஒரந்தூவி வாரயிலே..
ஒன்னத் தூவி வெச்சிப்புட்ட..
தண்ணி பாய்ச்சுறாப்போல ஒன்
பார்வைப் பாய்ச்சினியே..

கரும்பு வளர்ராப்போல.. மளமளன்னு
காதல் வளந்துடுச்சே..
பனியாலே செங்கரும்பு திதிப்பேறி
போனாப்போல..

ஒன் நெனப்பால திதிப்பாயி
மனசு இனிச்சிருச்சு..
பூவரசும் பூத்திடுச்சு.. அரசாணிப்பூ
பூத்த கோலமா கொலுவிருக்கு..

புது வெள்ளை செங்காவி
திண்ணைச்சுவரேறி சிரிச்சிருக்கு..
கரும்படியும் முடிஞ்சுருச்சு..
கடைத்தெரு நிறைஞ்சிருச்சி..

பொங்கலுக்கு ஏத்தி வெக்க
புதுப் பானை காத்திருக்கு…
இஞ்சி மஞ்சக் கொத்து மாவிலை
தோரணமா மாறிடுச்சி..

தொழுவத்திலே செவலப் பய
என்னோட வளந்த காளை..
ஒன்னோட தோளணைய
என்னப்போல காத்திருக்கு..

காணும் பொங்கலிலே.. காவேரி
கரைமேல நீ காலாற வாரப்போ..
மஞ்ச தண்ணியில நம்ம மனசு
ரெண்டும் கரைச்சு வெச்சு..

எளவட்ட பெண்டுங்க
புடை சூழ காத்திருக்கேன்..
சிங்கம் போல நட போட்டுமச்சான்
நீ வாரயில ஊத்திடுவேன்..

நீ தான் என் மன்மத ராசான்னு
ஊருக்கு சொல்லிடுவேன்..
வைகாசி சிரிக்குறப்போ… நமக்கு
புதுமாலை தொடுத்திருக்க..

சித்திரையில் வந்துடுங்க,
முத்திரைப் பொன் உருக்க..
தகடா மின்னுங் கழுத்த.
தங்கத்தாலி அலங்கரிக்க..

அடுத்த பொங்கலுக்கு ஒன்
கை சேர்ந்து நாங்கெடக்க..
தைமாசம் வந்ததுங்க.. புது
வழி காட்டித் தந்ததுங்க..


1 Comment

செந்தாமரைக்கொடி · ஜனவரி 28, 2017 at 10 h 41 min

நன்றி உறவுகளே ..

இந்த மண்வாசனை என் சொந்த “தஞ்சை” மண் வாசனை..

முதன்மையாசிரியப் பெருந்தகை திருமிகு அமின் அண்ணா அவர்களுக்கு சிறப்பு நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்