அரை நூற்றாண்டுக்கும் முன்பேத் தமிழிலக்கிய அரங்குகளுக்கு அறிமுகமாகி மரபுக்கவிதை, இலக்கியச் சொற்பொழிகள், பட்டிமண்டபங்கள், வழக்காடு மன்றங்கள், சொற்பொழிவுகள், கட்டுரைகள், திறனாய்வு உதவி, எனப் பலதுறைகளில் தன் சுவடுகளை அழுத்தமாய்ப் பதித்துத் தொடருந் தமிழறிஞர் தங்க அன்புவல்லி அம்மாவுக்கு வணக்கம் சொல்லி மகிழ்ந்து வாழ்த்த வேண்டித் தொடங்குகிறேன். எதையும் தொடங்கச் சிறந்த இடம் முதன்முதல் தொடங்கிய இடம்தான் என்பர். (Let us begin at the very beginning; a very good place to start-The sound of music) அங்கிருந்தே தொடங்குவோம்.
உங்களுக்கு தமிழ் இலக்கியத்தை,அதன் சுவையை உங்கள் இளமையில் அறிமுகப்படுத்திய ஆளுமைகள், உடன்பயின்றோர், குறித்துச்சொல்லுங்கள்.
வணக்கம்.
பிரான்சிலிருந்து வெளிவரும் தமிழ் நெஞ்சம் வாயிலாகக் தமிழ் நெஞ்சங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி யடைகிறேன். சிறந்த தமிழார்வலராகிய தமிழ்நெஞ்சம் அமின் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும் கூடிய கைகூப்பு
இப்போது என் அகவை எழுபத்தி ரண்டு பொழுதுசாயும் இவ்வேளை அரை நூற்றாண்டுக்கும் மேலான ஓர் இலக்கியப் பயணத்திற்கு உங்களை அழைக்கின்றேன். அரை நூற்றாண்டு இலக்கிய வாழ்வு என்று கேட்டிருக்கிறீர்கள். கொஞ்சம் அவையடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன். அது எழுபதாண்டு கால இலக்கிய வாழ்வு என்று. உண்மைதான் உண்மை தவிர வேறில்லை. இந்த மீள்பார்வை எனக்கு நினைவுகளை அசை போடுதல். இளந் தலைமுறைக்கு ஓர் இலக்கிய வரலாறு என்று சொல்லலாம். கொஞ்சம் சுடச்சுட பழையது உண்ணலாம் வாருங்கள்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை என்ற ஊரில் வள்ளுவர் பேரவை கண்ட தமிழாசிரியர், குறளாயம் அமைப்பின் குறளியம் இதழின் ஆசிரியர், தமிழகமெங்கும் நிலவுக்கூட்டம் நடத்தித் தமிழ் வளர்த்த குறள்நெறித்தோன்றல், பெரும் புலவர் மீ.தங்கவேலனார்-தில்லையம்மாள் இணையருக்கு நான் இரண்டாவது மகள்.
திருவையாறு கல்யாண மகால் என்ற சமற்கிருத நிலையம் சரபோசி மன்னரின் கொடையாக உணவு வழங்கி, அந்தணர்களுக்குச் சமற்கிருதம் கற்பித்து வந்தது. நீதிக்கட்சியின் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அதற்கு அரசர் கல்லூரி என்று பெயரையும் நடைமுறையையும் மாற்றி எல்லோரும் உணவும் உறைவிடமும் பெறும் உரிமை வழங்கித் தமிழ்க் கல்வி கற்க வழி செய்தார். அப்படித் தமிழ் கற்ற ஒருபெரும் புலவர் தலைமுறை அப்போது வளர்ந்தது.
தான் அரசர் கல்லூரியிற் தமிழ் பயின்றதன் நன்றி பாராட்ட லாக என் அண்ணனுக்குப் பன்னீர் செல்வம் என்று என் அப்பா பெயரிட்டார்கள். அயோத்திப்பட்டி தங்கவேலன் பன்னீர் செல்வம் என்று ஏ.டி.பன்னீர்செல்வம் எங்கள் இல்லத்தில் விளங்குகிறார். திருவாசகமணி என்று புகழ் பெற்ற எம் உறவினர் கே.எம்.பாலசுப்பிரமணியம் எனக்கு அன்புவல்லி என்று பெயர் சூட்டினார். இன்று வரை நான் மட்டுமே இப்பெயரில் இருப்பதாக நினைக்கிறேன்.
அ.த.பன்னீர் செல்வம் நான் அன்புவல்லி, சுந்தர காந்தி,சிவகாமசுந்தரி அங்கையற்கண்ணி, சுந்தர பாண்டியன் என்று நாங்கள் அறுவர். இவர்களில் என் அண்ணனும் நானும் தந்தையார் என்னும் தமிழாசானிடம் ஆழ்புலமை தோய்ந்து வளர்ந்தோம் எனலாம். எங்கள் முதல் ஆசிரியர் மீ.த.என்னும் எங்கள் தந்தையாரே.
அண்ணன் அ.த.ப. தமிழோடு வரலாறு, புவியியல், ஆங்கிலம் என்ற துறைகளிலும் ஆழங்காற்பட்டவர். ஆய்வறிஞர். குற்றம் பொறுக்காத நக்கீரர். நானோ தமிழ் தமிழ் என்று பித்துப்பிடித்த சிறுபிள்ளை. கறிக்குழம்பில் போடப்பட்ட கத்தரிக்காய் போல இலக்கியப் பெரும் பரப்பில் முத்துக்குளித்த ஆளுமைகளோடுச் சேர்ந்து தமிழ் ஊறிப் பழகியவள். அந்தச் சாரம் என்னுள்ளும் கொஞ்சம் இறங்கியிருக்கும் அல்லவா?
என் மூன்று வயதிலேயே திரு.வி.கவின் ‘இளமை விருந்து’ நூலிலிருந்து ‘உடலோம்பல்’ என்ற பகுதியை உரத்தநாடு உயர் நிலைப்பள்ளி மாணவர்களோடு ஒப்பித்துச் சான்றிதழ் பெற்றிருக்கிறேன். திருக்குறள் அறத்துப்பால் முழுமையும் சொல்லிவிட அப்பா என்னைப் பழக்கி யிருந்தார்கள். சிவபுராணம் சொல்லுவேன். குடும்ப விளக்கு நூலின் முதற்பகுதியாகிய ‘ஒருநாள் நிகழ்ச்சி’ முழுவதும் சொல்லு வேன். பள்ளி ஆண்டு விழாக்களில் மேடையேற்றி விடுவார்கள் ‘இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை’ என்று தொடங்கி ‘இரவு செல்லும்’என்பது வரை, தண்ணீரைக் குடித்துக் குடித்துச் சொல்லிக் கைதட்டல் பெறுவேன்.
என் மூன்றாம் அகவையில் தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் எம் இல்லம் வந்ததாக அப்பா சொல்லியிருக்கிறார்கள். என் அண்ணனை மடியிருத்தி ‘‘நீ இலக்கணம் ஆய்வு செய்யடா; இவள் மெல்லியல் இலக்கியம் செய்வாள்’’ என்று வாழ்த்தி மகிழ்ந்ததாக அண்ணனும் சொல்வார். எனக்கு அது நினைவு இல்லை. பாவேந்தர் பாரதிதாசனைப் பார்த்தது நினைவிருக்கிறது.
பட்டுக்கோட்டையில் வள்ளுவர் பேரவை என்ற அமைப்பு அப்பாவின் தலைமையில் இயங்கி வந்தது. தமிழ் நாட்டில் தமிழ் ஆளுமைகள் அத்துணை பேரும் தமிழாய்ந்து பொழிந்த இடம் பட்டுக்கோட்டை கண்டியன் தெரு பள்ளியிலிருந்த வள்ளுவர் பேரவையின் இலக்கியக்கூடம். கவியோகி சுத்தானந்த பாரதியார், சமுதாய மாமுனிவர், குன்றக்குடி அடிகளார், நாவலர் இரா.நெடுஞ்செழியன், டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி, அவ்வை நடராசன், நாவுக்கரசர் சத்தியசீலன், அ.அறிவொளி, அ.வ.இராசகோபாலன் எனப் பலரும் அங்கே தமிழ் மழை பொழிந்தார்கள். பாரதிதாசனை என் பிள்ளைக் குரலில் பேசிய பின், ‘எங்கள் வாழ்வும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்று நாவலர் நெடுஞ்செழியன் கைகளை மடக்கிக்கொண்டு முழங்கித் தொடங்குவது நினைவில் அழியாது நிற்கிறது.
இவர்கள் போன்ற தமிழ்ச்சான்றோர் பலருடன் இருந்து கற்றேன். அதுபோல ஒரு மாபெரும் தமிழறிஞரைக் கண்டு, அளவளாவி இல்லம் அழைத்து, உண விட்டு மகிழும் பேறு வள்ளுவர் பேரவை வழங்கியது. ஆம். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள். எம் இல்லம் வந்திருந்து கலந்துரையாடிய நினைவில் மெய்சிலிர்க்கிறது எனக்கு. அதன்பின் பல ஆண்டுகள் தாண்டி மதுரையில் நடந்த உலகத்தமிழ். மாநாட்டில் அவரைக்கண்டு வணங்கினோம்.அப்பாவையும் அண்ணாவையும், என்னையும், மறவாமல் வள்ளுவர் பேரவையையும், அவர் உசாவியது பெரு வியப்பு. அதுவே தமிழ் நாடு அவரைக்கண்ட இறுதி நிகழ்வுமாயிற்று
பெரும் உலகத் தமிழ் மாநாடுகளிலிருந்து பட்டிதொட்டிகளில் நடந்த சிறு நிகழ்ச்சிகள் வரை ஒரு படைப்பாளியாகப் பங்கேற்றிருக்கிறீர்கள்.நீங்கள் பங்கேற்ற பெரும் நிகழ்ச்சிகளோடு உள்ளத்திற்கு நிறைவுதந்த சிற்றூர்க் கூட்டங்கள் வரைக் கொஞ்சம் பருந்துப் பார்வையாகச் சொல்லுங்கள். அதேபோல் மூத்த அறிஞர் கவியோகி .சுத்தானந்த பாரதியாரிலிருந்து கிட்டத்தட்டத் தமிழ் கவியுலகின் அனைத்துப் பெரும் ஆளுமைகளோடும், ஒரே மேடையில் கவிதைகளைப் பாடியிருக்கிறீர்கள். அவர்களைப்பற்றியும் அந்த நிகழ்வுகளைப்பற்றியும் சொல்லுங்கள்
சமுதாய மாமுனிவர் குன்றக்குடி அடிகளார் தலைமையில் இளமையியிலிருந்தேப் பல பட்டிமன்றங்களில் பங்கேற்று இருக்கிறேன். சேக்கிழார், கம்பர், இளங்கோவடிகள், திருவள்ளுவர் என்று இந்தக்கூட்டணி அலசி ஆராயாத தமிழிலக்கியக்கங்கள் இல்லை. ஏழு மணித்துளிகளுக்குள் ஓர் இலக்கியப் பெரும் பரப்பை ஆய்வு செய்யவும், எதிர் மறுக்கவும், கருத்துணரவும் கற்றுக்கொடுத்த மாமன்றங்களாக அப்பட்டிமன்றங்கள் விளங்கின. பட்டி மன்றத்தின் செறிவான, விரிவான, செல்லப்பிள்ளையாக வழக்காடு மன்றம் பிறந்தது. தமிழ் மேடைகள், இலக்கியக் கழகங்களாகவும், பட்டித்தொட்டிகளில் எல்லாம் தமிழ்ச்சுவைஞர்களை உருவாக்கும் காரணிகளாகவும் பட்டி மன்றங்கள் விளங்கின.தமிழ் இலக்கியத் தலைமைப் பெண் பாத்திரங்களாகிய கண்ணகி, மாதவி, சீதை, மணிமேகலை முதலியோர், அவையேறிச், சீர்சிறந்து விளங்கிய அக்காலகட்டம் மேடை இலக்கியத்தின் பொற்காலம்தானே?.
பெரிய பெரிய மேடைகளும் விழாக் களும் தானென்றில்லாமல், பள்ளி ஆண்டு விழாக்கள், இலக்கியப்பேரவைக் கூட்டங்கள், கோவில் திருவிழாக்கள் எனச் சிற்றூர்களிலும் எங்கள் இலக்கியக்கொடி பறந்தது. அழைத்த இடங்களுக்கு எல்லாம் தவிர்க்காது, பொருள் கருதாது, தமிழ் பேசச்செல்லுவோம். பின்னிரவு வரை நீண்டாலும் கலையாத மக்களுக்குத் தமிழ் சொல்லும் பேறு வாய்த்தது ஆனால் நான் அரசோச்சியது பாவரங்கங்களில்தான். சமுதாய நோக்கு, பெண் விடுதலை, மொழியுணர்வு, காப்பு, ஈழத்தமிழருக்கு என்று என் பாக்களில் தீப்பிடித்தது.
நீதியரசர் மு.மு.இஸ்மாயில் அவர் களும், கம்பனடிப்பொடி சா.கணேசன் அவர்களும் புதுச்சேரி கம்பன் விழாவில் என்னைக் கவியரங்கத்திற்கென்றே நேர்ந்து விட்டார்கள். ‘‘உயிர் ததும்பும் அழகிய மென்குரல் இந்தப் பெண்ணுக்கு. பட்டி மன்றத்துப்பெருங்குரல் இவளுக்கு ஒவ்வாது. நன்பாட்டுப் புலவர்ச்சங்கம் ஏற்றுங்கள்’’என்று நீதியரசர் மு.மு.இஸ்மாயில் உரைத்தார்கள். ‘‘இவள் பெரிய சொற்செட்டுக்காரி. வாயைச் செலவு செய்ய மாட்டாள் கவியரங்கத்தை எழுதிவையுங்கள்.’’ என்று கம்பனடிப்பொடி சா.கணேசன், என் அருமைத்தந்தையார் கம்பவாணர் புதுச்சேரி அ.அருணகிரியிடம் சொன்னார்கள். எழுதித்தான் வைத்தனர். 1975 மார்ச்சு மாதம், மயிலம் முருகன் கோவிலில், மயிலம் பெரும் புலவர் ஆ.சிவசுப்பிரமணியம் தலைமையில் புதுவை வானொலி நிலையம் நடத்திய கவியரங்கம். அந்த அரங்கிலே என்னைக் கைப்பற்றிக் கொண்டது புதுச்சேரி கம்பன் கழகம். கம்பவாணர் அருணகிரிக்குச் செல்லப்பிள்ளையானேன்.
அதன்பிறகு ஏறத்தாழ இருபத்திரண்டு ஆண்டுகள் கம்பன் விழா. மேடைகள். எத்தனை ஆளுமைகள், பெரும் பாவலர்கள் அரியாசனத்தில் அரசரோடு என்னைச் சரியாசனமிட்டு வைத்தாள் தமிழ்த்தாய்.
கவியோகி சுத்தானந்த பாரதியார் கி.வா.ஜ, கவியரசு.கண்ணதாசன் வாலி, சுரதா, தமிழண்ணல், புலமைப்பித்தன் என்று இவர்களோடும், இளந்தேவன், முத்துலிங்கம், வைரமுத்து இவர்களோடும் என்பாட்டுப்பயணம். கவிக்கோ அப்துல் ரகுமான், புலவர்மணி,சித்தன்,இலக்கணப்பெரும்புலவர்,இரா.திருமுருகன், அரங்க சீனிவாசன், கம்பராமன் எனும் எஸ் கே ராமராசன், ம.வே.பசுபதி, சொ.சொ.மீ.சுந்தரம்,மரியதாசு இன்னும் இன்னும் எத்தனையோ வேங்கைகளோடு நானும் ஒரு சிறு புள்ளிமானாய்க் கம்பன் மேடைகளில். இது கம்பன் அணி.
பிற மேடைகளில் ஓர் அணி. மா.வ (வரதராஜன்), ஈரோடு தமிழன்பன், கவிக்கோ ஞானச்செல்வன், நா.காமராசன், மு.மேத்தா, மகாகவி அர சிங்கார வடிவேலன், மா.கண்ணப்பன், முத்துலிங்கம், பெரி. சிவனடியான், அரு.நாகப்பன் ச.சவகர்லால், வெற்றிப்பேரொளி, கடவூர் மணிமாறன், அரு சோம சுந்தரம் என்று பலர் தமிழ் பாடி இருந்தோம்.
எழுத்தாளர்களுடன்; தீபம். நா.பார்த்த சாரதி, சாண்டில்யன், விக்கிரமன், கோவி.மணிசேசகரன், ஸ்ரீ வேணுகோபாலன், ஏர்வாடி இராதாகிருஷ்ணன், அய்க்கண்.
அரசியல் கலவாத இலக்கிய மேடைகள்: மன்னை நாராயணசாமி, எல்.கணேசன், அமைச்சர் கா.காளிமுத்து, புதுவை அமைச்சர் சவரிநாதன், வானொலி / தொலைக்காட்சி இளசைசுந்தரம், தே.சந்திரன் இன்னும் மிகப்பல புலவர் பெருமக்களோடிணைந்து தமிழகமெங்கும் நானும் பாடவாய்த்தது என்தமிழால் என்ற உவகையும் பெருமிதமும் நிறைவும் மிக உண்டு.
தமிழ்க்கவிதை உலகில் பாரதிதாசன் பரம்பரை தொடங்கி புதுக்கவிதை, ஹைக்கூ வரை பல இயக்கங்களை நீங்கள் கடந்து வந்திருக்கின்றீர்கள். அந்த அந்த இயக்கங்களின் பார்வையாளராய் அல்ல சிறப்பான பங்களிப்பவராக இருந்திருக்கின்றீர்கள். இயக்கங்கள், அவற்றின் புகழ்பெற்ற படைப்பாளர்கள் பற்றிச் சொல்லுங்கள்
பாரதிதாசனின் எளிமையும், மொழி இனம் குறித்த விரிந்த பார்வையும் தற்போதயை துளிப்பா கவிஞர்களிடம் குறைவு என்று சொல்லலாம் .ஆனால் காலத்துக்கு ஏற்பச் சூழலியல் கோட்பாடுகளில் ஹைக்கூ தனியிடம் பெற்று இருக்கிறது என்றால் மிகையில்லை பெண்ணியம், இயற்கையழகு, சமுதாய நோக்கு முதலிய பார்வைகளில் ஹைக்கூ வீரியம் மிக்கதாகத் திகழ்கின்றது.
உங்களோடு பங்கேற்ற.கவிஞர்களில். பலர் திரைப்படத் துறையிலும் தடம் பதித்தவர்கள். உங்கள் பாடல்களில் எந்த சிறப்புத் தன்மை தனியிடத்தையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது?
சுரதா, கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து, முத்துலிங்கம் ஆகிய கவிஞர்களோடு பல அரங்கங்கள் கண்டிருக்கிறேன். கண்ணதாசன் இப்படிச் சொன்னார். ‘‘கவியரங்கம் ஒரு நிகழ்ததுக்கலை கவிஞனுடைய சொற்களை அவையோர் உடனே கைப்பற்றிக்கொள்ள வேண்டும். பாடநூல் செய்யுள் போல இருக்கக்கூடாது. நீ அதை மனங்கொள்ள வேண்டும்.’’ அதிலிருந்து எண்சீர் விருத்தம் எழுதுவதை விடுத்துச் சிந்துப்பாடல்கள் எழுதத்தொடங்கினேன். அவ்வகைப்பாக்கள் பெரிய வரவேற்பைப்பெற்றன.
புலமைப்பித்தன் சென்னை கலைவாணர் அரங்கில் இப்படிப் பாடினார்
‘‘பட்டுக்கோட்டை தந்த பாடமா – இப்படி
பாடுதல் எல்லோருக்கும் கூடுமா?
தட்டுப்படாத தமிழ்ச்சந்தமா -என்
தங்கையே உனக்கது சொந்தமா?
மஞ்சளும் சிவப்பும் தங்கைநீ அணிந்த
சேலையில் மட்டுமா சிந்திக்கிடந்தன
கொஞ்சும் உனது குளிர் தமிழ்ப்பாட்டிலும்
தொட்ட இடமெல்லாம் பட்டுத்தெறித்தன.”
உவமைக்கவிஞர் சுரதாவைப் பற்றிச் சொல்லாமல்முடியாது. தமிழ்க் கவிஞர்கள் இனியும் ஏழையாக இருக்கக்கூடாது எனக் கப்பல் விமானம் கடற்கரை தெப்பம் இவற்றில் எல்லாம் கவியரங்கம் நடத்துவார். அவ்வாறு எட்டுக்குடி தெப்பக்குளத்தில் நடந்த தெப்பக்கவியரங்கம் எனக்குச் சந்தத்தமிழ்க்கவிமணி என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. அத்துடன் திருக்குவளை வெற்றிப் பேரொளி என்ற நல்ல நண்பரையும் அறிமுகப்படுத்தியது.
வாலியும் வைரமுத்துவும், கையால் எழுதாமல் இதயத்தால் எழுதுபவர் என்று பாராட்டுவார்கள்.. அந்தப்பாட்டு வரிகள் இப்போது நினைவில் இல்லை.
தகுதியும் புலமையும் மிக்க நல்லோர் பலரிடம் வாழ்த்துப்பெற்றேன். எங்கள் புலவர் திருக்கூட்டம் மிகப்பெரிது. நினைவு களை விரிக்கின் பெருகும். விட்டு விடுகிறேன்.
இரு முதல்வர்களிடம் மாநில அளவிலான கவிதைப்போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறீர்கள். இரண்டு நிகழ்ச்சிகளையும் குறித்து சில பாடல்களோடு பகிரமுடியுமா?
1974ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தருமிக்குப் பொற்கிழி அளித்த திருவிளையாடல் விழாவில், கவிதைப்போட்டி நடத்தப்பட்டது. முனைவர் தமிழண்ணல், கவிக்கோ. அரு.சோமசுந்தரம் இருவருக்கும் முதற்பரிசு. எனக்கு இரண்டாம் பரிசு ரூபாய் ஐநூறு. தமிழக.முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்கள் பொற்கிழிக்கவிஞர் என்ற பரிசும் பட்டமும்.வழங்கினார்கள்
‘‘அழகர் மலையழகர் அருகிருந்து நீர்வார்க்கப் /
பழகு விழிமதுரம் பயிலப் புறம்நாணித் /
தழுவுகயற் கண்களினால் தரைபார்க்கும் மீனாட்சி /
எழுதெழில்சேர் சொக்கருடன்இங்கெழுந்து வந்தருளே”
என்ற பாடல் அரங்கை மதிமயக்கியது. அரங்கை மட்டுமல்ல கலைஞரையும் மதிமயக்கியது..
1981ல் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது அப்போது நடத்தப் பட்ட கவிதைப்போட்டியில் நாகை மீனவன் முதல்பரிசு. எனக்கு இரண்டாம் பரிசு. நடுவர்க்குழு பாவலரேறு ச.பாலசுந்தரம், ந.இராமநாதன், பி.விருத்தாசலம், பா.மதிவாணன். தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் கைகளால் பரிசு பெற்றுக் கொண்டேன். சுரதா தலைமையில் கவியரங்கம் அதில் …
“வானையளக்கிற கோபுரமாம். – கடல்
மீனை யழைக்கிற நீர்நிலையாம்
தேனை யளக்கிற சோலைகளாம் – எங்கள்
தீந்தமிழ்த் தஞ்சையைப் பாடுங்கடி.” .என்றும்
“வாலைச் சுழற்றி நாத்துருத்தி மணிகள் அசைய /
மலைகிடந்தாற் போலக்கிடக்கும் ஒருநந்தி/
புகழ்போற் கிடக்கும் ஒருவாயில். /
ஆலைப் பிழிவின் சாறாக அமுதம் ஊறுந் தேவாரம். /
மேலைக் கடல்போல் எம்வாசல் வீழ்ந்தே கிடக்கும் பேரகழி”
என்று இவ்வாறாகத் தஞ்சையை நான் புகழ் பரவியதும் எம் ஜி ஆர் மகிழ்ந்து பாராட்டியதும் மலரும் நினைவுகளாய் உவப்பூட்டும். அக்கவிதையை
“நூறு வரியென நீங்களிட்ட – இந்த
நோவாளிச் சட்டத்தை என்ன சொல்ல
ஆர்வம் கரைமீறிப் பொங்குதே – எனக்கு
ஆயிரம் பாட்டுப் பிறக்கிறதே.
தூவலில் மையும் துளித்துளியாய் – நான்
சுற்றிஉதறியும் புள்ளிகளாய் – என்
ஆவல் தடுப்ப நிறுத்துகிறேன் – நெஞ்சில்
ஆயிரம் பாடல் இருத்துகிறேன்.“
என்று நிறைவு செய்து தஞ்சை வாழ் மக்களைக் குளிர்வித்தேன்
உங்களுடைய மொழிநடை, பாட்டுப்போக்கு, கருத்தமைதி பற்றி ஒரு சிறு விளக்கம் தாருங்கள்.
கல்லூரி நாள்களிலிருந்தே நான். தனித்தமிழ் பற்றுடையவள். பாவேந்தரின் பாடல்களில் ஊறித்திளைத்தப் பயிற்சி, எளிய நடையில் என் பாட்டுநடை அமைய அடிப்படையாக அமைந்தது. சீறிப்பாயும் போர்க்குரல் யாப்புக்கட்டுக்குள் வழுவாது அமைதல் ஒர் சிறப்பு. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஆகிய ஏடுகள் வளர்த்த மொழிப்பற்றும் இனப்பற்றும் என் பாக்களில் அடித்தளம். பின் நாள்களில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தலைமையில் கவிதை பாடியதும், ம.இலெ.தங்கப்பா குடும்பத்தாரோடு என் வாழ்நாள் நட்பும், தமிழ் தந்த பெரும்பேறு என்பேன்.
கவிதைகள் இலக்கியம் தவிர நீங்கள் பலரால் போற்றப்படும் ஒரு தமிழாசிரியர். ஒரு புலவர் கல்லூரி மாணவியாக உங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களையும் நீங்கள் ஓராசிரியையாகப் பணியாற்றுகையில் நினைவில் நிற்கும் நிகழ்ச்சிகளையும் குறித்துச் சொல்லுங்கள்..
திருவையாறு அரசர் கல்லூரி நான் தமிழ் பயின்ற இடம். என் தமிழ்ப்பேராசை தீர்க்க முனைந்த இடம் திருவையாறு. பெரும் புலவர். வி.த.அரங்கசாமி, இலக்கண அரிமா ஹெச்.வெங்கட்ராமன், திருமுறை மாமணி சுவர்ண காளீச்சுரன், பேராசிரியர் ந.இராமலிங்கம் ஆகியோரிடம் தமிழ் பயின்றேன். கல்லூரி இறுதி ஆண்டின் போது எங்கள் பேராசான் தி.வெ.கோபால ய்யர் முதல்வராக எழுந்தருளினார்கள். நச்சினார்க்கினியமும், சேனாவரையமும்,சீவக சிந்தாமணியும் என்று முழுகி முழுகி முத்தெடுத்தோம். பாடப்பகுதிகளோடு நின்று விடாமல் அப்பாலும் படிக்கும் ஆவலைத்தூண்டி அவர்கள்தான் ஓரளவு தமிழைக் கரைத்துக் குடிக்க வைத்தார்கள் என்பேன்.
ஆசிரியராக என்னுடைய பணி மன நிறைவாகத்தான் இருந்தது. என் மாணவ மாணவிகள் தேனீக்கள் போல் மொய்த்திருந்தார்கள். இன்று முகநூலில் தேடித்தேடி வந்து அன்பு கொண்டாடுகிறார்கள். என் மாணவர்களனைவருமே எனக்கு அன்புப் பிள்ளைகள்தான். வாழ்க்கைக்காக பல இடங்களில் விலகி வேரூன்றியிருப்பினும் இன்று கண்டாலும், ஏதாவது ஒரு வடிவில் தொடர்பு கொண்டாலும் வந்து ஒட்டிக்கொள்ளுகிற அன்பை நான் எப்படி வரிசைப்படுத்துவேன்? ஒன்று செய்யலாம். எனக்கு மட்டுமன்றி உங்களுக்கும் பலருக்கும் தெரியும்படிப் பொது வாழ்வில் சிறந்து விளங்குகிற என் மாணவர்கள் ஒரு சிலரைச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பட்டுக்கோட்டை பிரபாகர், மருத்துவர்கள் அருள் பிச்சை நாராயணன் ,கங்கை கொண்ட சோழன்,மனநல மருத்துவர் ஆனந்தன்,வழக்கறிஞர் சங்கத்தலைவர் திலகவதி முதலிய என் மாணவமணிகள் குறித்துப்பெருமையடைகிறேன்.இன்னும் பலமாணவர்கள் பல்வேறு துறைகளிலும் திரைப்படத்துறையிலும் அரசோச்சுவது பெருமிதமே.
ஓர் ஐயம் அம்மா. எங்கள் தலைமுறைப் படிப்பில் பாடத்திட்டத்தைத் தாண்டி எதையும், அது எத்தனை உயரிய இலக்கியமாக இருப்பினும், படிக்கிற வழக்கம் அரிது. நீங்கள் படிக்கிறபோது எப்படி? பொதுவாக நாங்கள் மனப்பாடச் செய்யுள்களைத் தாண்டியதில்லை. அதையும் அந்தந்த வகுப்போடுக் கடமையாய் மறந்து விடுவோம். ஆனால் நீங்கள் குறிப்பாகப் பல சங்கஇலக்கியப் பாடல்கள், தேவாரம், பிரபந்தம், பாரதி, பாரதிதாசன் பாடல்கள் என்று இன்றும் வரிபிறழாது முழுப்பாடல்களையும் சொல்லுகிறீர்களே அது எப்படிச்சாத்தியமானது? நீங்கள் சிறப்புத் தமிழ்ப் பாட ஆசிரியர் குழுவிலும் இருந்துள்ளீர்கள். ஏதாவது சில நுணுக்கங்களை இன்றைய தலைமுறைக்குச் சொல்ல முடியுமா?
பாரதி பேரறிஞர் திருலோகசீத்தா ராமன் அவர்கள் எங்கள் கல்லூரி விழாவில் பாஞ்சாலி சபதம் என்று ஒரு பொழிவை நிகழ்த்தினார். ஓரு சொல் கூட வேறு சொல் இல்லாமல் பாரதியாரின் பாஞ்சாலி சபதம் முழுமையும் பேசி முடித்தார். ஓம் எனப் பெரியோர்கள் என்று தொடங்கி வாழ்க என்று அவர் முடித்தபோது நான் வியந்து உறைந்தேன். சிறு பிள்ளையில் இருந்து எனக்கு நல்ல நினைவாற்றல் உண்டு. எங்கள் முதல்வர் தி.வே.கோ. அந்தத் திறனை இன்னும் கூர்தீட்டினார் எனலாம். என்தந்தையார் எங்கள் முதல்வர் இருவருமே இந்தத்திறனுக்கு முழுமுதல் என்பேன்.
மரபுப்பா எழுதும் எனக்கு உரை நறுக்குகள் ஆகிய புதுக்கவிதைகளில் அளவற்ற ஈர்ப்பும் உண்டு. சொற்கட்டமைப்பும், யாப்பொழுங்கும், மரபுப்பாக்களுக்கு நிலை பேறு வழங்குபவை. அவ்வண்ணம் யாப்புக்கட்டுகளில் கவனம் செலுத்தும்போது சொற்கள் பரப்பு மிகுவதும் உண்டு. அசைநிலையான சொற்கள் மிகுதியாகி, அதனால் பாட்டு நீளமாய் சலிப்புக் கூட்டவும் வழியாகிறது. யாப்பதிகாரம் கற்றுக்கொடுப்பதாய் முற்படும் சில முகநூல் பதிவுகளில், பொருளாழம் கைவிட்டு, இலக்கணப்பிழையில் கவனம் செலுத்தி, உயிரோட்டமே இல்லாத சொற்கூட்டங்களை மரபுப்பா என்று மகிழ்வதைப் பார்க்கிறேன்.பழந்தமிழ்ப் பாடல்களைப் படித்துப் படித்து, அந்தச் சொல்லமைவும், ஓசை ஒழுங்கும், உள்வாங்கினாலன்றி மரபுப்பா முயற்சி செழுமை அடையாது என்பது என் கருத்து. அதே வேளையில் புதுக்கவிதையும், சொற்செட்டும், நறுக்கென்ற உரைவீச்சும், எனக்கு விருப்பம். இளைய தலைமுறை மிக அழகான கற்பனை களுடனும் சொல்லாடலுடனும் கவிதைகளைக் கையாளுவது மகிழ்ச்சியைத் தருகிறது. பார்வையின் கூர்மை புதிய தளங்களில் விரிவடைந்து வருகிறது.வடமொழிச் சொற்கலப்பைத் தவிர்த்து விட்டால் அது இன்னும் சிறப்படையும். தனித்தமிழ் என்றால் பாரந்தூக்குவது போன்ற ஓர் அச்சம் இளந்தலைமுறையிடம் உள்ளது. மொழிக்கூறுகளில் புழங்கப் புழங்க அந்தத்தடையும் அற்றுப்போகலாம்.மற்றபடி புறத்து ஒலிக்கும் போர்க்குரல்கள் வீரியம் மிக்கதாகவே விளங்குகின்றன.
இணையம் சமூக ஊடகம் இவை சமூகம் முழுதும் பரவலாகி விட்டன. படைப்பாளியும் படிப்பவனும் எளிதில் ஒருவரையொருவர் இனங்கண்டு தொடர்பு கொள்ள முடிகிறது. தமிழ் மாணவர்கள் மட்டுமன்றிப் பிறரும் பல நூல்களை வலையிலிருந்து எடுத்துப்படிக்கிற வாய்ப்புகள் பெருகியுள்ளன. இன்றைய கவிஞர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் நூல்கள், பயிற்சிகள் குறித்துச் சொல்லுங்கள்.
அறிவியல் வளர்ச்சியின் காரணமாக தமிழ் மொழியின் பரவல் அதிகமாகவே இருக்கிறது. எனக்கு இணையத் தொடர்புகள் வளர்ச்சி பற்றி அதிகம் தெரியாது என்று நேர்மையோடு ஒப்புக்கொள்கிறேன். முகநூல் வாயிலாக பலருடைய அறிமுகம் கிடைத்திருக்கிறது. குழுமங்கள் தேடித் தேடி அழைக்கின்றன. விருதுகள் கொடுத்துக் கொண்டாடுகின்றன. தம்பி நெப்போலியன் நிறுவிய கவியுலகப் பூஞ்சோலைக் குழுமம், பிரான்சின் தமிழ்நெஞ்சத்தை, என்னிடம் சேர்த்தது. ஒரு மீள்பார்வையாக என் இலக்கியப்பயணத்தை நினைவுகூரக் கவிமுகில் அமின் அவர்கள் பணித்தது மகிழ்ச்சிக்கும் நன்றிக்கும் உரியது. கவியுலகப்பூஞ்சோலைக்குழுமம் திருவள்ளுவர் வி்ருது, தமிழ்த்தாய் விருது, என்று சீராட்டியது. உலகப்பாவலர், தமிழன்னை, தமிழ்ப்பேரவை சங்கப்புலவர் விருதளித்து மணிமுடி சூட்டி மகிழ்ந்தது. நிலாமுற்றம் குழுமம். வாழ்நாள் சாதனையாளர் என்று வரிசை வழங்கியது. இளைஞர் படை என் கருத்தீடுகளை மதித்து மகிழ்ந்து ஏற்கிறது.
எல்லார்க்கும் நான் சொல்வது ஒன்று தான். படிக்கப் படிக்கவே தமிழ் நெஞ்சப்புலத்தில் பதியமாகும். எந்த வடிவாயினும் என்ன, கதையோ, கட்டுரையோ, கவிதையோ, நாடகமோ, இசையோ அவை தமிழ். தமிழோடு உறவாகுங்கள். தமிழ்ப் புலம் அத்துணைப்பெரியது அள்ளியும் எடுக்கலாம். கிள்ளியும் எடுக்கலாம்.
நான் வெள்ளி செவ்வாய் கோவிலுக்கு போகும் பக்திமான் அல்ல. ஆனால் தமிழே நான் கும்பிடும் சாமி. திருமுறைகளிலும் பிரபந்தத்திலும் திருவருட்பாவிலும் குமர குருபரர் மீதும் நெஞ்சம் உருகாத தமிழ் இல்லை. குணங்குடியாரும் தாயுமானவரும், தேம்பாவணியும், இரட்சண்ய யாத்திரிகமும் படித்துச் செழித்தது தமிழ்நெஞ்சம். பாவேந்தருக்கும் அவ்வாறே. தோய்ந்து உருகும்.பாவேந்தர் பாடல்களில் உயிரையே வைத்திருக்கும் நான் திருநெறிய தமிழ்ப் பாடல்களிலும் உயிரை வைத்து இருக்கிறேன். இதைத்தமிழ்த்தெய்வ வழிபாடு, சமயவழிபாடு அன்று, என நான் சொல்வது தமிழ்க்காதல் விளைப்பதற்காகவே.
உங்களது காலத்தில் பெண்கள் பொது மேடைகளில் பங்கேற்றது குறைவுதான் என்று கருதுகிறேன். அச்சூழலில் உங்கள் வாழ்க்கைத்துணைவர் உங்களுக்களித்த ஊக்கம், அனுமதி குறித்துச் சொல்ல முடியுமா?
ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக அரங்கு களில் பெண்பாலர் பங்களிப்புக் குறைவு தான். அதிலும் பாட்டரங்குகளுக்கு பெண்பாவலர்கள் நாங்கள் ஓரிருவரே.
சவுந்தரா கைலாசம், காந்திமதி, சரஸ்வதி இராமநாதன், இளம்பிறை மணிமாறன், குடியாத்தம் ருக்மணி, உமையாள் முத்து, அரசு மணிமேகலை, குருவம்மாள், பொன்மணி வைரமுத்து, ஆண்டாள் பிரியதர்ஷினி, சாரதா நம்பி ஆரூரன்,தாமரை போன்ற பெண் ஆளுமைகள் பங்கேற்புச் செய்தார்கள்.
என் துணைவர் அமரர் வே.பால சுப்பிரமணியன் என் புகழ்ப்பயணத்திற்கு உற்ற துணை என்பதை நினைவு கூர்கிறேன்.எனக்குச் சேர்ந்த புகழ் மாலைகள் எல்லாம் அவருக்குச் சூட்டுகிறேன். அவர் மறைந்து பிறகு மூடிவைக்கப்பட்ட எனது எழுதுகோல் இப்போதுதான் முப்பத்திரண்டு ஆண்டுகள் பிறகுதான் மூடி திறக்கப்பட்டு இருக்கிறது.
வேறு ஏதாவது சொல்ல விரும்பினாலும் சொல்லுங்கள். உங்கள் கவிதைகள் அச்சேறாமை தமிழுக்கு இழப்பு என்று கருதுகிறேன். இருக்கும் கவிதைகளைத் தொகுத்துப் பன்மணித்திரள் போன்று ஒருதொகுப்பாவது நீங்கள் வெளியிடவேண்டும் எனப்பணிவோடு வேண்டுகிறேன். குறித்துச் சொல்ல முடியுமா?
என்னுடைய கவிதைகள் காற்றில் மிதந்து செவியில் விழுந்து முடிந்து போயின என்பது இப்போது வருத்தம்தான். அந்தப்புகழ் வெளிச்சத்தில் நான் கண்கூசி நின்றதுமில்லை. வாய்ப்புகள் கேட்டு நின்றதுமில்லை.வருவாய் பெற்றுச் செழித்ததும் இல்லை. கவிதைகள் அச்சேறவில்லை என்று கவலைப் படுவதில்லை.
அதுபோலவே முனைவர் பட்டம் வாங்க முனையவில்லை. பள்ளித் தமிழாசிரியை பணியை நிறைவாய் செய்ய அப்பட்டம் தேவையாயில்லை என்பதோடு அதற்கு ஆகும் காலம் பொருட் செலவுக்கு ஈடான சிறப்பு ஊதியம் ஏதும் அரசுக் கல்வித்துறை அளிக்கவுமில்லை. அதனால் நான்மட்டுமன்றி என்னுடைய தலைமுறைத் தமிழாசிரியர்களில் பெரும் பாலானோர் முதுகலைப் பட்டத்தோடு நிறுத்திக் கொண்டோம். கற்பதையல்ல, பட்டங்களைச் சேர்த்துக்கொள்வதை என்று சொல்லத்தேவையில்லை
நல்ல எழுத்துகளில் எப்போதும் மெய் மறந்து போகிறேன். அதனால் பழந்தமிழ்ப் பாவலன் முதல் முகநூல் கவிஞன் வரை நான் எல்லார்க்கும் சேக்காளிதான். புதிதாய் எழுதும் இளம்பிள்ளைகளை குறை கூற மனம் வருவதில்லை. குடம்பாலுக்கு துளி மோர் போல எங்களைத் தூக்கிச் சாப்பிடும் இளந்தலைமுறையைக் கண்டு வியந்துதான் போகிறேன்.
முகநூல் வழியாக எனக்குக்கிடைத்த முகமறியா உறவுகள் பல. அதன்வழிப்பெற்ற அரிய நண்பர்களுள் முனைவர் நளினிதேவி அம்மா அவர்களும் கவிஞர் பொற்கைப்பாண்டியன் அவர்களும் குறிப்பிடத் தக்கவர்கள். நளினி தேவி அம்மாவை அறிமுகம் செய்த ஆரூர் சுப்புவிற்கு நன்றி.
எங்கள் குடும்பமே ஓர் ஆலமரம் தான். ஐந்து பிள்ளைகள் இரண்டு பெண்கள் என்று என்மக்கள்எழுவர். பாவேந்தன், இளம்பாரதி, தமிழ்ச்சிட்டு (தென்றல் கவி) பரதநம்பி, பாரிவேள், பெர்னாட்ஷா, தங்கப்பாப்பா..ஒவ்வொருவரும் ஒவ்வொருத் துறையில் திறம்மிக்கவர்கள். என் மருமக்கள்மாரும் அன்பும் திறமையும் மிக்கவர்கள்.. என் அம்மா, நான் பிள்ளைகள், மருமக்கள், பேரர்கள் என்று எங்கள் இல்லம் பெரிய ஆலமரம்தான் இந்த மரத்தில் கூடடையும் தம்பிகள் தங்கைகள், உறவுகள், நட்புகள் என்று பெருங்கூட்டமே என்னோடு. இவர்கள் மட்டுமன்றி தமிழ்நெஞ்சங்கள் அனைத்துக்கும் நான் உறவுதான். மேலும் தமிழ்ச் சொந்தங்களையும் அன்போடு அழைக்கிறேன்.
எக்காலத்திலும் வீழ்ந்துவிடாதென்னை எல்லாவகையிலும் சிறகுகள் முளைத்த வளாகவேத் தாங்கிய நம் தமிழுக் கொரு வாழ்த்துச் சொல்லி முடிப்போம்
சோற்றுக் கவலை ஆயிரமாய் – நான்
சோர்ந்து போகும் பொழுதெல்லாம்
ஆற்றுப்படுத்த ஓடி வரும்-என்
ஆசைத்தமிழை வணங்குகிறேன்
துன்பக்கேணி உள்ளழுந்தி – நான்
துடித்துக் கிடக்கும் பொழுதெல்லாம்
அன்புத்தோணி யாயிருக்கும் – என்
அன்னைத் தமிழை வணங்குகிறேன்.
அலைமேல் துரும்பாய்த் தவிதவித்தே – நான்
அலமந் திருக்கும் பொழுதெல்லாம்
தலைமை எனக்கு வழங்குகிறாய் – என்
தாயைத் தமிழை வணங்குகிறேன்.
[ இந்த நேர்காணலை சிறப்பாக்க உதவிய புலவர் தங்க அன்புவல்லி அவர்களின் பிள்ளைகள் தமிழ்ச்சிட்டு சுந்தரபாண்டியனுக்கும், பாவேந்தனுக்கும் தமிழ்நெஞ்சம் ஆசிரியர் குழுவினர்களின் நன்றி. ]
17 Comments
தனியெழிலன் · ஏப்ரல் 30, 2020 at 19 h 45 min
தங்கள் நேர்காணலை படித்தேன் அம்மா. தமிழாகவே வாழ்ந்திருக்கிறீர்கள். உங்களிடம் நான் கற்க வேண்டியவை எண்ணிலடங்காவிருக்கின்றன அம்மா… உங்கள் கைப்பிடித்து இனி கற்கிறேன் அம்மா. வாழ்த்தி வணங்குகிறேன்.
சிறப்பான நேர்காணல். தமிழ்நெஞ்சத்திற்கு வாழ்த்துகள்
தென்றல் கவி · மே 1, 2020 at 17 h 40 min
மிகவும் சிறப்பு அய்யா.இனிய நன்றிகள்… எனது தாய் என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்
கா சதாசிவம் · மே 1, 2020 at 18 h 03 min
மிக மிக இனிமையான நிகழ்வுகளை, சமூகத்திற்கும், தமிழ் சமுதாயத்திற்கும் ஆற்றிய பணிகளுக்கு காலம் இந் நாளில் திரு தமிழ்நெஞ்சம் மூலம் சிறப்பு செய்துள்ளது..
பாலாக, தயிராக, மோராக, வெண்ணெய்யாக, நெய்யாக மாறியுள்ளது.. மகிழ்ச்சி.. குடம் பாலுக்கு துளி மோர்.. அருமையான வரிகள்..
இனிய வாழ்த்துக்கள்.
Kohila Polikai · மே 1, 2020 at 18 h 06 min
நாம் அடைந்திட முடியாத் தமிழ்த் திறன் கொண்ட வைரமான அம்மாவுக்கும், ஆளுமைகளோடு வைரங்களாய் மின்னுபவர்களை ஆகாயத்தில் சூரியனாக்கும் தமிழ்நெஞ்சம் ஐயாவின் அரும்பணிக்கும் வாழ்த்துகள்!
Thirumalai P Sivan · மே 1, 2020 at 18 h 07 min
தமிழ் தாய்க்கு வணக்கம்..
ஐயா தமிழ்நெஞ்சம் அவர்களின் தமிழ்ச் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்
தங்க அன்புவல்லி · மே 1, 2020 at 18 h 10 min
அடிகளார் பாவாணர் மு மு இசுமாயில் எங்கள் ஆசான் தி வே கோ யாவருடனும் மீண்டும் வாழ்கிறேன். நன்றி
Pavendhan Namachivayam · மே 1, 2020 at 18 h 13 min
இது தான் முதல் முறை உங்களயும், உங்கள் குடும்பத்தையும் பற்றி அறிய பெற்றேன். அளவில்லா மகிழ்ச்சி அம்மா .
நீண்ட நெடிய வரலாறு. என் தமிழாசான் கலைஞரை மதிமயக்கிய உங்கள் கவிதை அருமை அம்மா. யாருக்கு வாய்க்கும் இந்த பேரு. உங்கள் அன்ணாவைப் ( அய்யா அ.த.ப) பல இடங்களில் நினைவு கூர்ந்தது மேலும் சிறப்பு. நீடூழி வாழ வேண்டும் நீங்கள்..
அரும்பணி செய்யும் தமிழ்நெஞ்சம் ஐய்யாவுக்கு வாழ்த்துகள்!
Anbuvalli Thangavelan · மே 1, 2020 at 18 h 16 min
உளமார்ந்த நன்றிகள் தமிழ்நெஞ்சம் மின்னிதழ் அமின் அவர்கட்கும் என் அன்புத்தமிழ்ச்சுற்றங்களுக்கும்
Bala Thiyakarajan · மே 1, 2020 at 18 h 20 min
தமிழ் பெருந்தகையான அம்மாவினை சந்திப்பதற்கும், பேசுவதற்கும் நல்வாய்ப்பினை நல்கிய இறைவனுக்கும், தென்றல் கவி சகோதரி அவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்…
அன்புத் தமிழால் அரவணைக்கும் பண்பின் சிகரம் அம்மா, எனது முதல் கவிதைத் தொகுப்பிற்கு அம்மா அவர்கள் அணிந்துரை எழுதியதை பாக்கியமாக கருதுகிறேன்,
அதிகம் கவியரங்கினை கண்டிராத எனக்கு அம்மாவின் ஒவ்வொரு அசைவிலும் தமிழன்னை இரண்டற கலந்திருப்பதைக் கண்டும் சபையினை அரவணைத்துக் கொண்டு சென்றதைக் கண்டும் வியப்பாக இருந்தது.
ஆயிரக் கணக்கில் பல கவியரங்களுக்கு தலைமையேற்று தமிழன்னைக்கு அழகுசேர்த்தும்,பல மாணவர்கள் நாவில் தமிழன்னையை அமர செய்தும் தமிழ்சேவையை செய்துவரும் அம்மாவினை வணங்குகிறேன்.எல்லாம்வல்ல இறைவன் அம்மாவுடன் என்றும் துணையிருக்க வேண்டிகிறேன்.
அம்மா அவர்களின் நேர்காணலை படிக்க நல்வாய்ப்பினை நல்கிய கண்டம்விட்டு கண்டம் தமிழுக்காய் இவ்வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கும் இனிய தமிழறிஞர் தமிழ்நெஞ்சம் ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல தெரிவித்து வணங்கி மகிழ்கிறேன்.
பால தியாகராஜன், கோவை.
Anandh Umesh · மே 2, 2020 at 9 h 37 min
சிறப்பான தொகுப்பு.. தமிழ்நெஞ்சத்திற்கு நன்றி
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் இத்தகைய பெரியோர்களால் வருங்காலத்தில் மேலும் மேலும் தமிழின் பெருமை ஓங்கிக் கொண்டே இருக்கும்..
அம்மாவை நேரில் காணும் பாக்கியம் பெற்றேன்.. அவரின் மென்மையான பேச்சும்.. இக்கட்டான நேரத்தில் அவர்கள் எடுக்கும் சிறப்பான முடிவுகளும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது..
வாழ்த்துகள் அம்மா.. இன்னும் பல பூக்களை உதிர்க்கட்டும் உங்கள் கரங்கள்.
பாவேந்தன் · மே 2, 2020 at 14 h 50 min
நேர்காணல் சிறப்பு. நன்றி. ஐயா. கலைஞரிடம் பரிசு வாங்கிய படமிருக்கிறது. அதேபோல் தமிழ்ப்பல்கலைக்கழக விழாவில் முதல்வர் எம்ஜியாரிடம் பரிசு வாங்கிய படமும் சேர்த்தால் சிறப்பாயிருக்கும் . ‘பெய்யெனப்பெய்யும் மழை’ என்ற தலைப்பு நேர்காணலுக்குப் பொருந்தியதாய் இல்லை என்று எண்ணுகிறேன். ஆவன செய்ய வேண்டுகிறேன் நன்றி.
Bernatzha Balasubramanian · மே 2, 2020 at 20 h 08 min
Thank you so much for publishing my mother’s interview.behalf of our family I would share my gratitude from all of us. We waited this deserved recognition ..Thanks to Tamil Nenjam
.
ஏடி வரதராசன் · மே 4, 2020 at 15 h 49 min
தெய்வத் தமிழொன்றைத் தேர்ந்து வினவபதில்
தெய்வம் தமிழென்றே தேர்ந்துரைக்க – தெய்வமென
எங்கேனும் ஒன்றிருந்தால் ஏகக் குழப்பம்தான்
இங்கிரண்டைப் பார்த்தே இளைத்து.
।
அம்மாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
தமிழ் தம்பி · மே 4, 2020 at 15 h 51 min
தஞ்சை தந்த தன்னிகரற்ற தங்கமே
தங்கத் தமிழின் தனித்துவ தணலே
தமிழை தாராளமாய் தருமியாய் தந்தே
தரணியில் தளராது தழைத்தோங்கு தமிழன்னையே…
வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன் தாயே…
Jayanthi nagarajan · மே 6, 2020 at 13 h 25 min
வணக்கம். நேர்காணல் மிக அருமை.அம்மையாரின் அழகு தமிழ் ஆளை மயக்குகிறது.நேர்மை வியக்க வைக்கிறது.தன்னடக்கம் பாடமாக விளங்குகிறது.அன்னார் நினைவு கூர்ந்த பட்டிமன்றப் பேச்சாளர்களின் பேச்சுக்களை என் மாணவப் பருவத்தில் கேட்டதை எண்ணிப் பார்க்கும் வாய்ப்பை நல்கியது.மனம் இன்றைய பட்டிமன்ற தலைப்புக்களை எண்ணி வருந்தியதைத் தவிர்க்க {முடியவில்லை.அம்மையாரின் பாதம் தொட்டு வணங்கி இதற்கு வாய்ப்பளித்த தமிழ் நெஞ்சத்திற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
அன்புடன்
முனைவர் ஜெயந்தி நாகராஜன்
பாரதி பத்மாவதி · மே 11, 2020 at 6 h 32 min
இனிய வணக்கம் அம்மா,
உங்களுடைய நேர்காணலை படித்ததின் மூலம் உங்களைப் பற்றியும் தமிழறிஞர்களுடனான தொடர்பு பற்றியும் அறிந்து கொண்டேன் ‘உங்களின் தொண்டு தமிழுக்கு விருந்து’ என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு வணங்குகிறேன் தாயே.
தென்றல் கவி · ஜூலை 4, 2020 at 4 h 20 min
எனது தாயாருக்கு வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் எனது அன்பினிய நன்றிகள் பல..எனது தாயார் இவரென கூறுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்… என்ன தவம் செய்தேனோ அம்மா உனது வயிற்றில் வந்து உதித்தமைக்கு நான் என்ன தவம் செய்தேனோ.😢😢💐💐👍👍💐💐💐💐💐💐