நாம் வாழுகின்ற நமது தமிழ்நாட்டிற்கு சட்டப்படியாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பெருமைக்குரியவர். நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்தவர். தந்தைப் பெரியாரின் பெருந்தொண்டராக இருந்து பின்பு “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கொள்கை முழக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியவர். “கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்னும் திருக்குறளுக்கும், “விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்” என்ற குறளுக்கும் விளக்கமாக விளங்கக்கூடிய பேரறிஞர். தமிழைப் போல் ஆங்கலத்திலும் புலமை மிக்கவர். அடுக்குமொழி வசனங்களுக்குச் சொந்தக்காரர். கட்டுரையாளர், இந்தியாவின் தலைசிறந்த பேச்சாளர்களில் முதன்மையானவர் பேரறிஞர் அண்ணா அவர்களாகிடங்குகள்ட்ட நூல் “நமது நாடு” என்கின்ற அருமையான நூல்.
கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னாட்டின் வாணிகம் கிபி பதினான்காம் நூற்றாண்டு வரையிலும் வளம் குன்றாது தலைநிமிர்ந்து நடைபெற்றுள்ளது. பழந்தமிழர் வாழ்க்கை நிலையினை விளக்க சங்க கால நூல்களான பத்துப் பாட்டு, எட்டுத்தொகை உள்ளது. எகிப்து, சிரியா, மெசபடோமியா, பெர்சியா, பாலஸ்தீனம், சோமாலிலாந்து, கிரீக், ரோம், சுமத்ரா, சாவா, மலேயா, சியாம், சீனம் ஆகிய நாடுகளுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர் என்பதை விளக்குகுறது.
மொகஞ்சதாரோ, ஹரப்பா, எகிப்து, மெசபடோமியா, ஆகிய இடங்களில் மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் தமிழர் நாகரிகமான திராவிட நாகரிகத்தின் அடையாளக் கூறுகள் நிரம்பிக் கிடக்கின்ற உண்மையை வரலாற்று ஆசிரியர்களும் புதைபொருள் ஆராய்ச்சி வல்லுநர்களும் மிகத் தெளிவாக பல நூல்கள் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளனர்.
கி பி பதினாங்காம் நூற்றாண்டுக்குப் பின் ஆரிய நாகரிகம் திராவிடத்தில் புகுந்து, செழிப்புற்று இருந்த திராவிட மக்களின் பண்பு, கலாசாரம், வீரம், என பலவும் குன்றி, நாளடைவில் நாடு வெள்ளையர்களுக்கு அடிமையாகியது. ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியம் 1947 ஆம் ஆண்டு வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்றதேயன்றி திராவிடம்(தமிழ்நாடு) விடுதலை பெறவில்லை. வெள்ளை ஏகாதிபத்தியம் ஒழிந்து வடவர் ஏகாதிபத்தியம் திராவிடத்தில் ஆட்சி செலுத்தி வருகின்றது.
இந்நிலையில் வடவரின் ஆட்சியால் திராவிட நாடு அதாவது தமிழ்நாடு எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப் படுகிறது என்பது இந்த நூல் முழுமைக்குமான செய்தியாக இருக்கிறது.
வெள்ளையர்கள் தங்களது ஆட்சியை நடத்துவதற்கு ஏதுவாக 56 நாடுகளாகப் பிரிந்துகிடந்த நாடுகளை ஒருங்கிணைத்து இந்தியா என்கின்ற ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியத்தைக் கட்டமைத்தனர். இந்த நாடு வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்று விட்டால், நாடு! மலர்க்காடு! எங்கும் நறுமணம்! வீடெல்லாம் இன்ப கீதம்! காணுமிடமெல்லாம் களிப்பு! இப்படிப்பட்ட நிலை தான் சுதந்திர இந்தியாவில் நிலவும் என்று கனவு கண்டவர்கள் பலர், ஆனால் சுதந்திரம் அடைந்த பின் அந்தக் கனவு அதற்கு எதிர்மறையாக இருந்ததைக் கண்டு வெம்பினர். இதை பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் தமது வானொலி பேச்சில் “நாம் நமது இந்தியாவைப்பற்றி என்னென்னமோ இன்பக் கனவுகள் எல்லாம் கண்டோம், ஆனால் உண்மை காட்சி வேறாகத் தான் இருக்கிறது! கனவில் கண்டபடியேவா காட்சி இருக்க முடியும்?” என்று ஏக்கத்துடன் பேசினார். அந்த ஏக்கம் ஒரு லட்சியவாதியின், விழிப்புற்ற இலட்சியவாதியின் ஏக்கமாக இருந்தது. என்று அறிஞர் அண்ணா அவர்கள் இந்நூலில் குறிப்பிடுகின்றார்.
இந்தியாவிற்கான விடுதலைக்காக போராடிய போது வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் “இந்தியா சுயராஜ்யத்துக்கு லாயக்கில்லை பக்குவத்திற்கு வரவில்லை” என்று சொன்ன சொல்லே நாட்டில் மெய்யாகி இருக்கிறது. என்பதையே இது காட்டுகிறது.
பொதுவாக ஆதிக்க காரர்கள் தனது பலம் சரியும்போது தந்திரத்தைத் துணைக் கொள்ள முயல்வதும், அதுவும் பலிக்காத போது நடந்ததை மறந்து விடுவோம், இனி நாம் நண்பர்களாவோம் என்று சொந்தம் பாராட்டுவதும் சகஜம். அம்முறையையே இந்திய உப கண்டத்தை பொறுத்தவரையில் பிரிட்டன் கையாண்டு இருக்கிறது. இந்த நிலை ஒருபுறம் இருக்க ஒவ்வொரு நாடும் அரசு உரிமை பெறுகிறபோது எல்லைத் தகராறுகளும், நாட்டிலேயே தனி அமைப்புகளும் ஏற்பட்டாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவது இயல்பு. நாம் ஒரு இருநூறு ஆண்டுகள் அரசு உரிமை இழந்து அந்நியர் ஆட்சியிலிருந்து வந்ததால் இவ்விதமான பிரச்சினைகள் எழக்கூடும் என்ற எண்ணவே நம்மவர்களால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. எல்லைக் கோடு போடுவது முதற்கொண்டு என் கலை, என் மொழி, என் இனம், என்பது வரையிலேயே பேசப்படுகின்றன. இது இப்படிப்பட்ட பிரச்சினைகள் எழக்கூடும் என்ற எண்ணமே கொண்டிராத மக்களுக்கு புரியாதனவாகவும், திகைப்பளிப்பனவாகவும் உள்ளன. சிலருக்கு இது தொடர்பாக கோபம் கூட வருகிறது. ஏன் என்றால் இந்த மண்ணில் ஆயிரத்தெட்டு தகராறுகள் உருவாகிவிட்டன. மற்ற நாடுகளிலேயாவது நமக்குள்ளே ஏன் தகராறு என்று கேட்கும்போது ஒரே நாட்டு மக்கள், ஒரே மதம், ஒரே மொழி, கலை என்னும் பந்தங்கள் உண்டு என்று சொல்லலாம். ஆனால் இந்திய ஒன்றியத்தை பொறுத்தளவில் அதுவும் கிடையாது. இங்கு நெடுங்காலமாக என்றாலும், இருந்த போதும் என்று பேசிக் கொண்டே நாம் காலம் கடத்தி வந்து விட்டோம். ஒரு பிரச்சனையையும் தீர்க்காமல் இந்து – முஸ்லீம் என்று நாம் இருவேறு மதக்காரர்களாக இருந்தபோதிலும், பிரம, சத்திரிய, வைசிய, சூத்திர என்று நான்கு வர்ணமாகப் பிரிந்து இருந்த போதிலும் நாம் அனைவரும் இந்தியர் என்று கூறி வந்தோம். அவ்விதம் கூறிக்கொள்வதில் நமக்கும் பூரிப்பும் பெருமையும் கூட இருந்தது. இப்போது பூரிப்பும் பெருமையும் பயன் தரவில்லை என்பதை உணர்கிறோம் என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொல்கிறார். காரணம் இது திராவிடம்் போட உதவிற்றே ஒழிய வேறெதற்கும் பயன்படவில்ல.
திராவிடம் நமது நாடு, நமது நாடு முன்னாளில் தனியாட்சியுடன் இருந்த நாடு! இதை அடிமை ஆக்கி விட்டார்கள் அவர்கள், திராவிட நாடு பித்து, பிள்ளை விளையாட்டு இல்லாத நாடாக இருந்தது அன்று, இன்று திராவிடத்தை ஜாதி மதவெறி வேட்டைக் காடு ஆக்கி விட்டார்கள் அவர்கள், திராவிடம் வளம் மிகுந்தது என்று வையகமே புகழ்ந்தது முன்பு, இன்று கற்றாலையும் உணவாகிறது. அதுவும் கிடைக்காதவர்கள் பிணமாகிறார்கள். அந்தப் பிணமும் கேலி செய்யப்படுகிறது.
அவர்களால். திராவிடத்தின் புகழ் தரணியெல்லாம் பரவியிருந்தது ஒரு நாள், இன்று திராவிடத்தின் தலைவிதி டெல்லியில் எழுதப்படுகிறது. திராவிடம் திக்கெட்டும் முன்பு வீரர்களை அனுப்பி வந்தது, இன்று திராவிடம் வாழ மந்திரிகள் காவடி எடுக்கிறார்கள் டில்லிக்கி. திராவிடம் தேய்கிறது. தன்மானம் அழிகிறது. அவர்களோ ஒரே நாடு இந்தியா என்று ஒய்யாரம் பாடுகிறார்கள்.
யார் அந்த அவர்கள்? தீட்சிதர்களா? சாஸ்திரிகளா? காங்கிரஸ் காரர்களா? கம்யூனிஸ்ட்டுகளா? தமிழரசரா? என்று பிரித்துப் பிரித்துப் பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை. அவர்களில் சர் பட்டம் பெற்றோரும் உள்ளனர், சர்மாக்களும் உள்ளனர், சம்மட்டி அரிவாள் பொறித்த கொடியினர் உள்ளனர். சாகசக்காரர்களும் உள்ளனர். அரசியல் சர்கஸ் காரர்களும் உள்ளனர், வேதாந்தியும் இருக்கிறான். வெந்ததைத் தின்றதற்காக தொந்தினம் பாடுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த அவர்கள் என்ற பட்டியலில் முதலியார் இருக்கிறார், செட்டியார் இருக்கிறார், முப்புரி அணிந்த வேதியர் இருக்கிறார், தற்குறித் தனத்தை மறைக்கத் தடிதூக்கும் தாண்டவராயரும் இருக்கிறார். என்று திராவிட நாட்டின், தமிழ்நாட்டின் பெருமையைக் குழைக்கும் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று அண்ணா அன்று பட்டியல் போட்டார். இன்றும் அவர்களே இந்த தமிழ் நாட்டின் பெருமைகளை, சீர்மைகளைக் குழைத்து வருகின்றனர். அன்று காங்கிரஸ்காரர்களின் ஆட்சியில், இன்று பாரதிய ஜனதாவின் ஆட்சியில் எப்பொழுதும் இவர்கள் மாறாமல் இருந்து கொண்டேதான் இருக்கின்றனர்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாட்டின், தமிழ்நாட்டின் பெருமைகளைப் பற்றி இவ்வாறு பதிவு செய்கிறார். “வடநாட்டார் முன்பொரு காலத்தில் படையெடுத்து வெளிநாட்டவரிடம் தோல்வியுற்றனரே, திராவிவிடன், தமிழன் தோல்வி என்பதையே கண்டதில்லை என்று சரித்திர சான்றுகள் இன்றும் உள்ளனவே, திராவிடன் எத்தனையோ நாடுகளை வென்றதாகச் சரித்திரம் கூறுகிறது. வீரத்திற்காகக் கூட வடநாட்டான் நமக்குத் தேவையில்லை. திராவிட மன்னர்கள் தருமராஜனைப் போல் நாட்டை சூதாட்டத்தில் தோற்றதில்லை. திராவிட மன்னர்கள் அரிச்சந்திரன் போல் நாட்டை முனிவருக்கு தானம் செய்தது இல்லை. திராவிடக் கவிஞர்கள் அதல சுதள, பாதளமென பொய்யுரைகளை எழுதியது இல்லை. கண்ட கண்ட உருவெடுத்தார் கடவுள் எனக் கதை தீட்டியதில்லை. காலடியில் புரண்டுதொழுதல் கடாட்சம் என்று கூறவில்லை. மாறாக “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கண்டனர் திராவிடர் உயிர்வாழ மானத்தை இழந்ததில்லை. உறுதியின்றி உலுத்தராய் இருந்ததில்லை. சூழ்ச்சியை ஆயுதமாகக் கொண்டதில்லை. சுதந்திர வாழ்வுக்காக உயிரையும் தந்தனர். திராவிடம் என்றும் அந்நிய ஆட்சிக்கு அடிமைப்பட்டு இருந்ததாகச் சரித்திரம் இல்லை. பஞ்சமும் பிணியும் பதைப்பும் கண்டதில்லை. பாட்டாளி பதைக்கப் பார்த்துச் சிரித்து இல்லை. உழைப்பால் உயர்ந்து உரிய இடம் பெற்றது உலகில் திராவிடம்.
ஆனால் இன்றைய திராவிட நாட்டின் தமிழ்நாட்டில் தமிழர்களின் நிலை என்ன என்று எண்ணிப்பார்த்தால் பழம் பெருமைகளை எல்லாம் புதைத்து விட்டு இன்று மானமிழந்து, வீரமிழந்து, வீணர்களின் ஆதிக்கத்திற்கு அடிமையாக, மொழி மானமும், இனமானமும் இன்றிக் கிடக்கின்றனர். திராவிட நாட்டின், தமிழ் நாட்டின் செல்வம் கோயில் கொடிமரத்தில், கொட்டு முழக்கத்தில் வெட்டி வேலையில் வெளிநாட்டில் சென்று முடங்கிவிட்டது. தமிழர்கள் தேயிலை, கரும்பு, ரப்பர், தோட்டக் காடுகளில் கூலியாய் வதைகின்றனர். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் மார்வாடியின் கடைகள், குஜராத்தியின் கிடங்குகள், முல்தானியின் முகாம்கள், சேட்டுகளின் கம்பெனிகள் என பெரிய வியாபாரம் எல்லாம் வடநாட்டாரிடம். தொழிற்சாலைகளில் துரைமார்கள் இல்லை பனியாக்கள். டால்மியாவுக்கு திருச்சிக்குப் பக்கத்தில் நகரமே இருக்கிறது. ஆசர் சேட்டுகளுக்குத் திருப்பூர் கோவை வட்டாரத்தில் ஆலை அரசர்கள் எல்லாம் கப்பம் கட்ட வேண்டிய நிலைமை. சென்னையிலேயே சவுகார்பேட்டை இருக்கிறது பாரத் பங்கு பணிபுரிகிறது. தினம் ஒலிக்கும் மணி ஒரு வடநாட்டு கோயங்கா உடையது. சென்னையில் உள்ள பெரிய கட்டிடங்கள் எல்லாமும் இன்றும் வட நாட்டாருக்கே சொந்தம். இந்த நிலையில் திராவிடநாட்டில் ஆடை முதல் ஆணி வரை வட நாட்டிலிருந்தே வருகிறது என்பதன் பொருள் ஏராளமான பணம் இங்கிருந்து திராவிட நாட்டிலிருந்து வடநாட்டுக்கு போகிறது என்பதாகும்.
சுதந்திர நாட்டில் தமிழ்நாடு இழந்த இன்பத்தை எண்ணிடும் போது உள்ளம் வேதனைப்படும். இன்பத்தை இழந்ததுடன் துன்பத்திலும் சிக்கி விட்டால் அந்த வேதனை பன்மடங்கு அதிகமாகி இன்பத்தை மீண்டும் எப்படியேனும் பெற வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும் இதுவே இன்றைய தமிழர் நிலை. திராவிடரின் லட்சியம்.
தமிழ்நாடு என்றுமே தலைவணங்கி வாழ்ந்ததில்லையே தனிநாடாக, திருநாடாகவன்றோ தழைத்து வந்தது, ஆரியமன்றோ அதனை அடுத்துக் கெடுத்தது. இருந்துவிட்டது என்று சொல்லும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அசோகர் அக்பர் ஆகிய மன்னாதி மன்னர்கள் காலத்திலும் மண்டியிட்டதில்லை தமிழ்நாடு. அசோகர் கல்வெட்டுக்கள் கடும் போரில் அவர் வென்றதை காட்டுகிறது. அசோகரின் படைபலம் கலிங்கத்துப் போரில் காடு, இரத்தக் காடாகப் போரிட்ட வீரம் ஆகியவற்றை காட்டுகிறது. ஆனால் மற்றும் என்ன விளக்கமாகிறது? இவ்வளவு கடுமையாகப் போரிட்டு வெற்றி பெறக்கூடிய அசோகர் திராவிட நாட்டை வெல்ல முடியவில்லை என்ற உண்மையை எடுத்துக் காட்டுகிறது
சேர சோழ பாண்டியர்கள் மண்டலாதிபதிகளாக வாழ்ந்தனர். அசோகர் காலத்தில் இவர்கள் அரசுரிமை இழக்காது தமிழ்நாட்டு தனிச்சிறப்பை காட்டவில்லையோ எனக் கேட்கிறோம்.
ஐம்பதாறு மன்னர்கள், ஐம்பத்தாறு தனித்தனி நாடுகளை ஆண்டு வந்த வரலாற்றைக் கூறும் சமஸ்கிருத நூல்கள் காலம் முதற்கொண்டு தமிழ்நாடு தனித்து தான் வாழ்ந்து வந்தது.
கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘திராவிட நாட்டு மன்னர்கள் தங்கக் கொப்பரையில் சந்தனத் தைலத்தை ஊற்றி வைத்துக் கொண்டு வாழ்ந்தனர் என்று கூறப்பட்டிருக்கிறது மூன்றாவது நூற்றாண்டில் திராவிட நாட்டின் அமைப்பு பற்றி வரலாற்று நூல்களில் வரைந்திருகின்றனர்.
திருநெல்வேலிக்கு தென்கிழக்கே உள்ள ஆதிச்சநல்லூரில் ஆராய்ச்சியாளர்கள் கல்வெட்டுகளையும் கண்டுபிடித்து எடுத்தனர். (இதையே இன்றைய மதுரைக்கு அருகே உள்ள கீழடி அகழாய்வும் காட்டுகிறது)
இதே விதமான திராவிடச் சிறப்புச் சின்னங்கள் பஞ்சாப்பில் மண்காமரி ஜில்லாவில் உள்ள ஹராப்பா என்ற இடத்திலும் சிந்து மாகாணத்தில் மொகஞ்சதாரோ என்ற இடத்திலும் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பதஞ்சலி எழுதிய புத்தகம், அசோகர் கல்வெட்டுக்கள், மெகஸ்தனிஸ் எழுதிய மகாவம்சம், தீபவம்சம் போன்ற எத்தனையோ சான்றுகள் திராவிடர் சிறப்பை விளக்குகின்றன.
இதையெல்லாம் வைத்து நாம் ஒரு முடிவுக்கு வந்தோமானால் ஒரு காலத்தில் திராவிட நாகரிகம் என்று சொல்லப்படுகின்ற தமிழர் நாகரிகம், தமிழர் ஆட்சி நெல்லையில் தொடங்கி நெடுக நெடுக சென்று சிந்து பஞ்சாப் வரையிலும் அதற்கு அப்புறமும் சென்றது என்று விளங்குகிறது. ஆனால் வடக்கிருந்த ஏதோவொரு மன்னன் தமிழ் நாட்டை வெற்றி கொண்டதாக எந்தக் கல்வெட்டும் கிடையாது. எந்தப் புதைபொருளும் கிடையாது. எந்த இலக்கியமும் கிடையாது என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுதுதான் தமிழ்நாட்டின் தமிழர்களின் மேன்மையும் சிறப்பும் நமக்கு விளங்கும். அப்படிப்பட்ட தமிழகம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது என்று சொல்லிக் கொண்டே வரும் பேரறிஞர் அண்ணா அவர்கள் மத்திய அரசின் மூலம் நிறுவப்பட்ட 24 காகித தொழிற்சாலை களின் பட்டியலை கொடுக்கிறார். இந்த 24 தொழிற்சாலைகளிலும் அதன் உரிமையாளர்கள் ஒருவர்கூட தமிழ்(திராவிட) நாட்டவராக இல்லை. இதில் தென்னாடு என்று சொல்லப்படுகின்ற கேரளா ஆந்திரா கர்நாடகா தமிழ்நாடு உட்பட இந்த நான்கு நாடுகளுக்குமான 4 தொழிற்சாலைகள் மட்டுமே இங்கே இருக்கிறது. இதில் ஒன்று தக்கானத்தில் உள்ளது. அது செயல்படவில்லை. மற்ற மூன்றும் கேரளா ஆந்திரா கர்நாடகாவில் மட்டுமே காகிதத் தொழிற்சாலைகள் இருக்கின்றனவே தவிர தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிற்சாலையும் கிடையாது. எனவே தொழில் நிறுவனத்தின் மூலமாகவும் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்ட இருக்கிறது.
இந்தக் காகித தொழிற்சாலை களில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் என்று பார்த்தால் எவருமே தமிழர் கிடையாது என்பதையும் பதிவுசெய்கிறார். மத்திய அரசின் ஆட்சி அதிகாரம், ராச்சிய அதிகாரங்கள், மத்திய மாநில ஆட்சிகளின் பொது அதிகாரங்கள் என எல்லாவற்றிலுமாக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டே தான் இருக்கிறது. எனவேதான் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று சொல்லக்கூடிய நிலையும் வந்தது.
சர்க்கார் இலாகாவின் வருமானம் தொடர்பான புள்ளி விபரம் சராசரியாக தலைக்கு 600 ரூபாய் வடநாட்டவர்களுக்கும், 300 ரூபாய் தென்னாட்டவர்களுக்கும் என்று அரசின் புள்ளி விவரமே கூறியிருக்கிறது. இந்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் வருமானத்தில் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேபோல விவசாயிகளின் நிலையை எடுத்துக் கொண்டாள் சென்னையில் நாளொன்றுக்கு கிடைக்கும் ஊதியம் சராசரியாக ஆணுக்கு 1-25, பெண்ணுக்கு -75 மட்டுமே.
ஆனால் வடக்கில் ஆணுக்கு 2-50, பெண்ணுக்கு 1-50 ம் கிடைக்கிறது. விவசாயத் துறையிலும் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே வடநாடு பணத்தோட்டம் ஆகவும் தென்னாடு பிணத்தோட்டமக்கவுமே இருந்து வருகிறது. வட நாட்டில் தொழிற்சாலைகள் வந்துவிட்டன. தொழில்துறையில் அதன் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. அஞ்சும் விதமாக அதிகரிக்கும் வட நாட்டில் தொழில் ஆதிக்கத்துக்கு வேண்டிய சலுகைகளை இந்திய சர்க்கார் வேண்டிய அளவில் அளிக்கின்றனர். அதற்கான வழிகளை மத்திய சர்க்கார் அதிகாரங்கள் என்ற உருவில் அதிகமாகிக்கொண்டே வருகின்றனர். வடநாடு பணபலம் படைத்துவிட்டது தொழில் வளம் பெற்று விட்டது அரசியல் ஆதிக்கம் அடைந்துவிட்டது ஆட்சியின் கைப்பிடி அவர்கள் கையில் இருக்கும் காரணத்தால் அதிக வளர்ச்சியை அதிகமாகிக்கொண்டே வருகின்றனர். ஏக இந்தியா என்ற ஒரு சொல்லை ஆட்டக் காயாக வைத்துக் கொண்டு மத்திய சர்க்கார் மாகாணங்களை தன் கண்காணிப்பில் வைக்கும் ஆசையை சந்தித்து வருகிறது. (இதைத்தான் இன்றைய பாசக மோடி அரசும் செய்து வருகின்றது.)
இந்தியா என்பதும் அது ஒரே நாடு என்பதும் கற்பனை என்பது தான் உண்மை. இந்தியா என்பது ஆங்கிலேயர் காலத்தில் உண்டானது தான். அதற்கு முன் இந்தியா என்கின்ற தனி நாடு இருந்ததற்கான ஆதாரங்கள் வரலாற்றிலேயே கிடையாது. வரை படங்களிலும் கிடையாது. வேத இதிகாச புராணங்களிலும் கிடையாது. தேவார திருவாசகங்களிலும் கிடையாது. எந்த ஒன்றிலுமே இந்தியா என்கின்ற தனித்த நாடு ஒன்று இருந்ததற்கான சான்றுகள் இல்லை என்பது வரலாறு என்று அருமையாக விலகிச் செல்கிறார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
மேலும் விவசாயத்துறை, தொழில்துறை, போக்குவரத்துத்துறை, ஆராய்ச்சி நிலையங்கள், சமூகத்துறை ஆகிய துறைகள் தொடர்பான அரசின் திட்டங்கள் எந்தெந்த மாநிலத்தில் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன போன்ற புள்ளி விவரங்களை இந்நூலில் பதிவு செய்கிறார் பேரறிஞர் அண்ணா.
தொடர்ந்து திராவிட நாட்டில் உள்ள கடல் வியாபாரிகள் குறித்து ஒரு பெரும் பட்டியலைத் தந்துள்ளார். அப்பட்டியலில் 95 விழுக்காட்டினர் வடநாட்டவர்கள் 5 விழுக்காட்டினர் அன்னியர் என்று குறிப்பிட்டிருக்கிறார். எனவே நாம் நாடு மீண்டும் பழைய படியான திராவிட நாடாக தமிழர் நாடாக இருக்க வேண்டும் என்றால் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தனிநாடு பெறுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் தமிழ் நாட்டின் நில உரிமைகள், தொழில் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் தமிழர்களுக்கானதாக இருக்க வேண்டும். தொழிற்சாலைகள் வரி வசூலிக்கும் பொறுப்பும் அதனைச் செலவிடுவதற்கான அதிகாரமும் தமிழ்நாடு அரசிடம் இருக்க வேண்டும் என்பதே இந்த புத்தகத்தின் மையக் கருத்தாக இருக்கிறது இன்னும் பல செய்திகளை விளக்கமாக தெரிந்து கொள்ள விரும்பும் அறிஞர் பெருமக்கள் கட்டாயம் நமது நாடு என்கின்ற பேரறிஞர் அண்ணாவின் இந்த நூலை வாங்கிப் படித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவனர்: தேனிவையைத் தமிழ்ச்சங்கம், நாகலாபுரம். தமிழ்நாடு, இந்தியா.
நூல் : நமது நாடு
நூலாசிரியர் : பேரறிஞர் அண்ணா
நூலைப் பதிப்பித்தோர் : பாரதி பதிப்பகம் சென்னை
இந்த நூல் நான்காம் பதிப்பான 1993 ம் ஆண்டின்படி இதன் விலை: 10 ரூபாய்
நூலின் பக்கங்கள் : 88
1 Comment
புலவர் சந.இளங்குமரன் · ஆகஸ்ட் 15, 2020 at 12 h 54 min
மகிழ்ச்சி ஐயா, அருமையான நூல் குறித்த பதிவினை வெளியிட்டு அண்ணாவின் கனவு இன்று வரையிலும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என்பதற்கு சான்றாக, பல்வேறு சிந்தனைகளை உள்ளடக்கிய இந்த நூலின் விமர்சனத்தை வெளியிட்டு சிறப்பித்த தங்களுக்கு என்றென்றும் இனிய நன்றி ஐயா.
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன், நிறுவனர்
தேனி வையைத் தமிழ்ச்சங்கம்
& வாசிக்கலாம் வாங்க… தேனி