ஒருமுறை நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது சென்னையிலிருந்து பாண்டிச்சேரிவரை திருவள்ளுவர் பஸ்ஸிலே பயணம் செய்ய நேரிட்டது. காலைநேரம். ஒருவன் தாம்பரம் வரை போக வேண்டுமென்று நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தான்.

“ஏண்டா சாவு கிராக்கி பேமானி காலையில் நூறு ரூபா நோட்டைக் கொண்டு வந்திட்டியாடா, உனக்கெல்லாம் இதே பொழப்பாய் போச்சி. இறங்குடா வண்டியை விட்டுயு என்று வாய்க்கு வந்தபடி வசைமாறி பொழிந்தார் கண்டக்டர். அந்த பயணியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. உடனே என் கையில் இருந்த சில்லறையைக் கொடுத்து நிலைமையைச் சமாளித்தேன்.

இதிலே வேடிக்கை என்னவென்றால் ‘இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ என்ற திருக்குறள். அந்த கண்டக்டரின் தலைக்கு மேலே பெரிதாக எழுதப்பட்டிருந்தது. அதைக் காட்டி அந்தக் கண்டக்டரிடத்திலே “இப்படி ஒரு திருக்குறளை எழுதி வைத்துக் கொண்டு நீங்களே வாய்க்கு வந்தபடி பேசலாமா? நீங்கள் சொல்ல வந்தது எதுவாக இருந்தாலும் கொஞ்சம் மரியாதையாக நல்ல வார்த்தைகளாலே சொல்லக் கூடாதா” என்று கேட்டேன்.

என்னை ஒரு முறை முறைத்து விட்டு எதிர் கேள்வி போட்டார் கண்டக்டர். “இந்த இடத்திலே கடைசியில ஒரு ஏழு சீட் போட்டிருக்கிறதே அது யாருக்காக?” என்றார்.

“பயணிகளுக்காக” என்றேன்.

“அதற்கும் அடுத்தாற்போல் இருக்கிற ஐந்து சீட்…”,

“பயணிகளுக்காக. அதை அடுத்து பத்துப் பனிரெண்டு வரிசையில அஞ் சஞ்சி சீட்டா போட்டிருக்கிறதே அதெல்லாம் யாருக்காக” என்று கேட்டார்.
“எல்லா பயணிகளுக்காகவும்” என்றேன்.

“அங்கே டிரைவர் ஒருத்தர் இருக்கிறாரே அவருக்கு ஏன் சம்பளம் தரப்படுகிறது” என்று கேட்டார்.

“பயணிகளுக்காக” என்றேன்.

“எனக்கு ஏன் சம்பளம் தர்றாங்க” என்று கேட்டார்.

“பயணிகளுக்காக” என்றேன்.

“எல்லாமே பயணிகளுக்காகன்னா திருக்குறளும் பயணிகளுக்காகத் தான்யா. இந்த வண்டியில எர்றவங்கதான் அதைப் பார்த்து ஒழுங்கா நடந்துக்கணும். அது எங்களுக்கு கிடையாது” என்றார்.

உடனே நான் கேட்டேன், “சார் எனக்கு ஒரு ஆட்டோகிராப்ஸ்ல கையெழுத்துப் போடறீங்களா” என்றேன்.

“என்ன கிண்டலா”ன்னார்.

“இல்லை சார் என்னைக்கிருந்தாலும் நீங்க தலைவராகி விடுவீங்க. அதற்கான அறிகுறி இன்றைக்கே தெரிகிறது. தலைவரான பிறகு இப்படி பக்கத்தில் உட்கார்ந்து பேச முடியுமோ என்னவோ, அதனால்தான். இப்பவே ஒரு ஆட்டோகிராப் வாங்கி வச்சிக்கறேன்” என்று சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டார்.

இந்த மாதிரி கண்டக்டர்களை நாம் வாழ்க்கையிலே பல இடங்களிலே சந்திக்கிறோம். மதம் என்பது ஒரு பஸ். அதை ஓட்டிக் கொண்டு போகிற டிரைவரும், கண்டக்டருமாக இருக்கிறவர்கள் மதத்தலைவர்களும், குருமார்களும், அதிலே பயணம் செய்கிற பயணிகள்தான் பக்தர்கள். மத நம்பிக்கை கொண்டிருக்கிறவர்கள் ஆகியோர்.

இந்தப் பஸ்ஸிலே எழுதப்பட்டிருக்கிற திருக்குறள் மாதிரி வேதங்கள், மந்திரங்கள், சமயச் சான்றோர் எழுதிய நூல்கள், அறிவுரைகள், ஆன்ம ஒழுக்க போதனைகள், தத்துவங்கள், தத்துவ விளக்கங்கள் ஆகியவை எல்லாம். இந்த மத குருமார்கள் என்கிற டிரைவர்களும், கண்டக்டர்களும் நம்மை நல்வழி, நல்வாழ்க்கை, சுபிச்சம், நேர்மை, நியாயம், தர்மம் என்கிற ஊர்களுக்கெல்லாம் அழைத்துப் போவார்கள் என்கிற நம்பிக்கையிலே அவர்களிடத்தில் நம்வாழ்க்கையை ஒப்படைத்து அவர்களை முன்னால் வைத்து நாம் அவர்கள் வழியிலே பின்னால் செல்கிறோம்.

ஆனால் அந்தச் சமயங்களிலே சொல்லப்பட்ட தர்மங்களையும், தத்துவ அர்த்தங்களையும், நியதிகளையும் இந்த மதத்தலைவர்கள் கடைப் பிடிக்கிறார்களா என்பது முக்கியமான கேள்வி. அப்படிக் கடைப்பிடித்திருந்தால் சமயங்களுக்குள்ளேயும், சமயங்களாலேயும் போராட்டங்கள் நடக்க முடியுமா?

அயோத்தியிலே இந்து முஸ்லீம் சண்டையில் எத்தனையோ உயிர்கள் பலியானதே. அந்த சண்டையைச் செய்யச் சொல்லி எந்த மதத்திலே எழுதி இருக்கிறது? அன்பு, நீதி, நியாயம், நேர்மை, அறவழி, அடுத்தவர்களது மனத்தைப் புண்படுத்தாமலிருத்தல், அடுத்தவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்தல், இப்படிப்பட்ட உயர்ந்த தத்துவங்களைப் பேசுகின்ற இரண்டு மதங்களிலே இருக்கிறவர்கள் எப்படி முட்டி மோதிக் கொள்ள முடியும்? அந்த சமயத் தத்துவங்களை அதன் தலைவர்கள் கடைப்பிடித்திருந்தால் அப்படி ஒரு போராட்டத்தை அனுமதித்திருப்பார்களா?

உண்மையில் சொல்லப்போனால் அயோத்தியிலே பாபர் மசூதியை எதிர்த்தவர்கள் இராமனுக்கு வேண்டியவர்களுமில்லை, இராமனை வணங்குகின்ற இந்துக்களுக்கும் வேண்டியவர்களில்லை. அதனை ஏதிர்த்த அவர்களை தாக்கியவர்கள் அல்லாஹ்வுக்கு வேண்டியவர்களுமில்லை. அல்லாஹ்வை வணங்குகின்ற முஸ்லீம்களுக்கு வேண்டியவர்களுமில்லை. அவர்களில் எவருமே இந்துக்களோ, முஸ்லீம்களோ அல்ல. உண்மையில் இந்த இரண்டு பேரும் இரண்டு சமயத்துக்கும் எதிரிகள். நாகூர் தர்காவிலே இந்துப் பெருமக்கள் போய் சர்க்கரை வைத்து வணங்குவதை நாள்தோறும் பார்க்கிறோம். வேளாங்கண்ணி மாதாகோவிலே இந்து மக்கள் தான் அங்கே தேங்காய்ப் பழம் உடைக்கிறார்கள். மொட்டையடித்துக் கொள்கிறார்கள். அங்கப் பிரதட்சணம் செய்கிறார்கள். அலகு குத்திக் கொள்கிறார்கள். இப்படி எல்லா மதத்தையும் மதிக்கத் தெரிந்தவர்கள் இந்துப் பெருமக்கள். இவர்களுக்கு அல்லாஹ்வின் கோவிலை மட்டும் இடிப்பதற்கு எப்படி முடியும்?

ஸ்விட்சர்லாந்திலே ஒரு பெரிய இந்து மாநாடு நடந்தது. அங்கே வந்திருந்த பலபேர் சொன்னார்கள் நாங்கள் கிறிஸ்தவர்கள்தான். என்றாலும் இந்து மதத்தையும் நாங்கள் தொடர்ந்து பின்பற்றுகிறோம். மதிக்கிறோம் என்று சொல்லி வந்திருந்தார்கள்.
பாண்டிச்சேரியிலே ஒரு பிரசித்தி பெற்ற ஒரு முருகன் கோயில் இருக்கிறது. அதற்கு கௌஸ் முருகன் கோயில் என்று பெயர். அதிலே சிறப்பு என்ன வென்றால் அந்தக் கோவிலைத் தனி மனிதராக ஒருத்தர் நின்று தன் செலவிலே கட்டி ஆண்டுதோறும் சிறப்பாக விழா நடத்தி வருகிறார், சூரசம்ஹார விழா. அவர் கௌஸ் என்கிற ஒரு முஸ்லீம் அன்பர்.

சமயப்பொறை, பிற மதங்களை மதித்தல், மனிதர்களுக்குள்ளே அன்பு காட்டுதல், எந்தப் பெயரை வணங்கினாலும் இறைவன் ஒன்றுதான் என உணர்தல் போன்ற மகத்தான சமயத் தத்துவங்களை எல்லாம் சாதாரண மக்கள் பின்பற்றுவதைப் பார்க்கிறோம். ஆனால் சமயத் தலைவர்களாக இருக்கிறவர்கள் சண்டையை உண்டு பண்ணுகிறார்கள். உலக வரலாற்றில் மனித இனம் சிந்திய இரத்தம்தான் மிக அதிகம் என்கிறார் நோபல் பரிசு பெற்ற தாய்ம்பி என்கிற சரித்திரப் பேராசிரியர்.

நமது நாட்டில் மட்டுமல்ல. உலகில் எல்லா நாடுகளிலும் மக்களின் இறை நம்பிக்கையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மதத் தலைவர்கள் ஏராளம். இன்றைக்கு முந்நூறு, நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலைமை ஐரோப்பிய நாடுகளிலேயும் நடந்தது. நம் ஊர் நடை பாதைகளிலே எல்லாம் நாம் கோவில்கள் கட்டி மகிழ்வது போல இவர்களும் ஊர் தவறாமல் சர்ச்சுகள் கட்டினார்கள். அந்த சர்ச்சுகளுக்கு மதத்தலைவர்களாக இருந்த பாதிரிமார்கள் கடவுள் பெயரால் கயமைகள் புரிந்தனர். அதிகாரத்தைத் தங்கள் கையிலே எடுத்துக் கொண்டனர். The Devine Law என்ற பெயரால் தங்களைக் கடவுளின் ஏஜண்டுகளாக ஆக்கிக் கொண்டனர். அதனாலே என்னுடைய செயல்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்கின்ற சட்டம் வகுத்தனர். பாவமன்னிப்புச் சீட்டு என்கிற பெயரால் ஒரு பக்கம் இவர்களுக்கு பணம் குவிந்தது. மறுபக்கம் மக்களிடத்திலே அவ்வப்போது செய்கிற பாவங்களை எல்லாம் பணத்தால் கழுவுகின்ற வழி கிடைத்ததால் பாவங்கள் பெருகின. இதனைப் புரிந்து கொண்டு மதம் என்கிற மாயையிலிருந்து விடுபடுவதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பல நூறாண்டுகள் தேவைப்பட்டன.

இன்றைய நிலையிலே என்னிடத்தில் கல்வி பயிலுகின்ற இளைஞர்களிடத்திலே நீ சர்ச்சுக்கு போவதுண்டா என்கிற கேள்வியைத் தவறாமல் நான் கேட்பதுண்டு. அதிலே நூற்றுக்கு தொன்னூற்றொன்பது பேர் அளித்த விடை; நான் சர்ச்சுக்குப் போவதில்லை என்பதுதான்.

இன்றைக்குக் கிராமங்கள் தவறாமல் ஊர்கள் தவறாமல் ஐரோப்பிய நாடுகளிலே சர்ச்சுகள் இருப்பது உண்மைதான். என்றாலும் பெரும்பாலும் அவை வெறும் அழகுப் பொருள்களாக, பழங்கால நினைவுச் சின்னங்களாகத்தான் மக்களாலே மதிக்கப்படுகின்றன. உதாரணமாகப் பாரீஸிலிருக்கிற Notre Duame கோயில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்களாலே பார்வையிடப்படுகிறது. ஆனால் அங்கே உள்ளே போனால் ஒரு விஷயத்தை நீங்கள் பார்க்கலாம். அந்தக் கோயில் மண்டபத்தை வலம் வருகின்ற மக்களிலே நூற்றுக்குத் தொன்னூறு பேர் மேலே பார்த்துக் கொண்டுதான் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

காரணம், அந்தக் கோயில் மையத்திலே இருக்கிற சிலுவையையோ, சிலுவையில் இருக்கிற ஏசுவையோ, ஏசுவைத் தன் மடியிலே தாங்கியிருக்கிற மாதாவையோ, அந்த மாதாவுக்கு இரண்டு பக்கத்திலுமிருக்கிற தேவதைகளையோ அவர்கள் பார்ப்பதற்கோ, வணங்குவதற்கோ, வழிபடுவதற்கோ வருவதாக தெரியவில்லை. ஆனால் அதனைச் சுற்றியிருக்கிற பிரம்மாண்டமான கட்டிட வேலைப்பாடுகளைக் கண்டு வியப்பதற்கும், பல வண்ணக் கண்ணாடிகளாலான உயிரோவியங்களையுடைய ஜன்னல்களைக் கண்டு ரசிப்பதற்கும், அந்தக் கோவில் முன்னால் வருகின்ற கழுதைகள் முதல் கழைக்கூத்தாடிகள் வரை காட்டுகின்ற வேடிக்கைகளை பார்ப்பதற்காகவும் புகைப்படம் எடுப்பதற்காகவும்தான் பெரும்பாலானவர்கள் அங்கே வருவதைக் காண்கிறோம்.

ஆனால், இந்திய நாட்டிலே நிலைமை வேறு. நம் ஊரிலே நடக்கும் டூரிஸ்ட் கம்பெனிகள்கூடக் கன்னியாகுமரி, பழனி, திருப்பதி, காசி, ராமேஸ்வரம் என்று கோவில்களின் பெயரைத்தான் பார்க்குமிடங்களின் வரிசையில் வைக்கும். ஏனென்றால் மேலை நாடுகளிலே கோவிலுக்குப் போகிறவன்கூடப் பக்தனாகத்தான் போகிறான். நமது நாகரிகத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கிற இந்த இறை நம்பிக்கைதான் அரசியல்வாதிகளின் கையிலே அகப்பட்டுக் கொண்டு அயோத்தியில் ஒரு சோக வரலாற்றை படைத்துவிட்டது.

உண்மையில் நம் அரசியல்வாதிகளுக்கு விவஸ்தையே கிடையாது. தம் தாயை விபச்சாரி என்று விளம்பரப் படுத்தினால்தான் தேர்தலிலே வெற்றி கிடைக்கும் என்றால் தயங்காமல் அதைச் செய்து முடிக்கின்ற தர்மவான்கள் அவர்கள். எதையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுகிற சாதுர்யம் படைத்தவர்கள் இவர்கள். பணம், பதவி, ஜாதி, மொழி, இனம், மதம் இப்படி எத்தனையோ பெயர்களிலே மக்களை மோதவிட்டு குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்கள் அரசியல்வாதிகள். இப்போது கடைசியாக இவர்கள் கையிலே மாட்டிக்கொண்டவர்கள் கடவுளர்கள்.

மானிட அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவாகிய இராமரை என் கண் முன்னால் நிறுத்தி இந்தப் பிரச்னைக்கு விடை காண முயல்கிறேன். உலகத்திற்கெல்லாம் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளப் போகிற நேரத்தில் பட்டம் உனக்கில்லை; பரதனுக்குத்தான். நாடு அவனுக்கு, காடு உனக்கு என்று ஆணையிட்டான் அரசன் என்றுரைத்த சிற்றன்னைக்கு மன்னவன் பணியன்றாகில் என்பணி மறுப்பனோ என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ. பொன்னொளிர் காணும் இன்று புறப்பட்டேன், விடையும் கொண்டேன் என்று சொல்லி, விட்டுக் கொடுத்தல் என்ற தத்துவத்தின் விளக்கமாக வாழ்ந்து காட்டிய இராமன் தன் நகரத்தில் ஒரு மசூதி கட்டியதற்காகவா மக்களை ஒதுக்கிவிட்டுப் போர்க்களம் நடத்தியிருப்பான்.

ஒன்றையென்னில் ஒன்றேயாம், பலதே என்னில் பலதேயாம், அன்றே என்னில் அன்றேயாம். ஆம் என்றுரைத்தல் ஆமேயாம் என்று சர்வசமய கடவுள் வாழ்த்து பாடியல்லவா கம்பன் இராமன் கதையைத் தொடங்குகிறான். அந்த இராமனுக்கா அல்லாஹ் என்கிற கடவுள் மேல் பகை வந்துவிட முடியும்? ஒரு நாமம், ஓருருவம் இல்லா இறைவர்க்கு ஆயிரம் திருநாமம் சொல்லி தெள்ளோலம் காட்டோமோ என்று கூறிய மாணிக்கவாசகர் என்கிற மகானைத் தந்த இந்துமதம் அல்லாஹ் என்கிற பெயரிலே ஆண்டவனை வணங்குவதற்கு எப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியும்?

முகலாய மன்னர்கள் இந்துக் கோவில்களை இடித்துவிட்டு மசூதிகளைக் கட்டினார்களே; அதுமட்டும் நியாயமா என்கிற கேள்வி எனக்குப் புரிகிறது. அதற்கு விடையாக மீண்டும் சொல்கிறேன். அவர்களெல்லாம் அரசியல்வாதிகள். மக்களை ஏமாற்றி தங்கள் மகத்துவத்தைப் பெருக்கிக்கொள்வதற்காகச் செய்திருக்கலாம். தங்கள் மகத்துவத்தைக் காட்டுவதற்காகச் சமயப் போர் முடிந்த மகாராஜாக்கள் காலம் காலமாக இருந்திருக்கிறார்கள்.

ஜெருசலேமை வசப்படுத்த சிலுவைப் போர் புரிந்திருக்கிற ஐரோப்பிய மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன்? மாமனும் மச்சானுமாக இருக்கிற சிவனையும், திருமாலையும் வழிபடுகின்ற சைவ வைணவர்களே தங்களுக்குள்ளே வெட்டுக்குத்து நடத்திய வரலாறு தமிழகத்திலேயும் இருந்திருக்கிறது.

அஹிம்சை, மன்னிப்பு, எதிரிக்கும் இரக்கம் காட்டுதல் என்கிற மகா தத்துவங்களில் வாழ்ந்து காட்டிய ஏசுபெருமான் பிறந்த மண்ணிலே ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களின் இரத்தமும், முகம்மதியர்களின் இரத்தமும் அன்றாடம் சிந்தப்பட்டு அந்த மண் ஈரம் புலராமல் கிடக்கின்றது. இந்த இரண்டு இரத்தத்திற்கும் வண்ணத்திலே என்ன வேறுபாடு என்று தெரியாமல் பூமித்தாய் தவிக்கிறாள். உங்களுக்குப் புரிந்தால் உணர்த்துங்களேன்?

Categories: கட்டுரை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »