‘‘கல்கியோட அலையோசை கிடைச்சா வாங்கிட்டு வாங்க சார்…’’

ரெங்கா வந்து நூறு ரூபாய்த்தாளை கொடுத்தான். கிளம்பும் அவசரத்திலிருந்த சிவராமன் அதை வாங்கி வைத்துகொண்டு தலையாட்ட,

‘‘கல்கியோட எல்லா நூல்களையும் படிச்சிட்டேன், இந்த அலையோசையை தவிர. அலையோசை அருமையான நாவல்னு கேள்விப்பட்டிருக்கேன். படிக்க ணும்னு ரொம்ப நாளா ஆசை’’ என்ற ரெங்கா,

‘‘இருவத்தஞ்சு கடைக்குமேல போட்டி ருக்கானாம். ஏதாவது ஒரு கடையில புத்தகம் நிச்சயம் கிடைக்கும்’’ என்று கூறிவிட்டு கட்டைகள் ஊன்றி நகர்ந்து போனான்.

சிறுவயதில் போலியோ வந்து இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டபிறகு கட்டைகளையே கால்களாக பாவித்து நடந்துவரும் ரெங்கா சரியான புத்தகப்புழு.

பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து ஒரு கேள்வி கேட்டால் பட்டென்று பதில் சொல்லுவான். அவனுக்கு அசோக மித்திரனும், கி. ராஜநாராயணனும் அத்துப்படி.

சொந்தமாக ஒரு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவன் அதில் வரும் வருமானத்தில் முக்கால்வாசி புத்தகங்கள் வாங்குவதற்கே செலவு செய்வான்.

‘‘வீடு நெறைய புத்தகங்களை அடுக்கி வச்சிருக்கான். புத்தகம் வாங்குற காசை சேர்த்து வச்சா இல்லாத நேரத்துக்கு உதவும். சொன்னா கேட்கமாட்டேங்கிறான்’’என்று அவனுடைய அம்மா புலம்பும்போது ரெங்கா,

‘‘ஒருநல்ல புத்தகம் திறக்கப்பட்டால் சிறைச்சாலையின் கதவு மூடப்படும்’’ என்று சொல்லி சிரிப்பான்.

‘‘நீங்கதான் எம்புள்ளைக்கு எடுத்து சொல்லணும்’’ என்று அந்தம்மாள் சொல்லும் போது சிவராமனால் எதுவும் சொல்ல முடிந்ததில்லை. ஒரு காலத்தில் அவனும் புத்தகப் பிரியனாக இருந்தவன்தான்.

ரெங்காவைப்போல அவனும் சுவாசிப்ப தற்கு பதிலாக வாசித்து நாட்களை நகர்த்தியிருக்கிறான். திருமணம், குழந்தை, குட்டி என்றானபிறகு வாசிப்பில் நாட்டம் குறைந்து போனது. குடும்ப பிரச்சனைகளை கவனிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது.

மளிகை, பால், ரேஷன், கரண்ட் பில், ஸ்கூல் பீஸ் என்று வாங்குகின்ற சம்பளம் மொத்தமும் பல கூறுகளாக பிரிந்துபோக, புத்தகம் வாங்குவதற்கென்று ஐந்து பைசாகூட மிஞ்சவில்லை. அதனாலேயே சிவராமனுக்கு வாசித்தல் மீது அக்கறை இல்லாது போய்விட்டது.

இருந்தாலும் ஒரு அலமாரி நிறைய புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறான். ஒருகாலத்தில் அவனும் ஒரு படிப்பாளி என்பதற்கான ஞாபகத்தின் மிச்சங்கள் அவை. அதிலிருந்து ஏதாவது ஒரு புத்தகத்தை எப்போதாவது எடுத்து புரட்டி பார்ப்பான்.

ஏற்கனவே படித்த புத்தகங்கள்தாம். இருந்தாலும் பக்கங்களை புரட்டும்போது மனத்தில் பழைய நினைவுகள் ஞாபக அலைகளாக புரளும். சிவராமனிடம் ஒரு பழக்கமுண்டு. புத்தகங்களை இரவல் தரவே மாட்டான்.

‘‘நீ ங் க தா ன் இ தை யெ ல் லா ம் படிக்கறதே யில்லையே. பேசாம எல்லாத்தையும் பழைய பேப்பர்காரன்கிட்ட போட்டுடவா…?’’

புத்தகங்கள் வெறும் காகிதங்களின் கோர்வையே என்ற எண்ணம் கொண்ட மாலா கேட்டபோது சிவராமன் பற்களை கடித்தான்.

‘‘ஞான சூன்யம். அதுல கையை வச்சே கொன்னுடுவேன். அதெல்லாம் என் சொத்து. புதுசா வாங்கித்தான் படிக்க முடியலை. வாங்கினதையாவது ஒழுங்கா வச்சிப்போமேன்னு பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். நீ ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிடாதே’’ என்று கத்த, தூசு தட்டுவதற்காககூட புத்தகங்களை தொடாத மாலா எரிச்சலோடு நகர்ந்தாள்.

‘‘லைப்ரரியில மு.வவோட கரித் துண்டு இல்லையாம். அது தெரியாம தேடித்தேடி அலுத்துட்டேன்’’என்று ரெங்கா ஒருநாள் சொன்னபோது சிவராமன் வாயை திறக்கவில்லை.

‘‘கரித்துண்டு எங்கிட்ட இருக்கு. எடுத்துட்டு போய் படிச்சிட்டு தாயேன்’’ என்று சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. புத்தகத்தை வீணாக்கிவிடுவானோ என்ற பயம்.

‘‘நம்ம ஊர் திடல்ல எக்ஸிபிஷன் நடக்குது. ஞாயித்துக்கெழமை பையனை கூட்டிட்டு போகலாம்ங்க..’’ என்று மாலா நச்சரிக்க, சிவராமன் வேறுவழியின்றி சரியென்றான்.

மாதக்கடைசி. கையில் ஐந்நூறு ரூபாய் தான் இருந்தது. ஆனால் எக்ஸிபிஷனை பார்த்தபோது பத்தாயிரம் கொண்டு வந்தாலும் கையை கடிக்கும் என்று தோன்றியது.

ஒருபக்கம் பிளாஸ்டிக், எவர்சில்வர் பாத்திரக் கடைகள், இன்னொரு பக்கம் குழந்தைகளை கவரும் ஜெயின்ட் வீல், ட்ரெயின் வகையறாக்கள். திடலின் தென்கோடி மூலையில் வரிசையாக புத்தகக்கடைகள். சிவராமன் அதை நோக்கி செல்ல எத்தனிக்க, மகன் தடுத்து நிறுத்தினான்.

‘‘ராட்டினம் சுத்தணும்ப்பா..’’

‘‘புத்தகம் வாங்கிட்டு வந்து சுத்தலாம்.’’

‘‘என்னங்க நீங்க, புத்தகக்கடை எங்கே போயிடப்போவுது. மொதல்ல டிக்கெட் வாங்கி பையனை ராட்டினத்துல ஏத்தி விடுங்க’’ என்று மாலா நச்சரிக்க, சிவராமன் டிக்கெட் கவுன்டரை நோக்கி போனான்.

டிக்கெட் விலையை கேட்டபோது மயக்கம் வந்தது. அதற்காக வாங்காமல் வந்தால் மகன் விடுவானா… அவனை சமாளித்தாலும் மாலாவை சமாளிக்க முடியாதே. சிவராமன் அரை மனதோடு டிக்கெட் வாங்கி கொண்டு வந்தான்.

‘‘ஒரு டிக்கெட் நூறு ரூபாயாம் மாலா…’’

‘‘அவ்ளோதானா…’’

மாலா எந்த பாதிப்புமில்லாமல் கேட்டாள். சிவராமன் முகத்தில் ஈயாடவில்லை. மகன் ராட்டினத்தில் கையாட்டி கும்மாளமிட்டதை அவனால் ரசிக்கமுடியவில்லை.

அடுத்ததாக மிளகாய் பஜ்ஜி கடை, அதையொட்டி ஐஸ்க்ரீம் கடை. அதை யெல்லாம் தாண்டி வந்தபோது ஐந்நூறு , நூற்றியைம்பதாகியிருந்தது.

பஞ்சுமிட்டாயோடு வந்துவிடலாம் என்று எண்ணி வந்தவன் மலைத்து போனான். அடுத்தது மாலாவின் முறை. மாலா எவர்சில்வர் பாத்திரக்கடையை முற்றுகையிட்டாள். எது வும் திருப்தியாக இல்லையோ என்னவோ, உதட்டை பிதுக்கியபடி வெளியே வந்த வள் புடவைக்கடையை பார்த்ததும் பிரகாச மானாள்.

‘‘ஐந்நூறு ரூபா புடவை எரநூத்து அம்பதுதான். அருமையான புடவைங்க. பாதிக்கு பாதி விலைதான். வாங்க, வந்து புடிச்சதை எடுத்துகிட்டு போங்க…’’

கடைவாசலில் நின்றிருந்தவன் இவளைப் பார்த்ததும் சற்று சத்தமாகவே குரல் கொடுத்தான்.

‘‘என்னங்க, அந்தப்புடவை நல்லா யிருக்குல்ல…’’

வாசலில் வரிசையாக தொங்கிக் கொண்டி ருந்த புடவையில் ஒன்றை காட்டினாள். சிவராமன் அவளை முறைத்தான்.

‘‘கையில நூத்தம்பதுக்குமேல ஒத்த பைசா இல்ல, தெரிஞ்சிக்க…’’

‘‘ஆமா. எப்பப்பார்த்தாலும் பஞ்சப் பாட்டு தான். நான் கேட்டு ஒரு ஹேர்பின்கூட நீங்க வாங்கி கொடுத்ததில்ல.’’

‘‘நான் வாங்கித்தராம பக்கத்து வீட்டுக்காரனா வாங்கித் தர்றான்.’’

சிவராமன் கோபத்தில் பற்களை கடித்தான். கிட்டதட்ட ஐந்து நிமிட விவாதத்துக்கு பிறகு மாலா ஜெயித்தாள்.

ரெங்கா கொடுத்த நூறு ரூபாயும் புடவைக்கடைக்காரன் கைக்கு போனது. ரெங்கா வந்து புத்தகத்தை கேட்டால் என்ன செய்வது என்று சிவராமனுக்கு யோசனையாக இருந்தது.

‘புத்தகம் கிடைக்கவில்லை என்று சொல்லிவிடலாம். ஆனால் அவன் கொடுத்த பணத்தை திருப்பி தந்தாக வேண்டுமே. பணத்திற்கு எங்கே போவது. ஒன்றாம் தேதி வர இன்னும் சில நாட்கள் உள்ளதே..’.

தவித்த சிவராமனுக்கு சட்டென்று அந்த ஐடியா வந்தது. அவசரமாய் போய் அலமாரியைத் திறந்தான். வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் நான்காவது வரிசையில் அலையோசை தென்பட்டது.

கடைசியாக சிவராமன் வாங்கிய புத்தகம் அது. சிவராமன் அதை மெல்ல எடுத்தான். வாங்கி சில வருடங்கள் ஆகியிருந்தபோதும் புத்தகம் புதுசு போல் பளிச்சென்றிருந்தது.

ரெங்காவுக்கு புத்தகத்தை பார்த்த தும் முகத்தில் தவுசண்ட் வாட் பிரகாசம்.

நன்றி சொல்லி வாங்கிகொண்டான்.

மறுநாள் அலுவலகம் முடிந்து வந்த வனை ரெங்கா வழிமறித்தான்.

‘‘என்ன ரெங்கா…?’’ என்ற சிவராமனுக்கு உள்ளூர பதைபதைப்பு. ரெங்கா அந்த பத்து ரூபாய்த்தாளை அவனிடம் நீட்டினான்.

‘‘புத்தகத்துல இந்த பத்து ரூபா இருந்துச்சு. நேத்து தவறுதலா வச்சிட்டீங்க போல.’’

‘‘பத்து ரூபாய்தானே. அதுக்காக கடை யை விட்டுட்டு வந்தியா….?’’ சிவராமன் சிரித்தபடி கேட்டான்.

‘‘பத்து ரூபாதானேன்னு ஈஸியா சொல்லாதீங்க சார். அஞ்சு பைசா காணாபோனாக்கூட என்னால தாங்கிக்க முடியாது. அதேமாதிரி அடுத்த வங்களோட பணம் ஒத்த பைசாவா இருந்தாலும் எங்கிட்ட இருந்தா எனக்கு தூக்கமே வராது’’என்றவன்,

‘‘அருமையான நாவல் சார். கீழே வைக்க மனசே வரலை. ஒரேநாள்ல முடிச்சிட்டேன். நூறு ரூபா கொடுத்தாலும் நல்ல மதிப்பு சார்…’’என்று கூறிவிட்டு கட்டையூன்றி நடந்து போனான்.

சிவராமன் கையிலிருந்த ரூபாயை வெறித்து பார்த்தான். மனம் ஊனப்பட்டு போயிருந்தது.

Categories: சிறுகதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

சிறுகதை

என் காதல் ரோசா

‘‘தானேத் தன்னான்னே ஏய்
தானேத் தன்னான்னே
நல்லா தடம் பாத்து
நடவு நடு
தானேத் தன்னான்னே
தை மாசம் அறுக்கனுமே
தானேத் தன்னான்னே
தாளம்போட்டு நடவு நடு
தானேத் தன்னான்னே
நல்லா தரை பாத்து
வெளயனுமே
தானேத் தன்னான்னே..!’’

என்று அழகாய் மெட்டெடுத்து,

 » Read more about: என் காதல் ரோசா  »

சிறுகதை

அந்த ஒரு நிலவு

அத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.

 » Read more about: அந்த ஒரு நிலவு  »

சிறுகதை

ரெட்டைக் கிணறு

அந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.

 » Read more about: ரெட்டைக் கிணறு  »