அரண்மனையும் தோரணமும் ஆடும் வாயில்
அணியணியாய் மணிவிளக்கம் ஒளிரும் கோவில்
நிரல்நிரலாய் உன்னடியார் வந்து செல்லும்
நெரிசலிடைப் போற்றிசெயும் ஒலி முழக்கம்
கரைகாணாப் புகழ் வெளிச்சம் உனதேயாகக்
கனிவுடனே என்முகத்தைக் காண்பா யோநீ
தெருவினிலோர் மூலையிலே இசைக்கும் என்றன்
சிறுகுரலை என்னரசே கேட்பா யோநீ
இசை நுணுக்கம் ஏதுமிலை எடுத்துரைக்க
இயைபுமொழி யிலக்கணங்கள் பொருந்தல் இல்லை
விசையாகப் பாய்கின்ற வேக மில்லை
வீறுமொழி அதிர்முழக்கம் அதிலே யில்லை
பிசைகின்ற உயிர்க்காற்று ஊற்றி வைத்துப்
பிழையறியாச் சிறுபாடல் இசைக்கின் றேன்யான்
திசையெங்கும் பரவுகிற இசைக்கோ வைக்குள்
சிறியேனின் இளங்குரலைச் செவியேற் பாயோ
உணர்வென்னும் தேனமிழ்தம் நிரப்பு கின்றேன்
உயிர்உருகும் மெல்லிசையே இசைக்கின் றேன்யான்
தணியாத பெருங்காதல் ததும்பும் என்றன்
சாமீஉன் திருவடியில் உளம்கி டக்கும்
அணியாத பூவாய்என் காதல் மாலை
அடிமலர்க்கே சூட்டுகிறேன் அரசே உன்றன்
மணிமார்பில் ஏற்பாயோ என்றி ருந்தேன்
வந்ததென்னே என்குடிசை வாசல் தேடி
என்இசையோ நீவிரும்பும் மலரா யிற்று
எளியேனின் வாசலிலே நகைசெய் கின்றாய்
என்அன்பே என்குடிசை வாசல் நின்றாய்
யானறியேன் எங்கெங்கோ தேடு கின்றேன்
என்அன்பே என்அன்பே என்பே னோநான்
இளநகைப்பில் உயிர்சுழன்று வீழ்வே னோநான்
என்முன்னே யிருப்பதனை அறிகி லேனே
என்வாசல் அமுதத்தை சிந்து கின்றாய்
எவ்வகையும் தகுதியிலா இரவ லன்யான்
என்பொருட்டோ என்அரசே இங்கு வந்தாய்
செவ்வியநின் புன்முறுவல் என்னை நோக்கிச்
செய்கின்றாய் இம்மாயம் அறிவே னோநான்
தெய்வதமே இச்சிறிய மலரை ஏற்றுச்
செவ்வியபுன் னகைசெய்தே செல்லு கின்றாய்
எவ்விதமும் நின்வருகை அறிந்தி டாமல்
நெகிழ்ந்தழுது நின்றதனை என்ன சொல்வேன்
தேம்புகிற என்செவியில் பண்ணி சைக்கும்
திடீரெனஎன் திசையெல்லாம் தென்றல் வீசும்
பூம்பொழில்கள் அசைவெல்லாம் அய்யோ நின்றன்
புல்லாங்கு ழலாகக் கேட்கும் என்னே
காம்புதிரும் மலரெல்லாம் களிவண் டார்க்கும்
கண்ணீரோ வரம்பின்றிப் பொழியும் சாமி
தீம்புனலே நீவந்து செய்த மாயம்
இவையென்று சிறியேன்யான் தெரிகி லேனே
கண்சுழன்று மெய்யுருகிக் கரைந்தே யென்றன்
காதலெலாம் இசையாகிக் கனிந்தேன் அய்ய
விண்மயங்கும் ஒலிகளிலே எனது பாடல்
வெற்றுவெளிக் கலந்திடுமோ உன்பா தத்தில்
பண்மயங்கிக் குழைந்திடுமோ மறைந்து போமோ
பரபரப்பில் அருகிருக்கும் உனை மறந்தேன்
அண்மையிலே உனையறியேன் அழுது நின்றேன்
அரசே என் அய்யனே சிரித்துப்போனாய்
கண்உதிர்க்கும் கண்ணீரே மலர் களாகக்
கைகுவித்தேன் எனையேற்றுக் கொள்வாய் நீயே!
தாகூரின் கீதாஞ்சலியைத் தழுவி எழுதப்பட்டது.