தொடர் – 8

இதுவரை 3 இயைபுகளைப் பார்த்தோம்

இப்போது மற்ற 5 இயைபுகளையும் காண்போம்

  1. ஒருஉ இயைபு

ஓரடியில் உள்ள நான்கு சீர்களில்

ஒன்று மற்றும் நான்காம் சீர்கள் இயைபு பெற்றிருப்பின் அது ஒருஉ இயைபு எனப்படும்

எடுத்துக்காட்டு  1.

எழுஞாயிறின் ஒளியாயெழு
தமிழைத்தினம் தொழுதேத்திடு
விழுதாயிரு தமிழ்மாமலை
உளமேற்றியே தொழுதேத்திடு

மேற்கண்ட பாடலில் எழுக 1 மற்றும் 4 ஆம் சீர்களில் வந்துள்ளதால் ஒருஉ இயைபு ஆயிற்று

எழுஞாயிறின் – தொழுதேத்திடு
விழுதாயிரு – தொழுதேத்திடு

இங்கு ஓசையால் இயைபு ஆயிற்று

எடுத்துக்காட்டு 2.

நிழலே இனியத னயலது கடலே

( நன்றி. யாப்பெருங்கலக் காரிகை)

  1. கூழை இயைபு

இது முதல் மூன்று சீர்களில் ஒரே இயைபு வருவது ஆகும்

மயிலே குயிலே ஒயிலே வருக
உயிரே எழிலே பொழிலே வருக

மேற்கண்ட அடிகளில் வருக மற்றும் தருக 1,2 மற்றும் 3 ஆம் சீர்களில் வந்து கூழை இயைபு ஆயிற்று.

  1. மேற்கதுவாய் இயைபு

இது 1, 3 மற்றும் 4 ஆம் சீர்களில் ஒத்த இயைபு உள்ளதுவாகும்.

1

எழுக தமிழா எழுக எழுக
தொழுக தமிழைத் தொழுக தொழுக

2.

வாழ்க தமிழா வாழ்க வாழ்க

மேற்கண்ட அடிகளில் எழுக தொழுக வாழ்க போன்றவை மேற்கதுவாய் இயைபு ஆயின.

  1. கீழ்க்கதுவாய் இயைபு

இது 1, 2 மற்றும் நான்காம் சீர்களில் ஒத்த இயைபு கொண்டது ஆகும்.

எடுத்துக்காட்டு

எழுக எழுக தமிழா எழுக

தொழுக தொழுக தமிழைத் தொழுக

  1. முற்றியைபு

இது அனைத்து சீர்களிலும் ஒரியைபு கொண்டது

1.

எழுக எழுக தொழுக தொழுக
எழுக தமிழின் மகனாய் எழுக
தொழுக தமிழின் திருவடி தொழுக

2.

வருக வருக உருக வருக
வருக தமிழா கதிராய் வருக
உருகும் தமிழின் அழகாய் வருக

3.

மயிலே குயிலே ஒயிலே எழிலே
மயிலின் அழகாய் ஆடி வருக
குயிலின் குரலில் பாடி வருக

முதல் எடுத்துக்காட்டில் முதல் அடியில்

உள்ள எழுக தொழுக ஆகிய இரண்டும் முற்றியைபு.

இரண்டாவதில் வருக உருக முற்றியைபு

மூன்றாவதில் முதலடியில் அனைத்து சீர்களும் லே என முடிவடைந்ததால் முற்றியைபு ஆயிற்று

இதுவரை எதுகை மோனை இயைபு ஆகியவற்றைப் பார்த்துள்ளோம். இனிவரும் தங்கள் கவிதைகளில் இவற்றைப் பயன்படுத்தி எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.

குறிப்பு

எதுகையில் அடிஎதுகை
மோனையில் பொழிப்பு மோனை
இயைபில் அடியியைபு
இவை மூன்றும் இருந்தாலே கவிதைகள் சிறக்கும்

மற்றவற்றைத் தேவையான இடங்களில் பயன்படுத்துங்கள்
வலிய திணிக்க வேண்டாம்

பாரதியின் ஒரு வெண்பா

தானே பரம்பொருளாம் தன்னிளசை யெட்டீசன்
தேனேய் கமலமலர்ச் சீரடியே – யானேமுன் செய்தவினை தீர்த்துச் சிவானந்தம் பொங்கியருள் எய்திடவும் செய்யும் எனை

அடிஎதுகைகள்

  1. தானே – தேனே

2.செய்தவினை- எய்திடவும்

பொழிப்பு மோனைகள்

  1. தானே- தன்னிளசை
  2. தேனேய் – சீரடியே ( தே – சீ மோனையாகக் கருதப்படும் )
  3. செய்தவினை – சிவானந்தம்
  4. எய்திடவும் – எனை

கண்ணதாசன் கவிதை

காட்டினுள் தேடித் தேடி
கற்பகத் தருவை கண்டோம்
வீட்டினுள் தேடித் தேடி
விளக்கையோ ரிடத்தில் கண்டோம்
ஏட்டினுள் தேடித் தேடி
இணையிலாக் கவியை கண்டோம்
நாட்டினுள் தேடு கின்றோம்

நாயக நின்னைக் காணோம்

எதுகை

காட்டினுள்
வீட்டினுள்
ஏட்டினுள்
நாட்டினுள்

மோனை

காட்டினுள் – கற்பகத்
வீட்டினுள் – விளக்கை
ஏட்டினுள் – இணையிலா
நாட்டினுள் – நாயக

இயைபு

தேடித் தேடி
கண்டோம்

பாரதிதாசன் பாடல்

இனிமைத் தமிழ்மொழி எமது – எமக்(கு) இன்பம் தரும்படி வாய்த்தநல் அமுது கனியை பிழிந்திட்ட சாறு – எங்கள்

கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு தனிமைச் சுவையுள்ள சொல்லை -எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்ட தில்லை

நனியுண்டு நனியுண்டு காதல் -தமிழ் நாட்டினர் யாவர்க்கு மேதமிழ் மீதில்

எதுகை

இனிமை
கனியை
தனிமை
நனியுண்டு

மோனை

இனிமை  – இன்பம்
கனியை – கதியில்
தனிமை – தமிழினும்
நனியுண்டு- நாட்டினர்

இயைபு

எமது – அமுது
சாறு – பேறு
சொல்லை – தில்லை
காதல்- மீதில்

எனது பாடல்

எழுக தமிழா கதிராய் எழுக
எழுக தமிழா விழுதாய் எழுக
எழுக தமிழா நிலவாய் எழுக
எழுக தமிழா ஒளியாய் எழுக
எழுக தமிழா் விழியாய் எழுக
எழுக தமிழா மலையாய் எழுக
எழுக தமிழா அழகாய் எழுக
எழுக தமிழா அரியாய் எழுக
எழுக சோழர் புலியாய் எழுக

அடுத்து வேறொரு தகவலோடு சந்திப்போம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »