வாணிதாசன் பிரபல தமிழ்க் கவிஞர். தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும் பாவேந்தர் பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் நினைவு தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ல் கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுவை மாநிலத்தின் வில்வ நல்லூர் என அழைக்கப்பட்ட இன்றைய வில்லியனூரில் 22. 07. 1915 ல் பிறந்தார். இவரது இயற்பெயர் அரங்கசாமி. கவிஞரின் ஏழாம் வயதில் தாயார் இயற்கை எய்தினார். பாட்டியின் செல்லப்பிள்ளையாக, தந்தை மற்றும் சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார் கவிஞர். இரண்டாண்டுகள் திண்ணைக் கல்வி கற்றார்.
பின்னர் வில்லியனூர் பள்ளியில் தன் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு எல்லப்ப ஆசிரியர், முத்துக்குமாரசாமி பிள்ளை ஆகியோர் ஆசிரியராக இருந்தனர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் தமிழும், பிரெஞ்சும் கற்றார். பள்ளி இறுதித் தேர்வில் புதுவை மாநிலத்திலேயே முதல் மாணவராக வெற்றி பெற்றார்.
இவருக்கு பாவேந்தர் பாரதிதாசனா ரோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவரை தனது ஆசானாக ஏற்று கவிதை களைப் படைத்தார். இவரது கவிதைகளை வெளியிட்டு வந்த ‘‘தமிழன்‘‘ இதழாசிரியர் இவருக்கு ‘‘வாணிதாசன்’’என்று பெயர் சூட்டினார். அன்று முதல் இயற்பெயர் மறைந்து வாணிதாசன் என்ற பெயரே நிலைத்தது. 1945 ல் சென்னையில் வித்வான் பட்டம் பெற்றார். புதுவை திரும்பியவுடன் கல்வே கல்லூரியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
‘‘பொன்னி, காதல், முரசொலி, முத்தாரம், மன்றம், தென்றல்’’ உள்ளிட்ட இதழ்களில் எழுதினார். தமிழ் தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வல்லமை பெற்றிருந்தார். பிரான்சு நாடு இவருக்கு இலக்கியத்திற்காக ‘‘செவாலியர்’’ விருது வழங்கி சிறப்பித்தது.
இவரது ‘‘விதவைக்கொரு செய்தி’’ என்ற கவிதை ‘‘திராவிட நாடு’’ இதழில் வெளிவந்து இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. தனிப்பாடல்கள் மட்டுமன்றி குறுங்காப்பியங்களையும் எழுதினார்.
‘‘தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம்‘ எனும் குறுங்காப்பிய நூற்கள் வெளிவந்தன. இசைப் பாடல்களின் தொகுப்பான ‘‘தொடுவானம்’’ நூலில் தனது இசை ஞானத்தை வெளிப்படுத்தி இருப்பார் கவிஞர். திரு.வி.க. இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார்
1956 ல் வெளிவந்த இவரது 88 பாடல்கள் அடங்கிய ‘‘வாணிதாசன் கவிதைகள்’’ கவிஞருக்கு மேலும் புகழ் சேர்த்தன. இந்நூல் இயற்கை, இன்பம், மக்கள், புரட்சி, தமிழ், பூக்காடு, இசைக்குரியார் உள்ளிட்ட ஏழு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல்கள் தொகுக்கப்பட்டு ‘‘பொங்கல் பரிசு’’ என்ற நூலாக்கம் செய்யப்பட்டது. ‘‘தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி, தீர்த்த யாத்திரை, இன்ப இலக்கியம், எழிலோவியம், எழில் விருத்தம், குழந்தை இலக்கியம், பெரிய இடத்துச் செய்தி, சிரித்த நுணா, இரவு வரவில்லை’’ எனும் பல நூற்கள் படைத்துள்ளார்
பாட்டரங்குகள் பலவற்றில் இவர் பாடிய பாடல்களை இணைத்து ‘‘பாட்டரங்கப் பாடல்கள்’’ என்ற நூலாக வெளிவந்தது. இயற்கை குறித்தும் நிறைய எழுதியதால் ‘‘தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’’ எனப் போற்றப்பட்டார். ‘‘கவிஞரேறு, பாவலர் மணி, புதுமைக் கவிஞர், உவமைக் கவிஞர், தமிழ்நாட்டுத் தாகூர்’’ என்றெல்லாம் போற்றப்படுகிறார்.
தமிழக அரசு இவரது நூற்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. இவரது கவிதைகள் உருது, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
புதுவை அரசு இவர் வாழ்ந்த சேலியமேட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வாணிதாசனார் பெயரைச் சூட்டியுள்ளது. கவிஞரின் பிறந்தநாளை புதுவை அரசும், கலைப் பண்பாட்டுத் துறையும் இணைந்து அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றது.
தனது வாழ்நாள் முழுவதும் இலக்கியத் தொண்டாற்றி வந்த நமது கவிஞரேறு 07. 08. 1974 ஆம் ஆண்டு தமது 59 வது வயதில் இயற்கை அடைந்தார். தமிழ் உலகு உள்ளவரை கவிஞரேறுவின் புகழ் வளர்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
*வாழ்க தமிழ்.
வளர்க வாணிதாசனார் புகழ்*
2 Comments
கோட்டைஅம்பிதாசன் · அக்டோபர் 1, 2020 at 11 h 52 min
சிறப்பான கட்டுரை, படங்கள் நிறைய இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
வே.பூங்குழலி பெருமாள் · அக்டோபர் 30, 2020 at 10 h 57 min
அருமை வாழ்த்துகள் தோழி